Published : 07 Jul 2016 09:08 AM
Last Updated : 07 Jul 2016 09:08 AM

எல்லோருக்குமான அரசு எனும் உணர்வை உருவாக்குங்கள்!

இராக் தலைநகர் பாக்தாத்தில், ஷியா முஸ்லிம்கள் வழிபடும் மசூதிக்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம், பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் அந்நாட்டின் பரிதாப நிலையை உணர்த்துகிறது. பாக்தாத்தின் முக்கிய வணிகப் பகுதியில் நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்னர்தான், அமெரிக்க விமானப் படை மற்றும் ஈரானின் ராணுவப் பயிற்சி பெற்ற ஷியா படைகளின் துணையுடன், ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஃபலூஜா நகரை இராக் படைகள் கைப்பற்றின. 2014 ஐஎஸ் கைப்பற்றிய நகரங்களில் ஃபலூஜாவும் ஒன்று. மோசூல் நகரை ‘காலிஃபேட்’டின் (இஸ்லாமிய தேசம்) ஒரு பகுதியாக ஐஎஸ் தலைவர் அபுபக்கர் பாக்தாதி அறிவித்திருந்தார்.

இராக் படைகள் எத்தனை ராணுவ நடவடிக்கைகளை எடுத்தாலும், பயங்கரவாதச் செயல்களிலிருந்து ஐஎஸ் பயங்கரவாதிகளைப் பின்வாங்கச் செய்ய முடியவில்லை என்பதையே, இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. மேலும், ஷியா பிரிவினரைக் குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள், இராக்கில் நிலவிவரும் இனக்குழு அடிப்படையிலான பிரிவினைவாதத்தை மேலும் தூண்டிவிட்டிருக்கிறது. ஷியா பிரிவினரைக் குறிவைத்தே பாக்தாத் குண்டுவெடிப்புச் சம்பவத்தை நிகழ்த்தியதாக இணையத்தில் வெளியிட்ட அறிக்கையில் ஐஎஸ் அமைப்பு குறிப்பிட்டிருக்கிறது. 2006-ல், அபு முஸாப் அல்-ஜர்காவி தலைமையிலான அல்-கொய்தா அமைப்பு, ஷியா பிரிவினர்மீது தொடர்ச்சியாக நடத்திய தாக்குதல்கள், ஷியா மற்றும் சன்னி பிரிவினருக்கு இடையிலான உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தன. இந்தக் குழப்பங்களைச் சாதகமாக்கிக்கொண்ட ஐஎஸ் அமைப்பு, மோசூல் நகரை 2014-ல் கைப்பற்றியது குறிப்பிடத் தக்கது. இராக் ராணுவத்தை அமெரிக்கா கலைத்துவிட்டதன் விளைவாக, சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் அரசுப் படைகளில் பணிபுரிந்த, அனுபவம் வாய்ந்த வீரர்கள் தற்போது ஐஎஸ் படைகளில் இணைந்து போரிட்டுவருகிறார்கள். அந்த அமைப்பு அசுர பலம் பெற்றதற்கு இதுவும் ஒரு காரணம்.

தொடர் போராட்டங்கள், சர்வதேச நாடுகளின் எச்சரிக்கைகளையும் தாண்டி, மக்களின் அடிப்படைப் பாதுகாப்பு விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க முடியாமல் தவிக்கிறது இராக் அரசு. பிற நாடுகளில் பயங்கரவாதச் சம்பவங்கள் எப்போதாவது ஒரு முறை நிகழ்ந்துவரும் நிலையில், இராக்கில் அது தொடர்கதையாகிவருகிறது. பயங்கரவாதத்தின் கோர நிழல் அந்நாட்டு மக்கள் மீது நிரந்தரமாகப் படிந்திருக்கிறது.

இராக்கில் நிலைமை இந்த அளவு மோசமடைந்திருப்பதற்கு அந்நாட்டின் அரசியல் தலைமையும் ஒரு காரணம். அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நூரி அல்-மாலிகி பிரிவினைவாத அடிப்படையில் செயல்படுகிறார் எனும் சந்தேகம் சன்னி முஸ்லிம்கள் மத்தியில் இருந்துவந்தது. அதேபோல், போர் நெருக்கடியைக் கையாள்வதில் தற்போதைய பிரதமர் ஹைதர் அல்-அபாதிக்குப் போதிய திறன் இல்லை என்றும் விமர்சிக்கப்படுகிறது. உறுதியளித்திருந்த சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் காத்திரமான நடவடிக்கை எதையும் அவரால் எடுக்க முடியாத நிலையில், இராக் நகரங்களில் உருவாகியிருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகளை ஜிகாதி பயங்கரவாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இப்படியான ஒரு சூழலில், இராக்கில் உறுதியான, அனைத்துப் பிரிவினரையும் அரவணைக்கின்ற நிர்வாகம் அவசியம். இது கடினமான சவால். ஆனாலும், இதுபற்றிச் சாவகாசமாக முடிவெடுக்கும் அளவுக்குப் போதிய அவகாசமோ தனிப்பட்ட விருப்பங்களோ இராக்குக்கு இல்லை என்பதை அந்நாட்டு அரசு உணர வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x