Published : 13 Jun 2016 09:03 AM
Last Updated : 13 Jun 2016 09:03 AM
நிலத்தடி நீரை வீணடிக்காமல் நிர்வகிக்க, நீராதாரங்களைக் கட்டுக்குள் வைக்க, நீர்வளத்தைப் பெருக்க, இப்போதுள்ள நீராதாரங்கள் கெடாமலும் குறையாமலும் காக்க மாதிரி வரைவுச் சட்டம் ஒன்றை மத்திய அரசு உருவாக்கி, மக்களின் பார்வைக்கும் ஆலோசனைக்கும் வைத்திருக்கிறது.
தென்மேற்குப் பருவமழை கேரளக் கரையைத் தொட்டிருக்கலாம், நாட்டின் பல மாநிலங்கள் இன்னமும் தண்ணீர் பற்றாக்குறையால் தவித்துவருகின்றன. அதற்குக் காரணம், நிலத்தடி நீரை வரம்பில்லாமல் உறிஞ்சிப் பயன்படுத்தியதுதான்.
அவசரத் தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டிய நிலத்தடி நீர்தான், நம்முடைய பாசனத் தேவையில் 65%-ஐ பூர்த்திசெய்கிறது; கிராமப் பகுதிகளிலும் நகர்ப்புறங்களிலும் குடிநீர்த் தேவையில் 80%-ஐ பூர்த்திசெய்கிறது. நிலத்தில் ஓடும் நீர், நிலத்தடி நீர் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கொள்கையும் நிர்வாகக் கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டும்.
விவசாயத்துக்குத் தரும் இலவச மின்சாரமானது நீர்வளம் மிகக் குறை வாக இருக்கும் மாநிலங்களில்கூட கரும்பு, நெல், கோதுமைச் சாகுபடியைத் தொடர்ந்து மேற்கொள்ள விவசாயிகளைத் தூண்டி வந்துள்ளது. குறைந்தபட்சக் கொள்முதல் விலை என்ற ஆதார விலைக் கொள்கையும் தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களுக்குச் சாதகமாகவே வகுக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் சாகுபடி என்றாலே நெல், கோதுமை, கரும்பு என்றுதான் தேர்வு செய்தார்கள். புன்செய் பயிர்களும் எண்ணெய் வித்துக்களும் இதர பயிர்களும் முக்கியத்துவம் பெறாமல் போயின. பாசன வாய்க்கால்கள், தடுப்பணைகள், நீர்த்தேக்கங்கள் போன்றவற்றுக்கு அரசுகள் அதிகம் செலவிடாததால், நதிநீர் வளம் அதிகம் உள்ள மாநிலங்களில்கூட விவசாயத்துக்கு நீர் கொண்டுசெல்லப்படாததால், நிலத்தடி நீரை முடிந்த மட்டும் உறிஞ்சியெடுத்துச் சாகுபடி செய்வது வழக்கமாகிவிட்டது.
இப்போதுதான் ‘தண்ணீரைப் பயன்படுத்துவோர் சங்கம்’ போன்ற அமைப்புகள் நிலத்தடி நீர் பெருகுவதற்கு உற்ற வழிகளான மழை நீர் சேகரிப்பு, தடுப்பணைகள் மூலம் நீர்த்தேக்கங்கள் அமைப்பு, வாய்க்கால்கள் மூலம் உபரி நீரைப் பற்றாக்குறை இடங்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்றன.
நீர்வள நிர்வாகம் தொடர்பாக உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று வரைவு சட்ட வாசகம் கூறுகிறது. ஏற்கெனவே உள்ள ஏற்பாடு மாற்றப்படுமா, புதிய நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டுமா என்பதை இது தெளிவாக்கவில்லை. மத்திய நிலத்தடி நீர் ஆணையம் என்ற அமைப்பு, உள்ளாட்சி மன்றங்களின் ஆலோசனையைப் பெறாமலேயே, நிலத்தடி நீரைப் பயன்படுத்துவோருக்குத் தடையில்லாச் சான்றுகளை வழங்கிக்கொண்டிருக்கிறது. இந்த ஏற்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். நிலம் ஒருவருக்குச் சொந்தமாக இருந்தாலும் அந்த நிலத்தடியில் உள்ள நீரைப் பொது பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவது தொடர் பான இப்போதைய சட்டம் காலத்துக்குப் பொருந்தாதது. இந்நிலையில், நிலத்தடி நீர் நிர்வாகச் சட்டம் இதை எந்த அளவுக்குப் பொதுப் பயன்பாட் டுக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
நிலத்தடி நீர் பயன்பாட்டைப் பொறுத்தவரையில் கிராமங்களில் உள்ள பயனாளிகள் அமைப்பு முறையாகச் செயல்பட்டுவருவதாகக் கருத இடம் உண்டு. நகர்ப்புறங்களில் தொழிலகங்களும் வீடுகளும் தண்ணீரை வீணாக்காமலும் மாசுபடுத்தாமலும் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். பயன்படும் தண்ணீரை அளக்க மீட்டர்களைப் பொருத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
நீர் நிர்வாகம் என்பது ஒற்றை அம்சத்தை மட்டுமே கொண்ட கொள்கையாக இருக்க முடியாது. கிராமப்புறம், நகர்ப்புறம் இரண்டிலுமே தண்ணீர் வளத்தைப் பெருக்குவதற்கும் சிக்கனமாகச் செலவழிப்பதற்கும் தூய்மை கெடாமல் காப்பதற்கும் சமநோக்குள்ள கொள்கையாக இருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT