Published : 19 Apr 2017 08:42 AM
Last Updated : 19 Apr 2017 08:42 AM

மக்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதை அதிமுகவினர் உணர்கிறார்களா?

முதல்வராக இருந்த ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் தொடங்கி, தமிழகத்தின் ஆளும் கட்சியைத் தொற்றிக்கொண்டிருக்கும் பரபரப்புச் சூழலுக்கு எப்போது அக்கட்சியினர் முடிவுகொடுப்பார்கள், மாநிலப் பிரச்சினைகளில் எப்போது முழு அளவில் கவனம் செலுத்த ஆரம்பிப்பார்கள் என்பது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கவலையாக உருவெடுத்திருக்கிறது.

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, கட்சித் தலைமை சசிகலாவின் கையிலும் ஆட்சித் தலைமை பன்னீர்செல்வம் தலைமையிலும் இருந்த ஒரு சின்ன இடைவெளியில், கொஞ்சம் சுறுசுறுப்பாக இயங்கியது அரசு நிர்வாகம். அதன் பிறகு விரிசல் விழுந்தது. முதல்வர் பதவியிலிருந்து விலகிய பன்னீர்செல்வம் தலைமையில் புதிதாக ஒரு அணி உருவானது. இடையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சசிகலா சிறை செல்ல நேர்ந்தபோது, அவருடைய உறவினர் தினகரன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆனார். பழனிசாமி முதல்வரானார். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிட்டன. பிளவின் விளைவாகக் கட்சியின் சின்னம் முடக்கப்பட்டது.

ஆளும்கட்சியினர் வாக்காளர்களுக்குப் பணம் வழங்க முற்பட்ட குற்றச்சாட்டின்பேரில் தேர்தலையே தள்ளிவைத்தது தேர்தல் ஆணையம். இந்நிலையில், இடைத் தேர்தலில் எதிரெதிராகக் களம் கண்ட அதிமுகவின் இரண்டு அணிகளையும் ஒன்று சேர்ப்பதற்கு இப்போது முயற்சிகள் தொடங்கியிருக்கின்றன. இந்த நகர்வுகள் தொடர்பிலான ஒவ்வொரு நிகழ்வும் ஆளும் கட்சியை மட்டும் அல்லாமல், தமிழகப் பொதுவெளியின் பிரதான கவனத்தை முழுமையாக ஆக்கிரமித்திருப்பதால், மாநிலத்தின் பிரச்சினைகள் கவனிப்பாரின்றிக் கிடக்கின்றன.

கடுமையான வறட்சி, குடிநீர்ப் பற்றாக்குறை, விவசாயத்தின் பேரழிவு, கடன்சுமை அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான பாடநூல்கள் தமிழ் மொழியில் கிடைக்காததால் மாணவர்கள் எதிர்கொள்ளும் அவதி என்று ஒவ்வொரு தரப்பும் வெவ்வேறு பிரச்சினைகளில் சிக்கியிருக்கிறார்கள். போதாக்குறைக்கு மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் தொடர் செயல்பாடுகளால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகிறார்கள் மக்கள். இப்படிப்பட்ட சூழலில், மாநிலங்களின் தேசியக் குரலாக ஒலிக்க வேண்டிய தமிழகத்தின் அரசு தன் உள்கட்சி சண்டையில் தானும் சிக்கி மக்களையும் சிக்கவைத்து வதைப்பது கொடுமை.

அதிமுகவினருக்கு ஒரு விஷயம் புரிகிறதா என்று தெரியவில்லை. மக்களிடம் நம்பிக்கை இருக்கும் வரைதான் எவ்வளவு பெரிய கட்சிக்கும் மதிப்பு. மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டால், எவ்வளவு பேர் அணி சேர்ந்தாலும் அதற்கு எந்தப் பொருளும் இருக்கப்போவதில்லை. இன்றைக்கு மக்கள் மத்தியில் அதிமுக அரசு மீது கடும் அதிருப்தி உருவாகியிருக்கிறது. மறுபுறம் அதன் எதிர் அணியினரின் செயல்பாடுகளும் மெச்சத்தக்கதாக இல்லை. இரு தரப்புகளுமே அவரவர் நலன் சார்ந்து மட்டுமே செயல்படுவதன் வாயிலாகப் போட்டி போட்டுக்கொண்டு, அதிமுக எனும் பெயருக்கு அதிருப்தியையே சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர். இது நியாயமும் அல்ல; நல்லதும் அல்ல!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x