Published : 03 Mar 2017 09:21 AM
Last Updated : 03 Mar 2017 09:21 AM

மக்களின் கேள்விகளுக்குப் பதில் அளியுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்’ என்று கோரி, விவசாயிகளும் பொதுமக்களும் இணைந்து நடத்திவரும் போராட்டம், தமிழகத்தில் உருவாகிவரும் ஒரு புதிய போக்குக்கான தொடர் அத்தியாயமாகியிருக்கிறது. காவிரி, முல்லைப் பெரியாறு, பவானி உட்பட பல ஜீவாதாரப் பிரச்சினைகளை அந்தந்த வட்டார மக்களின் பிரச்சினை என்று கடந்து செல்லும் மனநிலையிலிருந்து விலகி, மாநிலத்தின் எந்தப் பகுதியில் ஒரு பிரச்சினை நடந்தாலும், அது ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சினை என்று கருதும் நிலையை நோக்கித் தமிழகம் நகர்கிறது.

மக்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளுக்கான போராட்டங்களைக்கூட வெறும் அடையாளப் போராட்டங்களாக அரசியல் கட்சிகள் மாற்றிவிட்டிருந்த நிலையில், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டவையாக உருவெடுக்கும் இந்தப் போராட்டங்களைக் குடிமைச் சமூகத்தின் எழுச்சியாகவே கருத வேண்டியிருக்கிறது. முன்னதாக, ‘ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட வேண்டும்’ என்று களத்தில் உட்கார்ந்து, அதில் வெற்றியையும் சாதித்துவிட்ட அனுபவம் இனிவரும் காலத்தில் இது ஒரு போக்காக உருவெடுக்கும் சாத்தியங்களையும் கூறுகிறது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் நெடுவாசல் நோக்கிக் குவியும் சூழலின் தொடர்ச்சியாகத் தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் எதிர்வினையாற்றி இருக்கிறது. முன்னதாக, பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, “இத்திட்டத்தைக் கைவிட வேண்டும்” என்று கோரிய முதல்வர், தொடர்ந்து, “இத்திட்டத்தைத் தமிழக அரசு எதிர்க்கும்” என்று கோரியிருக்கிறார்.

இந்த விஷயத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை நாம் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது. மக்கள் எதன் நிமித்தம் அங்கு போராடுகிறார்கள் என்றால், அவர்களுக்கு எழுந்திருக்கும் சந்தேகங்கள், அச்சங்கள் தொடர்பில் போராடுகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டமானது பெருமளவில் வானம் பார்த்த நிலம். ஆழ்துளைக் கிணறுகள் வாயிலாகவே அங்கு விவசாயம் நடக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் ஏற்கெனவே கீழே வீழ்ந்திருக்கும் சூழலில், பல்லாயிரக்கணக்கான அடிகள் ஆழத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து எரிபொருள் எடுக்கும் திட்டம் நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும்; விவசாயத்தையும் தங்கள் வாழ்வாதாரத்தையும் நாசமாக்கிவிடும் என்பது மக்களின் அச்சம்.

இந்தத் திட்டம் தொடர்பில் எந்த விளக்கமும் யாரும் அளிக்கவில்லை என்பது அவர்கள் குற்றச்சாட்டு. இதற்கான தமிழக அரசின் பதில் என்ன? “காவிரிப் படுகை மாவட்டங்களில் முன்னதாக மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகளின் தொடர்ச்சியே இது. இத்திட்டத்தால் நீராதாரப் பாதிப்பு ஏற்படாது; ஐந்நூறுக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றெல்லாம் மத்திய அரசின் திட்ட அதிகாரிகள் தரப்பில் அறிக்கைகள் வெளிவருகின்றனவே தவிர, மாநில அரசின் தரப்பில் ஏன் விரிவாக யாரும் பேச மறுக்கிறார்கள்?

ஒரு சட்டம்/திட்டம் மக்களுக்கு நன்மையைத் தரும் என்றால், மக்களிடத்தில் அதை விளக்கிச் சொல்லி நிறைவேற்ற வேண்டியதும் அரசின் கடமை. அதுவே, பாதகமான விளைவுகளை உண்டாக்கும் என்றால், மக்களுக்கு முன்பாக தாமாகவே அதை எதிர்ப்பதும் அரசின் கடமை!

ஒரு திட்டத்தை அல்லது சட்டத்தை மத்திய அரசு கொண்டுவருகிறது; அதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தால், தானும் எதிர்ப்புத் தெரிவிப்பது அல்லது அமைதியாக அப்படியே ஏற்றுக்கொண்டுவிடுவது என்பது என்ன மாதிரியான அணுகுமுறை?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x