Published : 04 Jun 2016 09:35 AM
Last Updated : 04 Jun 2016 09:35 AM

முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு!

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரின் குல்பர்க் குடியிருப்போர் சங்க வளாகத்தில் 2002-ல் நடந்த கலவரம் தொடர்பாக குஜராத் சிறப்பு நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு நீதியின் மீதான நம்பிக்கையை ஓரளவுக்கு உறுதிசெய்திருக்கிறது. கோத்ரா எரிப்புச் சம்பவத்துக்குப் பின்னர் நிகழ்ந்த இந்தக் கலவரத்தில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஷான் ஜாஃப்ரி உள்பட 69 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட 24 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது நீதிமன்றம். 11 பேர் கொலை செய்ததற்காக தண்டனை பெற்றுள்ளனர். 36 பேர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். முழு அளவுக்கு இல்லையென்றாலும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இது. குஜராத் கலவரம் தொடர்பாக நரேந்திர மோடி தலைமையிலான அம்மாநில அரசு மேற்கொண்ட விசாரணையும் எடுத்த நடவடிக்கைகளும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இல்லாததால் உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு இவை கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றமே தனது மேற்பார்வையில் விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.

பெஸ்ட் பேக்கரி, பில்கிஸ் பானு சம்பவங்களில் ஈடுபட்டவர்களும் குஜராத் மாநிலத்துக்கு வெளியில் நடந்த வழக்கு விசாரணைகளால்தான் தண்டனை பெற்றனர். சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையை மேற்கொண்ட பிறகுதான் பல சம்பவங்களில் தொடர்புள்ளவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். நரோடா பட்டியா என்ற இடத்தில் நடந்த படுகொலையில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது தொடர்பாக வரலாற்றில் இடம் பெறக்கூடிய தீர்ப்பு வழங்கப்பட்டது. குஜராத்தின் முன்னாள் அமைச்சரும் ஒரு பஜ்ரங் தளத் தலைவரும் அடையாளம் காணப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சர்தார்புரா என்ற இடத்தில் நடந்த கலவரத்தில் 33 பேர் கொல்லப்பட்டனர். அது தொடர்பாகக் கைதானவர்களில் 31 பேர் தண்டனை பெற்றனர், 42 பேர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டனர்.

முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரம் செய்வோரைத் தடுக்க வேண்டாம் என்று அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி அறிவுறுத் தியதால் அவருடைய அரசையும் குற்ற வழக்கில் சேர்க்க வேண்டும் என்று குல்பர்க் சம்பவம் தொடர்பாக ஈஷான் ஜாஃப்ரியின் மனைவி மனு தாக்கல் செய்திருந்தார். போதிய ஆதாரங்கள் இல்லை என்று வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களில் ஒரு காவல் துறை ஆய்வாளரும், பாஜகவைச் சேர்ந்த ஒரு உள்ளாட்சிப் பிரதிநிதியும் அடக்கம்.

இந்த வழக்கைப்் பொறுத்தவரை, வகுப்புவாத வன்முறைக்குப்பின்னால் ஏதேனும் சதிச் செயல் இருந்ததா என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பதற்கு அரசுத்தரப்புக்கு இயலாமல் போய்விட்டது. சதி நடந்ததாகக் கூறப்பட்டதை போதுமான ஆதாரங்கள் இல்லாத சூழலில் நீதிமன்றம் ஏற்கவில்லை. குற்றம் நடப்பதற்கு முன்னால் சதித்திட்டம் தீட்டப்பட்டது என்ற கோணம் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை என்பதாலேயே குஜராத் கலவரங்கள் என்பவை தன்னெழுச்சியாக ஒரு தரப்பு மக்களிடையே உருவான எதிர்வினை என்று கருதிவிட முடியாது. அப்படியெல்லாம் நிரூபிப்பது எளிதல்ல. மக்களிடையே தன்னெழுச்சியாக எழுந்த உணர்வா, தூண்டிவிடப்பட்டதா என்று வேறுபடுத்திப் பார்ப்பது இயலாது. இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளி வெறும் நூலிழைதான்.

அதிகாரவர்க்கம் செயல்படத் தவறியதா, வேண்டுமென்றே வேடிக்கை பார்த்ததா என்பதை அறிவதும் எளிதான செயல் அல்ல. இந்நிலையில், குஜராத் சிறப்பு நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, கலவரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கு ஓரளவு ஆறுதலைத் தந்திருக்கும். நீதி கண்காணிக்கிறது என்ற உணர்வை அனைவருக்கும் தரும் வகையில் வலுவான தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x