Published : 21 Jul 2016 09:01 AM
Last Updated : 21 Jul 2016 09:01 AM
மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்துவதற்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் வகையில், மத்திய அரசு கொண்டுவந்த அவசரச் சட்டத்துக்குத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்திருப்பது மாணவர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் நிம்மதி அளித்திருக்கிறது. மத்திய அரசின் அவசரச் சட்டத்தால் உச்ச நீதிமன்றம் அதிருப்தியடைந்திருந்தாலும், அதற்குத் தடை விதித்தால் மேலும் குழப்பங்கள் ஏற்படும் என்று கூறி இந்த முடிவை எடுத்திருப்பது வரவேற்கத் தக்கது.
ஜூலை 24-ல் நடக்கவிருக்கும் நுழைவுத் தேர்வுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் தயாராகிவரும் நிலையில், அவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்பவில்லை. அதே சமயம், மத்திய அரசின் அவசரச் சட்டத்தை விமர்சித்திருக்கும் நீதிமன்றம், இச்சட்டம் செல்லுமா என்பது சந்தேகத்துக்குரியது என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
உண்மையில், இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக மத்திய அரசைக் குறைசொல்ல முடியாது. மாநில அரசுகள், மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்கும் விஷயத்தில் குறுகிய அவகாசத்தில், அவசர அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை யைத் தவிர்க்கவே இம்முடிவுக்கு அரசு வந்தது. இத்தேர்வை நடத்துவதைத் தடைசெய்து 2013-ல் உத்தரவிட்டிருந்த உச்ச நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றது குறிப்பிடத் தக்கது.
மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் நடத்திவரும் மருத்துவக் கல்லூரிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பொது நுழைவுத் தேர்வு அல்லது தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நடப்புக் கல்வியாண்டிலேயே நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரி நிறுவனங்களுக்கும் அதிர்ச்சியளித்தது. இக்கட்டான இந்தச் சூழலில், மத்திய அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தால், மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை தொடங்குவதில் இருந்த பிரச்சினை களையப்பட்டது.
இப்படியான சூழலில், தேசிய அளவிலான பொதுத் தேர்வு அவசியம்தானா? அப்படியே இருந்தாலும் அரசு, தனியார், அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்கள் என்று அனைத்தையும் இந்தத் தேர்வின் கீழ் கொண்டுவர வேண்டுமா எனும் கேள்விகள் எழுந்திருக்கின்றன. மாணவர் சேர்க்கை வெளிப்படையானதாக, நியாயமானதாக நடப்பதற்கும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுப்பதற்கும் இந்த தேர்வு சரியான தீர்வாக இருக்கலாம்.
இடஒதுக்கீட்டின் அடிப்படையிலோ அல்லது வேறு கொள்கைகளின் அடிப்படையிலோ தகுதியான மாணவர்களை அரசு மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் தேர்வுசெய்ய இது போன்ற தேசிய அளவிலான பொதுத் தேர்வுகள் வழிவகுக்கலாம். எனினும், இப்பிரச்சினையின் மற்றொரு பக்கத்தையும் நீதிமன்றங்கள் கணக்கில்கொள்ள வேண்டும். மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், வெவ்வேறு மொழி பேசும் மாநிலங்கள், வெவ்வேறு வகையான பொருளாதாரப் பின்னணிகளிலிருந்து வருகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவான எந்த ஒரு விஷயத்தைக் கொண்டுவந்தாலும், அது நடைமுறைச் சாத்தியம் உள்ளதாக இருக்க வேண்டும்.
எனவே, அடுத்த கல்வியாண்டுக்கு முன்பாகவே, இது தொடர்பான தெளிவான, இறுதியான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும். அப்படி வழங்கப்படும் தீர்ப்பு, மாநில நலன்களையும், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் உரிமைகளையும் பாதிக்காத வண்ணம் அமைய வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT