Published : 14 Sep 2016 09:16 AM
Last Updated : 14 Sep 2016 09:16 AM

வாடகைத் தாய் மசோதாவில் குழப்பங்களை நீக்குக!

மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்த ‘வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா’பெரிய விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வாடகைத் தாய் முறைக்கு இந்தியப் பெண்களையே பெரிதும் நாடினர். பணத்துக்காக அவர்களுடைய கருவைச் சுமந்து பெற்றுத் தரும் இந்திய வாடகைத் தாய்களுக்கு உரிய வகையில் பணம் அளிக்காமல் இடைத்தரகர்கள் புகுந்து ஏமாற்றிய கதைகள் அநேகம் உண்டு. எனவேதான், இதை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.

அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ‘வாடகைத் தாய் (ஒழுங்காற்று) மசோதா-2016’ இதன் தொடர்ச்சியாகவே கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால், பிரச்சினைகளை ஏற்படுத்தவல்ல சில அம்சங்களையும் அது தன்னகத்தே கொண்டிருக்கிறது. வணிகரீதியாக, அதாவது வெறும் பணத்துக்காக மட்டுமே அடுத்தவர் கருவைச் சுமந்து பிள்ளை பெற்றுத் தருவதைத் தடைசெய்கிறது இந்த மசோதா. அதேசமயம், சுயநலம் ஏதுமில்லாமல், குழந்தை வேண்டும் என்று ஏங்கும் தம்பதியருக்காகக் கருவைச் சுமக்க அனுமதிக்கலாம் என்கிறது.

இந்திய வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற நினைக்கும் கணவன் - மனைவி இருவரும் இந்தியர்களாக இருக்க வேண்டும், திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தைப் பேறு இல்லாதவர்களாக இருக்க வேண்டும், பணத்துக்காகக் குழந்தை பெற்றுத்தரக் கூடாது. குழந்தை இல்லாத இணையருக்கு நெருக்கமான உறவினரான பெண் மட்டுமே வாடகைத் தாயாக இருக்க முடியும். வெளிநாட்டவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள், திருமணம் ஆகாத இணையர், வாழ்க்கைத் துணை இல்லாத தனி ஆண் அல்லது பெண் ஆகியோர் இப்படிக் குழந்தை பெற அனுமதி இல்லை. இந்த நிபந்தனை பாரபட்சமாகவும் இந்திய இணையருக்குச் சமமாக வெளிநாட்டவர் கருதப்படாத தன்மையையும் உணர்த்துகிறது.

வணிக நோக்கத்தில் வாடகைத் தாயாக மாறுவதைத் தடுக்க முடியவில்லை என்பதற்காக, வணிக நோக்கில் பிள்ளை பெற்றுத்தரக் கூடாது என்று தடுக்க அரசு முயல்கிறது. இது நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொள்ளவில்லை.

வாடகைத் தாயாகச் செயல்படுவது 2002 முதலே சட்டபூர்வமானதாக ஆக்கப்பட்டுவிட்டது. பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்குக் குழந்தை பெற்றுத்தரும் ‘மருத்துவ வணிகச் சந்தை’ எந்தக் கட்டுப்பாட்டுக்கும் எளிதில் உட்படாமல் இருந்தது. வாடகைத் தாயாகச் செயல்படும் பெண்ணின் உரிமைகள், அவரது உடல் நலன் சார்ந்த அக்கறை போன்றவை அதிகம் மதிக்கப்படாமலே இருந்தது. வாடகைத் தாய்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் அந்தத் தாய்க்கும் என்ன உறவு, அந்தக் குழந்தையிடம் தாய்க்கு என்ன உரிமை என்பதெல்லாம் வரையறுக்கப்படவில்லை. இப்படியான சூழலில்தான் இதை ஒழுங்குபடுத்தியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், புதிய மசோதா பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது. கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைச் சொல்வது பெரிய தீமை என்றால், மற்றவர்களுக்காகக் கருவைச் சுமப்பதும் தீமைதானா என்ற கேள்வி எழுகிறது. அப்படியென்றால், இதைத் தடை செய்யாமல் ஏன் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற கேள்வியும் பிறக்கிறது. கருவைச் சுமப்பவர் உறவினராக இருந்தாலோ, பணம் வாங்கிக்கொள்ளாமல் பெற்றுக் கொடுத்தாலோ மட்டும் இது எப்படி ஏற்கத்தக்கதாகிவிடும்? பணம் வாங்காமல், அதே சமயம் குடும்பத்தவர்களின் நெருக்குதல் காரணமாக, தனக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கருவைச் சுமக்க நேர்ந்தால் அதை எப்படி அணுகுவது? இந்த மசோதா நிறைவேறினாலும்கூட இந்தக் கேள்விகள் விடைக்காகக் காத்திருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x