Published : 08 Jun 2016 08:41 AM
Last Updated : 08 Jun 2016 08:41 AM
உத்தரப் பிரதேசத்தின் மதுரா நகரில் ‘ஸ்வாதின் பாரத்’ என்ற ரகசிய அமைப்பினர் ஆக்கிரமித்திருந்திருந்த இடத்திலிருந்து அவர்களை அகற்றக் காவல் துறை முயன்றபோது ஏற்பட்ட மோதல் பெரும் ரத்தக் களரியில் முடிந்திருக்கிறது. இச்சம்பவத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் உள்பட 27 பேர் இறந்துள்ளனர். ஜவாஹர் பாக் என்ற இடத்தில் சுமார் 200 ஏக்கரை 2014 ஏப்ரல் முதல் இந்த அமைப்பினர் ஆக்கிரமித்திருந்தனர். ஆனால் இதை மாநில அரசும் காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருந்தது வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்திலிருந்து மதுராவுக்கு 2014-ல் வந்த இவர்கள் சில நாட்களுக்கு மட்டும் அங்கு தங்க அனுமதி கேட்டனர். ஆனால் அவர்கள் அதன் பிறகு மாதக் கணக்கில் அல்ல, ஆண்டுக் கணக்கில் அங்கேயே தங்கிவிட்டனர். மதுராவாசிகளையே தங்கள் பகுதிக்குள் வரவிடாமல் விரட்டினர். ஆனால் மாநிலக் காவல் துறைக்கு அது முழுதாகத் தெரியவில்லை. ஆட்சியாளர்களும் அக்கறை காட்டவில்லை. அவ்வளவு பேர் அங்கு திரண்டிருப்பது ஏன், அவர்கள் அங்கே என்ன செய்கிறார்கள், அவர்களிடம் இருப்பவை என்ன என்று மாநில உளவுத் துறைப் போலீஸார் தகவல் திரட்டாமல் இருந்ததன் விளைவை அந்த மாநிலம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு அஞ்சலி செலுத்தும் அமைப்பாக (போஸ் சேனா) தங்களைக் காட்டிக்கொண்ட இந்த அமைப்பினர் குடியரசுத் தலைவர், பிரதமர் பதவிக்கு நடந்த தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும் என்றெல்லாம் வினோதமான கோரிக்கைகளை வைத்துள்ளனர். இவர்களைப் பற்றி ஆரம்பத்திலேயே துப்பு துலக்காமல் விட்டது காவல் துறை செய்த மிகப்பெரிய குற்றம்.
ஆக்கிரமிப்புப் பகுதியிலிருந்து இவர்களை விரட்டுவதற்காகப் பொதுப்பூங்காவின் ஒரு நுழைவு வாயில் வழியாக ஒரு புல்டோசருடன் நிராயுதபாணிகளாக 200 காவலர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். முகாமில் இருந்த சுமார் 3,000 பேர் காவலர்கள் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். சமையல் எரிவாயு உருளைகளைத் திறந்துவிட்டுத் தீ வைத்து மிகப்பெரிய நாசத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். இப்படி ஒரு தாக்குதலைக் காவல் துறையினர் எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த அமைப்பினர் தங்களுக்குள்ளேயே நீதி அமைப்பு, சிறை, அரசியல் சட்டம் என்று தனி ராஜ்ஜியமே நடத்தியிருக்கிறார்கள். சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் கூட ஆயுதப் பயிற்சி அளித்திருக்கிறார்கள்.
அந்தப் பூங்கா பகுதியில் ஆக்கிரமித்தவர்களை மாநில நிர்வாகம் வெளியேற்ற வேண்டும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது முதலே முகாமுக்குள் இருந்தவர்கள் ஆத்திரமடைந்திருக்கிறார்கள். பொது இடத்தை ஆக்கிரமித்தபோதே அகற்றத் தவறிய மாவட்ட, மாநில நிர்வாகம், அதன் பிறகும் அவர்களுடைய நடவடிக்கைகளைக் கவனிக்காமலும் தடுக்காமலும் விட்டு அடுத்தடுத்துப் பல தவறுகளைச் செய்துள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் முறையாகத் திட்டமிடாமல் மேற்கொண்ட நடவடிக்கையால் மிகப் பெரிய அளவுக்கு உயிர்ச் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இதை வெறும் கவனக்குறைவு என்ற வார்த்தையால் மறைத்துவிட முடியாது.
மாநில அரசில் செல்வாக்குடன் திகழும் சிலரின் ஆதரவில்லாமல் இப்படி ஒரு ஆக்கிரமிப்பு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே இது குறித்து நேர்மையான விசாரணை அவசியம். இம்மாதிரி அமைப்புகளை ஆரம்ப நிலையிலேயே அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்; உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு மட்டுமல்ல, பிற மாநிலங்களுக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் தரும் எச்சரிக்கைப் பாடம் இதுதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT