Published : 28 Jul 2016 10:24 AM
Last Updated : 28 Jul 2016 10:24 AM
உடலில் தேவையற்ற கொழுப்பைக் கூட்டும் தின்பண்டங்க ளுக்கும் நொறுக்குத் தீனிகளுக்கும் 14.5% வரி என்பது முழுமை பெறாத ஒரு முடிவு என்றாலும், நல்லதொரு தொடக்கம்.
இந்தியாவில் பஞ்சாபுக்கு அடுத்தபடியாக உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் நிரம்பிய மாநிலம் கேரளம். 2005-06-ல் எடுக்கப்பட்ட தேசியக் கணக்கெடுப்பில், கேரளத்தில் ஆண்களில் 18%, பெண்களில் 28% உடல் பருமனானவர்கள் என்று தெரியவந்தது. பர்கர், பீஸா, டவ்நட், சாண்ட்விச் போன்ற தின்பண்டங்களை உண்பதால் உடலில் கரையாக் கொழுப்புகள் சேர்ந்து உடல் பருமனாகிவிடுகிறது என்பதால், அவற்றின் மீதான கூடுதல் வரிவிதிப்புக்கு இந்த முடிவு வித்திடும். கேரள அரசு வரி விதிக்க உத்தேசித்துள்ள பண்டங்கள் தவிர, பாரம்பரியமாக கேரளத்திலேயே தயாரிக்கப்படும் பல தின்பண்டங்களுக்கும் உடல் கொழுப்பைக் கூட்டும் குணம் உண்டு. எனவே, நொறுக்குத் தீனி மீதான தடை என்பது, பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் தின்பண்டங்களுக்கு மட்டுமானதாக இல்லாமல், உள்ளூர் தின்பண்டங்கள் மீதும் அரசின் கவனம் செல்ல வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருப்பதைக் கேரள அரசு கவனிக்க வேண்டும்.
இதனிடையே இந்த வரிவிதிப்புக்கு எதிராகவும் குரல்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. “உலகின் பல்வேறு பகுதிகளிலும் அரசாங்கம் முயன்று தோற்ற ஒரு முயற்சி இது. புகையிலை மீதும் மது மீதும் அரசு விதிக்கும் கூடுதல் வரி காரணமாக அவற்றை உட்கொள்பவர்கள் யாரும் தவிர்ப்பது இல்லை. ஒரு பொருள் வேண்டும் என்று மக்கள் கருதிவிட்டால், அதை வரிவிதிப்பதன் மூலம் நுகராமல் தடுத்துவிட முடியாது. இதையெல்லாம்விட முக்கியம், மக்களுடைய சாப்பாட்டு உரிமையில்கூட எதையாவது சாக்கு வைத்து அரசுகள் தலையிடுவதா?” என்றெல்லாம் குரல்கள் கேட்கின்றன.
உண்மைதான். இப்படி வரி விதிக்கும் முதல் பிரதேசம் கேரளம் அல்ல. அமெரிக்கா, டென்மார்க், ஹங்கேரி போன்ற நாடுகளிலும் இதை முயற்சிசெய்து பார்த்திருக்கின்றனர். பெரிய அளவிலான விளைவுகள் எதுவும் உடனடியாகத் தெரியவில்லை. இந்த வரிவிதிப்பால், அரசுக்குப் பெரிய அளவில் வரி வருமானமும் கூடிவிடாது என்பதும்கூட உண்மைதான். ஆனால், இப்படியான தடை விதிப்புகளின் பிரதான நோக்கம், வரிவிதிப்பின் மூலமாகப் பெறப்படும் வருமானமோ, உடனடியாக மக்கள் அவற்றைத் தவிர்த்து, தங்கள் உணவுக் கலாச்சாரத்தையே மாற்றிக்கொண்டுவிடுவார்கள் எனும் எதிர்பார்ப்போ அல்ல. இது, ஒரு அரசாங்கம் தன்னுடைய மக்களின் உடல் நலன் மீது காட்டும் அக்கறைக்கான குறியீடுகளில் ஒன்று. முக்கியமாக, நொறுக்குத் தீனி உடலுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது எனும் பிரக்ஞையை மக்களிடத்தில் உருவாக்கும் முயற்சி.
புகை, மதுப் பழக்கத்துக்கு ஆட்பட்டவர்கள் எவ்வளவு விலை உயர்த்தப்பட்டாலும் அப்பொருட்களைக் கைவிடுவதில்லை என்பது ஓரளவுக்கு உண்மை என்றாலும், இந்தியா போன்ற ஒரு நாட்டில் அதீதப் பயன்பாட்டை நிச்சயமாக அது குறைக்கவே செய்கிறது. மேலும், பயன்பாட்டின்போது ஏதோ ஒரு வகையில் குற்றவுணர்வையும் ஏற்படுத்துகிறது. ஆக, இது போன்ற முயற்சிகளை ஒரே விதமான பார்வை கொண்டு மட்டும் பார்ப்பது சரியான பார்வையல்ல. கேரளத்தின் முடிவை தமிழகம் உள்ளிட்ட ஏனைய மாநிலங்களும்கூடப் பரிசீலிக்கலாம் என்று தோன்றுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT