Published : 05 Dec 2013 12:00 AM
Last Updated : 05 Dec 2013 12:00 AM

அரசியல் களமா தெலங்கானா?

தெலங்கானா கிளர்ச்சியால் ஆந்திர மாநிலமும் மத்திய அரசும் கோடிக் கணக்கான ரூபாய்களை இழந்துகொண்டிருக்கிறது. அதைவிட மோசம் என்னெவென்றால், விலை மதிப்பற்ற மனித உயிர்களும் வேலை நாள்களும் வீணாகிக்கொண்டிருக்கின்றன.

தெலங்கானாவுக்கு 10 மாவட்டங்களும் ஆந்திரத்துக்கு இதர பகுதிகளும் என்று முன்னர் கூறிவிட்டு, இப்போது கர்நூல், அனந்தப்பூர் மாவட்டங்களைத் தெலங்கானாவுடன் சேர்த்தால்தான் அந்த மாநிலம் ஓரளவுக்காவது தன்னிறைவு பெறும் என்று கூறப்பட்டு அதற்கு ‘ராயல - தெலங்கானா’ என்று பெயரும் சூட்டப்படுகிறது.

ஹைதராபாத் நிஜாம் ஆட்சியின் கீழ் இருந்த தெலங்கானா 17.9.1948ல் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது. எம்.கே.வெள்ளோடி என்ற அரசு அதிகாரி ஹைதராபாத் பிரதேசத்தின் முதலமைச்சராக 1950 ஜனவரி 26-ல் பதவியேற்றார். அவருக்குப் பிறகு பி.ராமகிருஷ்ண ராவ் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல்வராகப் பதவி வகித்தார். பொட்டி ஸ்ரீராமுலு தனி ஆந்திரம் கோரி 53 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பிறகு, அப்போதைய சென்னை மாகாணத்திலிருந்து 1.11.1953-ல் ஆந்திரம் பிறந்தது. கர்நூல் அதன் தலைநகரானது. 1953-ல் ஹைதராபாத்தையும் ஆந்திரத்தையும் இணைக்கலாம் என்று யோசனை கூறப்பட்டது. ஆந்திர முதல்வர் பெஜவாடா கோபால ரெட்டியும் ஹைதராபாத் முதல்வர் பி. ராமகிருஷ்ண ராவும் 20.2.1956-ல் இதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். 1.11.1956-ல் ஆந்திரப் பிரதேசத்துக்கு ஹைதராபாத் தலைநகரானது.

ஒப்புக்கொண்டபடி தங்கள் பகுதி முன்னேற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று வருந்திய தெலங்கானா மக்கள், 1969ல் கிளர்ச்சியைத் தொடங்கினர். அதற்கு ‘முல்கி’ போராட்டம் என்று பெயர். முல்கி என்றால் உள்ளூர்க்காரர். தெலங்கானா பகுதியில் ஆந்திரக்காரர்கள் அரசு வேலையில் அமர்த்தப்படுவதற்கான எதிர்ப்பாக இந்தக் கிளர்ச்சி தொடங்கியது. தெலங்கானா மக்களின் மனவோட்டத்தைப் புரிந்துகொண்ட டாக்டர் எம். சென்னா ரெட்டி ‘தெலங்கானா பிரஜா சமிதி’ என்ற அமைப்பைத் தொடங்கி, கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கினார். அது வன்முறையாக மாறி சுமார் 300-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பலிவாங்கியது. ஆண்டுகள் உருண்டோடின.

தெலுங்கு தேசத்தால் எல்லா தேர்தல்களிலும் தோற்கடிக்கப்பட்டுவந்த காங்கிரஸ், 1999-ல் தெலங்கானா கோரிக்கையைக் கையிலெடுத்தது. தெலுங்கு தேசம் கட்சி தனக்கு கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்க மறுத்ததால் கே. சந்திரசேகர ராவ் அந்தக் கட்சியிலிருந்து விலகி, ‘தெலங்கானா ராஷ்டிர சமிதி’ கட்சியைத் தொடங்கினார். உடனே காங்கிரஸ் காரியக் கமிட்டி, மாநிலங்கள் மறுசீரமைப்புக்காக இன்னொரு கமிட்டியை அமைக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியது.

2004-ல் காங்கிரஸ் மீண்டும் ஆந்திரத்திலும் மத்திய அரசிலும் பதவிக்கு வந்தது. சந்திரசேகர ராவ் தோழமைக் கட்சித் தலைவராக மத்திய அரசில் பதவியேற்றார். 2009-ல் மீண்டும் கோரிக்கை வலுத்தது. கிளர்ச்சி தீவிரமடையவே 3.2.2010-ல் நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலை மையில் கமிட்டி நியமிக்கப்பட்டது. அந்தக் கமிட்டி பரிந்துரையை அளித்துவிட்டது. தெலங்கானா மக்களின் கோரிக்கைகளைக் காலவரம்பு நிர்ணயித்து நிறைவேற்றியிருந்தாலே இந்தக் கிளர்ச்சிகளுக்கு இடமே இல்லை. அரசியல் தலைவர்களின் குறுகிய பிராந்தியவாதமும் சுயநலமும் மெத்தனமுமே இந்தப் பிரச்சினைக்குக் காரணம். இதில் சந்தர்ப்பவாதமும் சேர்ந்துகொள்வதால் பிரச்சினை நீடித்துக்கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x