Published : 04 Nov 2013 08:53 AM
Last Updated : 04 Nov 2013 08:53 AM
“நான் நினைத்ததைப் பேசக் கூடாது என்ற நிபந்தனையோடு என்னை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதாக இருந்தால், உங்களிடத்தில் சொல்லிக்கொள்கிறேன், ஏதென்ஸ் நகரப் பெருமக்களே... நான் கடவுளுக்குக் கட்டுப்படுவேன், உங்களுக்கல்ல.’’ -கி.மு. 399-ல் சாக்ரடீஸ் சொன்னது இது.
‘‘கோயபல்ஸும் தான் விரும்பியதைக் கூறும் பேச்சுரிமையை விரும்பினார், ஸ்டாலினும் அப்படித்தான். நீங்கள் பேச்சுச் சுதந்திரத்தை ஆதரிப்பவராக இருந்தால், நீங்கள் விரும்பாத விஷயங்களும் பேசப்படுவதை அனுமதிக்கத்தான் பேச்சுச் சுதந்திரத்தை ஆதரிக்கிறீர்கள்.’’ - கி.பி. 1992-ல் நோம் சோம்ஸ்கி சொன்னது இது.
எந்தக் காலகட்டத்திலும், கழுத்து நெரிபடும் சூழலிலும் அறிவுசார் ஜனநாயக சமூகம் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கவே விழையும். ஏனென்றால், ஜனநாயகத்தின் உயிர்க்கூடு அது. ஆனால், உலகின் சுதந்திர ஊடகவியலுக்கும் கருத்துச் சுதந்திரத்துக்கும் முன்னோடிகளில் ஒன்றாகக் கூறப்படும் இங்கிலாந்து, அந்நாட்டு ஊடகங்களைக் கண்காணிக்க / கட்டுப்படுத்த ஒரு புதிய அமைப்பை உருவாக்கும்போது நாம் வெறுமனே எதிர்ப்பை மட்டும் தெரிவிக்க முடியவில்லை; எதிர்ப்பின் ஊடாக, ஊடகங்களாகிய நம்முடைய தரப்பையும் பொறுப்பையும் திரும்பிப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
முந்நூறு ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாகப் பத்திரிகை களின் எழுத்துச் சுதந்திரத்துக்குக் கடிவாளம் போடும் வகையில் ‘மூன்றாவது நபர்’ தலையீட்டுக்கு - ‘ராயல் சார்டர்’ என்ற கண்காணிப்பு அமைப்புக்கு வகைசெய்திருக்கிறது இங்கிலாந்து. இதன்படி, பத்திரிகைகள் ஓர் கட்டுப்பாட்டாளரை நியமித்துக்கொள்ள வேண்டும். கண்ணியமற்ற செய்திச் சேகரிப்பைத் தடுப்பது கட்டுப்பாட்டாளரின் கடமை. பத்திரிகை தவறிழைத்தால், தண்டனை விதிக்க, பத்திரிகையின் ஒட்டுமொத்த விற்றுமுதலில் ஒரு சதவீதத்தொகையை அபராதமாக விதிக்க அவருக்கு அதிகாரம் உண்டு. அந்தக் கட்டுப்பாட்டாளரை ‘அங்கீகார ஆணையம்’ கண்காணிக்கும். இது சுயேச்சையான மற்றொரு குழுவால் நியமிக்கப்படும் என்கிறது அரசு. செய்தி சேகரிப்பு என்ற பெயரில், ‘நியூஸ் ஆப் த வேர்ல்ட்’ நிருபர்கள் நடத்திய தொலைபேசி ஒட்டுக்கேட்பின் பின்விளைவு இது.
இங்கிலாந்து அரசு, ஊடகங்களின் சுதந்திரம் எல்லை மீறிப்போகிறது; தனி மனித அந்தரங்கம் பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்குப் பதில் நடவடிக்கையாக இந்தப் புதிய கட்டுப்பாட்டு அமைப்பைச் சொல்கிறது. ஊடகங்களோ, ‘‘சுதந்திரத்துக்கு எதிரான, ஆழமான நடவடிக்கை இது’’ என்று விமர்சிக்கின்றன. என்ன விலை கொடுத்தேனும் ஊடகச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதேசமயம், அந்தரங்கம் தனி மனிதச் சுதந்திரத்தின் ஒரு பகுதி அல்லவா? இன்னொருவர் சுதந்திரத்தில் தலையிட்டு, எப்படி நம்முடைய சுதந்திரத்தை நியாயப்படுத்த முடியும்? நம் சுதந்திரம் நம் கையில் என்றால், நம் கட்டுப்பாடும் நம் கையில்தான் இல்லையா? நாம் நம்மையும் பரிசீலனைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT