Published : 20 Feb 2017 09:18 AM
Last Updated : 20 Feb 2017 09:18 AM

இஸ்ரோவின் அடுத்த சாதனை!

உலக அளவில் புகழ்பெற்று விளங்கும் ‘இஸ்ரோ’, பிஎஸ்எல்வி ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்களைக் கொண்டுசென்று விண்ணில் நிறுத்தி புதிய சாதனையைப் புரிந்திருக்கிறது. இதில் இந்தியாவுக்காக ஏவப்பட்டவை வானிலையைக் கணிக்கும் ‘கார்ட்டோசாட்-2’ செயற்கைக் கோள் மற்றும் இரு சிறிய ‘நானோ’ செயற்கைக் கோள்கள் மட்டுமே. எஞ்சியவை அமெரிக்கா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, கசகஸ்தான் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கானவை. வெளிநாடுகளுக்காக ஏவப்பட்டுள்ள 101 வெளிநாட்டு செயற்கைக் கோள்களில் 96 அமெரிக்காவுடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ராக்கெட் மூலம் 37 செயற்கைக் கோள்களை 2014-ல் ரஷ்யா அனுப்பியதுதான் இதுவரை சாதனையாக இருந்திருக்கிறது. 2013-ல் அமெரிக்காவின் ‘நாசா’ 29 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட் மூலம் அனுப்பியிருந்தது. கடந்த ஜூன் மாதம் ‘இஸ்ரோ’, 20 செயற்கைக் கோள்களை ஒரே ராக்கெட் மூலம் அனுப்பிவைத்தது. இப்போது 104 செயற்கைக் கோள்களை இந்தியா ஏவியதும்கூட எண்ணிக்கை அளவில் உலக சாதனை செய்வதற்காக அல்ல; ஏவு வாகனத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். வர்த்தகரீதியாக செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த நம்பத்தக்க, மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

பூமியிலிருந்து 500 கி.மீ. உயரத்தில் ஒரு சுற்று சுற்றி முடிக்க ஏவுகலம் 90 நிமிடங்களை எடுத்துக்கொள்கிறது. தான் அனுப்பிவைத்த செயற்கைக் கோள்களை சுற்றுப்பாதையில் விட போதிய கால அவகாசம் இருந்தும், மொத்தம் 12 நிமிடங்களுக்குள் அனைத்து செயற்கைக் கோள்களையும் ஒன்று இன்னொன்றின் மீது மோதாமல் தனித்தனியாகச் சுற்றும் வகையில் பாதையையும் கோணத்தையும் துல்லியமாகத் தேர்வுசெய்து, எதிரெதிர் திசைகளில் ஜோடி ஜோடியாக அடுத்தடுத்து அனுப்பி வைத்திருக்கிறது ‘இஸ்ரோ’. காலநிலையைத் துல்லியமாகக் கண்காணிக்க மேலும் சில ‘கார்ட்டோசாட்-2’ ரக செயற்கைக் கோள்களை அனுப்பிவைக்கவும் ‘இஸ்ரோ’ திட்டமிட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான செயற்கைக் கோள்களை அனுப்பிய சாதனையுடன் 10 கிலோவுக்கும் குறைவான இரண்டு ‘நானோ’ செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டதும் தனிச் சாதனையாகும். இவை புதிய ரகத் தொழில்நுட்பங்களை உலகம் அறிவதற்காக அனுப்பப்பட்டுள்ளன. பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி - வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடும் ஆய்வுக்கூடங்கள், ‘இஸ்ரோ’ உட்பட்ட அமைப்புகள் ஆய்வுக்கு செயற்கைக் கோள்களை மிகக் குறைந்த எடையில் அனுப்ப விரும்பினால், அதற்குத் தங்களால் உதவ முடியும் என்று ‘இஸ்ரோ’ இதன் மூலம் உணர்த்தியிருக்கிறது. ஏற்கெனவே பல இந்திய பல்கலைக்கழகங்கள் ‘நானோ’ செயற்கைக் கோள்களை உருவாக்கி ஏவும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதால், அதற்கென்றே தனி ஏவு வசதிகளுடன் நாங்கள் இருக்கிறோம் என்று ‘இஸ்ரோ’ தெரிவிக்கிறது.

விண்வெளி ஆய்வில் இந்தியாவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும் கனவுக்கு ‘இஸ்ரோ’வின் இந்தப் பாய்ச்சல் நடவடிக்கை மேலும் வலு சேர்க்கும். சர்வதேச அளவில் இந்திய அறிவியலாளர்களின் மதிப்பு மேலும் உயரும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x