Published : 07 Jun 2016 09:28 AM
Last Updated : 07 Jun 2016 09:28 AM

அகதிகளை கைவிடும் ஐரோப்பா!

மத்தியத் தரைக்கடல் பகுதியில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் மூன்று படகுகள் கவிழ்ந்து, சுமார் 700 பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

கடல் பயணத்துக்குத் தகுதியில்லாத படகுகளில் செல்வது உயிருக்கு ஆபத்தானது என்று தெரிந்தும், ஆயிரக்கணக்கான மக்கள் பெண்கள், குழந்தைகளுடன் தங்களுடைய தாய்நாட்டை விட்டு முகம் தெரியாத மக்கள் வாழும் வேற்று நாடுகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இடைத் தரகர்களை நம்பித் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்.

கடந்த ஆண்டு மட்டும் 3,700 அகதிகள் கடலில் மூழ்கி இறந்திருக்கிறார்கள். இந்த ஆண்டு இதுவரையில் 2,000 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேற்கு ஆசிய, வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் உள்நாட்டுப் பூசலும், பக்கத்து நாட்டுடனான போரும்தான் அகதிகள் ஆயிரக்கணக்கில் வெளியேறக் காரணங்களாக இருக்கின்றன. ஐரோப்பாவை அடைய இரண்டு பாதைகளை அகதிகள் தேர்ந்தெடுத்துள்ளனர். முதலாவது, துருக்கியிலிருந்து கிரேக்கத் தீவுகளுக்குச் செல்கின்றனர் அல்லது லிபியாவிலிருந்து இத்தாலிக்குச் செல்கின்றனர்.

‘ஒருவரை அனுமதித்தால் ஒருவரை வெளியேற்றுவது’ என்று ஐரோப்பிய நாடுகளும் துருக்கியும் செய்துகொண்ட உடன்பாடு முக்கிய விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. கிரேக்கத் தீவுகளிலிருந்து துருக்கிக்கு ஒரு சிரியா அகதி திரும்பினால், இன்னொரு சிரியா அகதியை ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய நாட்டில் தங்க அனுமதிக்கும். இதையடுத்து, துருக்கி வழியாக அகதிகள் வருவது குறைந்துவிட்டது. ஒரு பாதை அடைபட்டுவிட்டதால், அகதிகளைக் கடத்தி வரும் இடைத்தரகர்கள், அவர்களை இப்போது லிபியாவுக்குக் கடத்திச் செல்கின்றனர். இதனால் இத்தாலியக் கடற்கரையில் அகதிகள் வருகை அதிகரித்துவிட்டது.

அகதிகள் பிரச்சினைக்கு ஒட்டுமொத்தமான ஒரு திட்டத்தை ஐரோப்பிய நாடுகள் வகுப்பது அவசியம். முதலில், அதிக எண்ணிக்கையில் அகதிகளை வரவேற்க வேண்டும். ஜெர்மனி, ஸ்வீடனைத் தவிர பிற நாடுகள், அகதிகளை வரவேற்பதில் ஆர்வமாக இல்லை. இரண்டாவதாக, அகதிகளை அடையாளம் கண்டு மீட்க போதிய நடவடிக்கைகளை ஐரோப்பிய நாடுகள் எடுக்க வேண்டும். அகதிகளை ஏற்பதற்கான செலவுகளைச் சமாளிக்கக் கடன் பத்திரத்தை வெளியிடலாம் என்று இத்தாலி கூறிய யோசனையை ஜெர்மனி கடுமையாக எதிர்த்துள்ளது. கடலில் அகதிகள் மூழ்காமலிருக்க வேண்டுமானால், மீட்புக் குழுக்களுக்குத் தேவைப்படும் உதவிகள் செய்யப்பட வேண்டும். அதற்கு அதிக நிதி தேவைப்படுகிறது. மூன்றாவதாக, அகதிகள் ஐரோப்பாவைக் குறிவைத்து வருவதை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்துவிட வேண்டும் என்றே ஐரோப்பிய நாடுகள் விரும்புகின்றன. அகதிகள் வெளியேறக் காரணமாக இருக்கும் நாடுகளில் செயல்படுகிற, உலக சமூகத்துடன் ஒத்துழைக்கிற அரசுகள் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இது தொடர்பாக துருக்கியுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு உடன்பாட்டைச் செய்துகொள்ள வேண்டும்.

லிபியாவில் மம்மர் கடாஃபி தலைமையிலான அரசை ஐரோப்பிய நாடுகள் கவிழ்த்தது முதலே அந்நாடு கடும் உள்நாட்டுப் போரில் சிக்கிக்கொண்டிருக்கிறது. எனவே படை பலம், பண பலத்துடன் வளர்ந்துவிட்ட ஆள் கடத்தும் தரகுக் கும்பல்களைக் கட்டுப்படுத்துவது இப்போது இயலாத செயலாகிவிட்டது. அகதிகள் வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் என்றால், லிபியாவில் மீண்டும் அமைதி திரும்பினால்தான் உண்டு. ஐரோப்பிய நாடுகள் முற்பகல் செய்த அரசியல் வினைகளின் பயன்தான் இப்போது அகதிகள் பிரச்சினையாக அவர்கள் மீது விடிந்திருக்கிறது. இப்பிரச்சினையில் தீவிர அக்கறை செலுத்தாமல் இனியும் ஐரோப்பிய நாடுகளால் தள்ளிப்போட முடியாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x