Published : 03 Aug 2016 09:00 AM
Last Updated : 03 Aug 2016 09:00 AM
நேபாளப் பிரதமர் கே.பி.ஒலி பதவி விலகியதைத் தொடர்ந்து, நேபாளத்தில் புதிய அரசை அமைக்கும் முயற்சி தொடங்கியிருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு புஷ்ப கமல் தாஹால் ‘பிரசண்டா’ தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியும் (மாவோயிஸ்ட் - மையம்), நேபாளி காங்கிரஸ் கட்சியும் இணைந்து கூட்டணி அரசு அமைக்கவிருக்கின்றன. முதல் ஒன்பது மாதங்களுக்கு தாஹால் பிரதமராகப் பதவி வகிப்பார்; அதன் பிறகு, 2018-ல் தேர்தல் நடைபெறும் வரை நேபாளி காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தேவ்பா பிரதமராக இருப்பார்.
மைய சித்தாந்தவாதக் கட்சியான நேபாளி காங்கிரஸ் கட்சிக்கும் இடதுசாரி மாவோயிஸ்ட் கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் கடந்த எட்டு ஆண்டு காலமாக முக்கியமான அரசியல் சட்டப் பிரச்சினைகளில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. 2006-ல் தொடங்கிய சமரச முயற்சிகளும் முற்றுப்பெறாமலேயே நீடிக்கின்றன. 2006-ல் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்ததிலும், 2008-ல் நேபாளத்தைக் குடியரசு நாடாக்கியதிலும் இரு கட்சிகளும் இணைந்துசெயல்பட்டன. ஆனால், இரு கட்சிகளுக்கும் இடையிலான நட்புணர்வும் ஒத்துழைப்பும் பின்னர் மறைந்தன. இந்நிலையில், மீண்டும் உருவாகியிருக்கும் இந்தக் கூட்டணி, முக்கியமான பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசண்டா, தேவ்பா இருவருமே 2000-களில் அரசியல் மாற்றங் களில் முக்கியப் பங்கு வகித்தவர்கள். எனவே, போர்க் குற்றங்கள் பற்றிய விசாரணையை முடித்து அந்நடவடிக்கையை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதில், உண்மை அறியவும் சமரசம் ஏற்படுத்தவும் அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு இந்தக் கூட்டணி துணை செய்யும் என்று நம்பலாம். மாதேசி, ஜனஜாதி, தாரு மக்கள் குழுக்களின் கூட்டாட்சி விருப்பங்களைப் பூர்த்திசெய்வதிலும் இரு கட்சிகளுக்கும் ஆக்கபூர்வமான கருத்துகள் நிலவுகின்றன. எனவே, மிக முக்கியமான இந்தப் பிரச்சினையும் சுமுகமாகத் தீர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
அனைத்து அம்சங்களிலும் கூட்டாட்சித் தத்துவம் பிரதிபலிக்கும் வகையில் ஆட்சியமைப்பு இருக்க வேண்டும் என்று மாவோயிஸ்ட்டுகள் முன்னர் விருப்பம் தெரிவித்திருந்தனர்; மாநிலங்கள் திருத்தியமைக்கப் படுவதை நேபாளி காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவும் ஆதரித்தார். நேபாள அரசியல் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னால் இடைக்கால அரசியல் சட்டத்தி லேயே அது சேர்க்கப்பட வேண்டும் என்றும் விரும்பினார். ஆனால், கூட்டாட்சி அமைப்பு விஷயத்தில் எந்த மாற்றத்தையும் அனுமதிக்க முடியாது என்று கே.பி.ஒலி பிடிவாதம் காட்டியதால் பிரச்சினை அதிகமானது. அவருடைய ஆட்சியின் அதிதீவிர தேசபக்தி முழக்கம், ‘சீனத்தை நாடுவோம் சீனத்திடம் உதவி பெறுவோம்’என்ற சீன சார்பு அணுகுமுறை போன்றவை இந்தியாவுடனான உறவில் உரசலை ஏற்படுத்தியது. இந்தியாவுடன் உறவை சீரமைப்பது அவசியம் என்று பிரசண்டா, தேவ்பா இருவரும் வலியுறுத்தி வந்தது குறிப்பிடத் தக்கது.
கடந்த பத்தாண்டுகளில் நடந்த சம்பவங்களிலிருந்து இந்தியாவும் சில பாடங்களைக் கற்க வேண்டும். 2010-ல் பிரசண்டாவையும் அவருடைய கட்சியையும் தனிமைப்படுத்த இந்தியா விரும்பியது. நேபாள அரசியலில் நிலையற்ற தன்மையும், பழைய நிலையை மாற்றக் கூடாது என்று பிடிவாதம் பிடிக்கும் கட்டுப்பெட்டிகளின் தலையெடுப்பும் வளர்ந்தன என்பதை மறந்துவிடக் கூடாது. நேபாளத்துக்கு என்ன தேவை என்பதை அந்நாட்டுத் தலைவர்களின் முடிவுக்கே இந்தியா விட்டுவிட வேண்டும். வாக்களித்தபடி, நிலநடுக்கச் சேதங்களிலிருந்து நேபாளம் மீள்வதற்கான மறுகட்டமைப்பு உதவிகளையும் பொருளாதார உதவிகளையும் இந்தியா தாராளமாகச் செய்துதருவதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சமப்படுத்தும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT