Published : 02 Aug 2016 08:59 AM
Last Updated : 02 Aug 2016 08:59 AM

கொடூரத்தை எதிர்கொள்ள ஓர் அறைகூவல்!

ஆப்கன் தலைநகர் காபூலில் சமீபத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு, நாளுக்கு நாள் ஐஎஸ் எவ்வளவு கொடூர மான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதை உணர்த்தியிருக்கிறது. தங்கள் பகுதிக்கு மின் வசதி வேண்டும் என்று கேட்டுப் பேரணியில் பங்கேற்ற பொதுமக்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் இது. 80 உயிர்களைப் பறித்திருக்கிறது.

கடந்த 15 வருட காலகட்டத்தில் நடைபெற்ற கொடூரமான ஒரு சில தாக்குதல்களில் இதுவும் ஒன்று. ஆப்கனில் நானும் இருக்கிறேன் என்று உலகுக்குக் காட்டுவதற்காக இந்தக் கொடூரத்தை ஐஎஸ் செய்து காட்டியிருக்கிறது. ஆப்கனின் கிழக்குப் பகுதியில் ஐஎஸ் பரவிவருகிறது. அரசுக்கு எதிராகச் செயல்படும் ஆயுதம் தாங்கிய குழுக்களின் செயல்பாட்டில் இந்தச் சம்பவம் ஒரு திருப்புமுனை. மறுபுறத்தில் அரசுப் படைகளின் பாதுகாவல் முறைகளில் உள்ள கோளாறுகளையும் இந்தத் தாக்குதல் வெளிக்காட்டியிருக்கிறது. தரையிலும் வானிலும் அமெரிக்கப் படைகள் ஆப்கனுக்குப் பாதுகாப்பில் உதவுகின்றன. அந்த நிலையிலும் இது நடந் திருக்கிறது. தலிபான் இயக்கத்தின் சமீபகாலத் தாக்குதல்களை ஆப்கன் ராணுவத்தால் தடுக்க முடியவில்லை. தற்போது ஐஎஸ் இயக்கமும் அரசுக்கு எதிரான தாக்குதல்களில் இறங்கிவிட்டது. நாட்டின் பாதுகாப்புச் சூழல் இதன் விளைவாக மோசமடையலாம்.

ஐஎஸ்ஸைப் பொறுத்தவரையில், ஆப்காணிஸ்தான் அது வளர்வதற்கு வாய்ப்புகளைத் தரும் இடம். இராக்கிலும் சிரியாவிலும் அது தற்போது சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. இராக், சிரியா ராணுவங்களாலும் அமெரிக்க, குர்திஷ் படைகளாலும் அது பெரும் நெருக்குதலில் சிக்கியிருக்கிறது. அதனால் கடந்த ஒரு வருடத்தில், அது தனது பிடியில் இருந்த பகுதிகளை இழந்துள்ளது. ஆயிரக்கணக்கான படையினரை மோதல்களில் இழந்திருக்கிறது. இதன் காரணமாக லிபியா, ஆப்கன் உள்ளிட்ட மற்ற நாடுகளை நோக்கி அதன் கவனம் திரும்பியுள்ளது.

ஐஎஸ் போன்ற அமைப்புகள் குழப்பமான சூழல்களைப் பயன்படுத்தித்தான் வளர்கின்றன. இராக்கிலும் சிரியாவிலும் அரசியல் குழப்பங்கள் நிலவியபோது அதைப் பயன்படுத்தித்தான் ஐஎஸ் வளர்ந்தது. ஆப்கனிலும் அதே சூழல்தான். உள்நாட்டுப் போரால் ஏற்கெனவே அது பலவீனமாக இருக்கிறது. பாகிஸ்தானை ஒட்டியுள்ள ஆப்கனின் எல்லையோர மலைப் பிரதேசங்களில் அரசின் கட்டுப்பாடு கிட்டத்தட்ட இல்லை என்பதே இப்போதைய நிலவரம். இந்தச் சூழலில்தான் ஒரு மாவட்டத்தில் தற்போது ஐஎஸ் தன் கால்களை இறக்கியிருக்கிறது.

ஆப்கனில் ஐஎஸ் வகுக்கும் இன்னொரு வியூகம், ஆப்கன் மக்களைச் சமூகரீதியாகப் பிளக்கும் வகையில் தாக்குதல்களை நடத்துவது. இராக்கிலும் சிரியாவிலும் ஷியா, சன்னி பிரிவு முஸ்லிம் களிடையே உள்ள முரண் உணர்வுகளை ஐஎஸ் பயன்படுத்துகிறது. சன்னி பிரிவு கருத்தாக்கங்களை வலுவாகக் கொண்டுசெல் வதற்கான அதே மாதிரியான வியூகத்தையே ஆப்கனிலும் அது தேர்ந்தெடுத்திருக்கிறது. தலிபான்கள்கூட இத்தகைய அபாயகரமான அணுகுமுறையைக் கையாளவில்லை. இந்த ஆபத்துகளை ஆப்கானிஸ்தான் அரசும் அங்குள்ள சர்வதேசப் படைகளும் எப்படி எதிர்கொள்ளப்போகின்றன என்று தெரியவில்லை.

முன்பு, 1990-களில் தலிபான் ஆதிக்கம் உருவானதைப் போல ஆப்கனில் ஐஎஸ் இயக்கத்தின் ஆதிக்கம் உருவானால், அதன் விளைவுகள் ஆப்கனுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகுக்குமே மோசமானவையாக இருக்கும். அத்தகைய நாசம் நடந்துவிடாமல் தடுப்பதில் இந்தியாவுக்கும் பொறுப்பு உண்டு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x