Published : 04 Aug 2016 09:10 AM
Last Updated : 04 Aug 2016 09:10 AM
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் குழந்தைத் தொழிலாளர் (தடுப்பு மற்றும் முறைப்படுத்துதல்) - 1986 சட்டத் திருத்தம், குழந்தைத் தொழிலாளர் முறையின் அனைத்து வடிவங்களையும் அழிப்பதற்கான தேசியக் கடமையும் அக்கறையும் அரசிடம் இல்லை என்பதையே காட்டுகிறது. குழந்தைத் தொழிலாளர் முறையைக் கட்டுப்படுத்தும் திறனற்ற அச்சட்டத்தில், ஆக்கபூர்வமான மாற்றத்தை ஏற்படுத்த நாடாளுமன்றம் முயற்சி செய்யவில்லை. மாறாக, குடும்பங்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பணியமர்த்துவதை இந்தச் சட்டத் திருத்தம் அனுமதிக்கிறது. மேலும், 14 முதல் 18 வயதுள்ள இளம் பருவத்தினரைப் புதிய பட்டியலின் கீழ் வகைப்படுத்தி, ‘அபாயமற்ற வேலை’களில் அவர்களைப் பணியமர்த்தவும் அனுமதித்திருக்கிறது.
நாட்டின் சமூக-பொருளாதார நிலையைப் புரிந்துகொள்ளும் நோக்கிலான நடவடிக்கை என்ற பெயரில், குழந்தைகளைப் பணியில் ஈடுபடுத்துவதற்கே வழிவகை செய்திருக்கிறது இந்த சட்டத் திருத்தம். பள்ளி நேரம் போக மற்ற நேரங்களிலும், விடுமுறைக் காலங்களிலும் மட்டும் குடும்ப நிறுவனங்களில் குழந்தைகள் பணிபுரியலாம் என்பதுதான், இந்த சட்டத் திருத்தத்தில் குழந்தைகளின் கல்வி உரிமைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே சலுகை. அதேசமயம், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்தப் பணியிலும் அமர்த்தப்படுவதைத் தடை செய்யும் பிரிவு, இந்த சட்டத் திருத்தத்தின் முற்போக்கான அம்சம் எனலாம். இதற்கு முன்னர், குறிப்பிட்ட சில பணிகளில் குழந்தைகள் பணிபுரிவதற்குத்தான் தடை இருந்தது.
குழந்தைத் தொழிலாளர்களை முறைப்படுத்துதல் என்பது மிகப் பெரிய சவால். குறிப்பிட்ட ஒரு குடும்பம் நிறுவனத்தை நடத்துகிறதா அல்லது சட்டத்தை ஏமாற்றுவதற்கு அந்தக் குடும்பத்தின் பின்னணியில் இருந்துகொண்டு அடையாளம் தெரியாத நபர், அந்நிறுவனத்தை நடத்துகிறாரா என்று கண்டறிவது கடினமான காரியம். சில ஆண்டுகள் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், தங்கள் குடும்பத்துடன் வேலையிலும் ஈடுபடுவதால், விரைவில் படிப்பில் ஆர்வம் குறைந்து பள்ளிப் படிப்பை முடிக்காமலேயே வெளியேறும் நிலைகூட ஏற்படலாம்.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு மாநாடுகளின் இணக்க விதிகள் 138 மற்றும் 182 ஆகியவற்றுக்குச் சற்றுப் பொருந்தும் வகையில் சட்டத் திருத்தம் இருந்தாலே போதும் என்று முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் போலவே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் கருதுகிறது போலும். விதி 138-ன் படி, 15 வயது வரை பள்ளிப் படிப்பு கட்டாயம். ஆனால், போதுமான கல்வி வசதி கொடுக்க முடியாத நாடுகளில் இதை, 14 வயதாகக் குறைக்கவும் அதே விதி அனுமதிக்கிறது. விதி 182, மிக மோசமான தொழில் வடிவங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவதைத் தடை செய்கிறது.
இந்த சட்டத் திருத்தத்தை பாஜக எம்.பி.வருண் காந்தியே கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட்டபோதே, இதில் இருக்கும் குறைபாடுகளை, குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கப் பாடுபட்டுவரும் கைலாஷ் சத்யார்த்தி சுட்டிக்காட்டியிருந்தார். ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்கள், குறிப்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளிப்பருவத்தின் சந்தோஷங்களையும், கல்வி பெறுவதற்கான அரசியல் சாசன உரிமையையும் இழக்கும் நிலையில்தான் இன்னமும் இருக்கிறார்கள். குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதில் இந்தியா மிகவும் பின்தங்கியிருக்கும் சூழலில், அரசு செய்ய வேண்டியது நிறைய. ஆனால், அதை அரசு உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை என்பதுதான் கவலைதரும் விஷயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT