Published : 22 Jul 2016 08:53 AM
Last Updated : 22 Jul 2016 08:53 AM
அருணாசலப் பிரதேசத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் அரசு, பல சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தது. இறுதியாக, குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், புது முதல்வருடன் அம்மாநில காங்கிரஸ் அரசு தப்பிப் பிழைத்திருக்கிறது. பெமா கண்டு எனும் 36 வயது இளைஞர் முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.
நபம் துகி முதல்வராக நீடிப்பார் என்று அறிவித்தால், பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதை விரும்பாமல் போகலாம். அதனால், சட்டப்பேரவையில் தனது அரசுக்கான பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம் என்று கடைசியில் புரிந்துகொண்டுவிட்டது காங்கிரஸ் தலைமை. யாரும் எதிர்பாராதவகையில் ஒரு புத்திசாலித்தனமான முடிவையும் அது எடுத்துவிட்டது.
முந்தைய காங்கிரஸ் அரசிலேயே துகி அரசாங்கத்துக்குப் போதுமான பெரும்பான்மை இருந்ததா என்பது பற்றிச் சந்தேகம் இருந்தது. ஆனாலும், உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன முறைகளை ஆராய்ந்து, தனது ஆணையின் மூலம் துகி அரசாங்கத்தை மறுபடி உயிர்ப்பித்துவிட்டது. இதற்கான பெருமை முழுவதும் உச்ச நீதிமன்றத்தையே சேரும்.
கடந்த டிசம்பரில் காங்கிரஸ் கட்சியின் 47 சட்டப்பேரவை உறுப்பினர் களில் 14 பேர் சட்டப்பேரவைத் தலைவரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களில் இருவரின் ராஜினாமாக்களும் ஏற்கப்பட்டன. அரசாங்கத்துக்கு எதிரான சட்டப்பேரவை உறுப்பினர்கள் 31 பேர் இருந்தனர். ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையோடு தொடர்புடையது இது. இதையடுத்து எண்களின் விளையாட்டு ஆரம்பமானது.
எதிர்ப்புக் குழுவின் தலைவரான கலிகோ புல் கடந்த பிப்ரவரி மாதம் 29 பேருடன் முதல்வராகப் பதவியேற்றார். 14 சட்டப்பேரவை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்த சட்டப்பேரவைத் தலைவரின் ஆணைகளுக்கு எதிராக நீதிமன்றத் தடை உத்தரவுகள் பெறப்பட்டன. அதற்குப் பிறகு அவர் 30 பேர் கொண்ட தனது குழு இன்னொரு கட்சியோடு இணைந்துவிட்டதாக அறிவித்தார்.
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் வேறு கட்சியில் சேர்ந்துவிட்டால், கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதுதான் இந்தச் சம்பவங்களின் பின்னணியில் உள்ள காரணம். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, துகியின் ஆட்சி முதலில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற நிலை உருவானது.
இந்தச் சங்கடமான நிலைமை மாதக்கணக்கில் சோம்பிக்கிடந்த காங்கிரஸை அசைத்தது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எதிர்ப்பாளர்களின் மனக்குறைகளை அங்கீகரித்தது. அவர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய முதல்வர் வேட்பாளரையும் முன்னிறுத்தியது. தலைமையை எதிர்த்துச் செயல்பட்ட அனைவரின் நம்பிக்கையையும் அது மீட்டுக்கொண்டது.
கட்சிக்குள் இருந்த அதிருப்திதான் முதல்வர் துகிக்கு சட்டமன்றத்துக்குள் பெரும்பான்மை இல்லாத நிலையை ஏற்படுத்தியது. இந்தச் சூழலைப் பயன்படுத்தித்தான் மாநில ஆளுநர் தலையிட்டார். பாஜகவும் இந்த நெருக்கடியைப் பயன்படுத்தியது. காங்கிரஸில் இருந்த எதிர்ப்பாளர் குழுவை அது பயன்படுத்திக்கொண்டது. தற்போது உச்ச நீதிமன்றம் ஒரு மாநிலத்தின் ஆளுநர் வரம்புகள் எவை என்பது பற்றிய வரையறைகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஆளுநர்களை நியமிப்பது பற்றியும் அவர்களின் செயல்பாடுகள் பற்றியும் பொறுப்புணர்வுடன் கூடிய அக்கறையை மத்திய அரசு செலுத்த வேண்டும். இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இதற்கான வழிகாட்டல்கள் மிகப்பெரும் அளவில் உள்ளன. சர்க்காரியா, புஞ்சி ஆணையங்களின் அறிக்கைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இன்றைய தேவை அத்தகைய அரசியல் நாகரிகம்தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT