Published : 26 Jul 2016 09:35 AM
Last Updated : 26 Jul 2016 09:35 AM
அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் அதிகாரவர்க்கத்தி னரும் ஏக காலத்தில் இடம்பெற நினைக்கும் தன்னிகரில்லா விளையாட்டுச் சங்கமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திகழ்கிறது. தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற வகையில் வாரியம் நடத்தும் போட்டிகளுக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும், கோடிக்கணக்கான ரூபாய் வருவாயும் கிடைத்துக்கொண்டே இருப் பதால், காமதேனுவாகவே இதைப் பலரும் பார்க்கின்றனர். ஊழல், வேண்டியவருக்குப் பதவி வழங்கல், உள்ளிருப்பவர்களின் துணை யுடன் சூதாட்டம் என்று வேண்டாத விவகாரங்களும் இந்த அமைப் பில் சேர்ந்துவிட்டன. இந்திய விளையாட்டுகளில் ராஜ விளையாட்டான இது, பணம் காய்ச்சி மரமாக இருப்பதாலேயே முறைகேடுகளுக்கும் குறைவில்லை. வாரியம் சீரமைக்கப்பட வேண்டியதும் அதன் நிர்வாகம் வெளிப்படையாக நடக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் உச்ச நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. இக்குழுவை நியமித்த உச்ச நீதிமன்றம், அதன் பரிந்துரைகளில் பலவற்றை ஏற்றுக்கொண்டுள்ளது. தன்னாட்சி பெற்ற அமைப்பாகவும் தனியார் அமைப்பாகவும் இருந்தாலும் ரசிகர்கள் தங்களுடைய தேசப்பற்று காரணமாக இந்த விளையாட்டைத் தங்களுக்கு உரித்தாக்கிக் கொண்டுள்ளனர். எனவே, கிரிக்கெட் வாரியம் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற இந்தப் பரிந்துரைகள் அமலாக்கப்பட்டு, சீர்திருத்தம் பெற வேண்டும்.
வாரியத்தின் அமைப்பிலேயே அடிப்படையாகப் பல சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதன் நிர்வாகிகள், முறைகேடாகப் பணப் பயனைப் பெறும் வகையில் செயல்பட விடக்கூடாது என்பதற்காக விதிகளைத் திருத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. வாரியத் தலைவர் பதவி வகிப்பவருக்கு அதிகபட்ச வயது வரம்பு, பதவி வகிப்பில் ஒரு முறைக்கும் இன்னொரு முறைக்கும் குறிப்பிட்ட கால இடைவெளி, எண்ணிலடங்கா உறுப்பினர்களைக் கொண்ட செயல்குழுவுக்குப் பதிலாக 9 உறுப்பினர்களைக் கொண்ட உச்சப் பேரவை, அதிலும் விளையாட்டு வீரர்களுக்குப் பிரதிநிதித்துவம் என்ற பரிந்துரைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தன்னுடைய அதிகாரத்துக்கு வரம்பே கிடையாது, நீதிமன்றம்கூடத் தனது செயல்பாட்டில் தலையிட முடியாது என்றே பி.சி.சி.ஐ. இதுவரை செயல்பட்டுக்கொண்டிருந்தது. இனி அது சாத்தியமில்லை.
இந்திய பிரீமியர் லீக் விளையாட்டுப் போட்டியில் 2013-ல் நடந்த சூதாட்டம்தான் வாரியத்தில் புரையோடிப் போயிருக்கும் ஊழலை அம்பலப்படுத்தியது. வாரியம் விளையாட்டை மட்டும் நிர்வகிக் கவில்லை, வேறு சில வேண்டாத விவகாரங்களையும் நிர்வகித்து வந்தது என்பது புரிந்தது. லட்சக்கணக்கான அப்பாவி ரசிகர்களுக்கு நம்பிக்கை மோசடி செய்யும் செயல்களுக்கு இந்த விளையாட்டு இனியும் காரணமாக இருக்கக் கூடாது. லோதா குழுவின் பரிந்துரைகள் அனைத்துமே ஏற்புடையவை அல்ல. ஆனால், அவற்றை வழிகாட்டிகளாகக் கொண்டு நிர்வாக விதிகளையும் அமைப்பையும் சீர்திருத்தியாக வேண்டும். திறமையும் தகுதியும் உள்ள வீரர்கள் யாருடைய ஆதரவும் தேவைப்படாமல் அடையாளம் காணப்பட வேண்டும், அணியில் இடம் பெற வேண்டும். உச்ச நீதிமன்றம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பயன் தர வேண்டும். வியாபார உத்திகளுடன் கிரிக்கெட் வளர்வதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்க முடியாது. அதே சமயம், வாரியத்தின் செயல்பாடுகள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT