Published : 20 Jun 2016 09:26 AM
Last Updated : 20 Jun 2016 09:26 AM

சிலைத் திருட்டை ஒழிக்க முடியாதா?

சிலைத் திருட்டு சர்வதேச அளவில் எவ்வளவு பெரிய வலையைக் கொண்டது என்பதும், உள்ளூர் கரங்கள் எப்படி அதன் வலுவான கண்ணிகளாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன என்பதும் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

தமிழகக் காவல் துறையின் சிலைத் திருட்டுத் தடுப்புப் பிரிவு சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் தீனதயாளனை மே 31-ம் தேதி கைதுசெய்தது. அவருடைய இருப்பிடத்திலிருந்து 71 கற்சிலைகள், 41 பஞ்சலோகச் சிலைகள், 90 அரிய ஓவியங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன. இந்திய நாகரிகத்தின் அரிய கலை வடிவங்களின் அம்சமான இவை விலை மதிப்பற்றவை. நம்முடைய தொன்றுதொட்ட பாரம்பரியத்தின் பிரிக்க முடியாத ஓர் அங்கம். சோழர்களின் கட்டிடக் கலையையும் திராவிடர்களின் சிற்பக் கலையையும் எடுத்துக் காட்டும் அற்புதக் கலைவடிவங்கள் இவை.

தமிழகத்தில் 4, கர்நாடகத்தில் 1 என்று 5 கலைக்கூடங்களை தீனதயாளன் நிர்வகித்து வந்திருக்கிறார். சிலைகளைத் திருடவும் கடத்தவும் இந்தக் கலைக்கூடங்கள் பயன்பட்டுள்ளன என்று ஊகிக்கலாம். கைப்பற்றப்பட்ட சிலைகளின் எண்ணிக்கையையும் அவை முன்னர் இருந்த இடங்களையும் ஆராய்ந்தால், இந்த சிலை திருட்டுக் கும்பல் மிக விரிவாகவும் ஆழமாகவும் பரந்து செயல்பட்டுக்கொண்டிருப்பதை உணர முடிகிறது. இந்தத் திருட்டுகள் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் பரவலாக நடந்திருக்கின்றன. அத்துடன் தெற்காசிய, தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும்கூட இத்திருட்டுக் கும்பலின் கரங்கள் நீண்டிருப்பதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன.

சிலைத் திருட்டு என்றாலே நினைவுக்கு வரும் சுபாஷ் கபூர் இப்போது தமிழகச் சிறையில்தான் தண்டனை அனுபவித்துவருகிறார். அவர் 2011-ல் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டார். சுதந்திரம் அடைந்த காலந்தொட்டு இந்தத் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுவந்திருக்கிறார் கபூரின் தந்தை புருஷோத்தம் ராம் கபூர்.

காலப்போக்கில், சிலைக் கடத்தல்களையும் கொள்ளையையும் தடுக்கச் சட்டத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்பட்டன. அரிய கலாச்சாரச் சின்னங்களையும் பொருட்களையும் சட்ட விரோதமாக ஏற்றுமதிசெய்வது, இறக்குமதி செய்வது, உரிமையை இன்னொருவருக்கு மாற்றுவது போன்றவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டன. எனினும், திருடர்கள் வேறு வேறு வியூகங்களில் சட்டத்தின் கண்களில் மண்ணைத் தூவுகிறார்கள். அரிதாகப் பிடிபடுகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின்போது, சுமார் ரூ.700 கோடி மதிப்புள்ள 200 கலைப் பொருட்கள் அமெரிக்க அரசால் மோடியிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் பிடிபடும் சிலைகள் நாம் உரிய ஆதாரங்களைக் கொடுத்து முறையிட்டு, தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கும்போது இப்படிச் சில சமயங்களில் ஒப்படைக்கப்படுகின்றன. எனினும், இதெல்லாம் இப்பிரச்சினைக்கு ஆழமான தீர்வு அல்ல.

சிலைத் திருட்டை முற்றாகத் தடுக்கவும் சிலை கடத்தும் கும்பல்களை அடையாளம் கண்டு தடுக்கவும் காவல் துறையில் போதிய ஆட்கள் நியமிக்கப்பட வேண்டும். கோயில்களில் காவலும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட வேண்டும். மத்திய, மாநில காவல் துறையின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையே நெருங்கிய ஒத்துழைப்பும் தகவல் பரிமாற்றமும் அவசியம். முக்கியமாக, இந்தச் சிறப்புப் பிரிவினர் காலத்துக்கேற்ற உத்திகளுடன் திருடர்களைக் கையாள அவர்களுக்குத் தொடர் பயிற்சியும் தேவையான கட்டமைப்புகளையும் உருவாக்கித் தர வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x