Published : 12 Jun 2017 08:16 AM
Last Updated : 12 Jun 2017 08:16 AM

அனைவருக்கும் தரமான பள்ளிக் கல்வி அவசியம்!

பத்தாவது, பன்னிரண்டாவது வகுப்பு மாணவர்கள் எழுதிய இறுதித் தேர்வு மதிப்பெண்களில், தேர்வு வாரியமே சலுகை அளித்துக் கூட்டும் முறையை இந்த ஆண்டு தடுக்க வேண்டாம் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது பல மாநிலக் கல்வி வாரியங்களுக்கு அதிருப்தியைத் தரும் என்பதில் சந்தேகமே கிடையாது. அதற்கும் முன்னதாக மத்தியக் கல்வி வாரியமும் மாநிலக் கல்வி வாரியங்களும் கூடி, இனி மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்கள்தான் இறுதியானது, வாரியம் எந்த மதிப்பெண்ணையும் கூட்டாது என்று முடிவுசெய்தன. இது தொடர்பான மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இந்த முடிவைத் தேர்வு தொடங்குவதற்கு முன்னதாகவே எடுத்து, மாணவர்களுக்கு அறிவித்திருக்க வேண்டும். பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண்தான் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பதால், இந்த ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று சுட்டிக்காட்டியிருக்கிறது.

பாட நூல் அல்லாமல் புறப் பகுதியிலிருந்து கேள்வி கேட்கப்பட்டிருந்தாலோ, கேள்வியே தவறாகவோ, இருவேறு விதமாகப் பொருள் கொள்ளும் வகையில் இருந்தாலோ அத்தகைய கேள்விகளுக்கு விடை எழுதிய மாணவர்களுக்கு, விடை தவறாக இருந்தாலும் முழு மதிப்பெண் தருவது என்று வாரியங்கள் தீர்மானிக்கும். இதனால் மாணவர்களுக்கு மதிப்பெண் இழப்பு ஏற்படாது. அத்துடன் கிராமப்புற மாணவர்கள், பின்தங்கிய பகுதி மாணவர்கள், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் போன்றோருக்குக் கருணை காட்டப்படுவதும் உண்டு. ஆனால், இப்படி மதிப்பெண்ணைக் கூட்டுவது எல்லா நேரங்களிலும் நேர்மையாக இல்லாமல், தங்களுடைய மாநில மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைக் குவிக்க வேண்டும், உயர் கல்வியில் அதிக இடங்களைப் பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்திலும் செயல்படுத்தப்படுவதால் இந்த முறையை நீக்க முடிவுசெய்யப்பட்டது.

நாடு முழுக்க ஒரே பாடத்திட்டம், ஒரே பாட நூல் கிடையாது. அத்துடன் நகர்ப்புற, கிராமப்புற மாணவர்களுக்கு இடையே கற்றலில் வேறுபாடுகள் உண்டு. இந்நிலையில், ‘சம நிலையில் போட்டி’ என்பது குரூரமான கொள்கையாகத்தான் தெரிகிறது. பள்ளிக் கல்வியில் அரசியலைப் புகுத்தக் கூடாது. மொழியறிவு, கணிதம், அறிவியல், புவியியல் போன்ற பாடங்களில் உண்மையான அறிவை வளர்ப்பதிலும் படிப்பதில் ஆர்வத்தைத் தூண்டுவதிலும்தான் கல்வி வாரியங்களின் வெற்றியும் நாட்டின் எதிர்கால வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது. கல்வியின் தரத்தை வளர்க்க மாநிலக் கல்வி வாரியங்கள் புதிய முயற்சிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அந்தந்த மாநிலங்களின் பின்புலம், சமூக சிந்தனைக்கு ஏற்ப கல்வியில் சிறப்பான மாறுதல்களும் அமைய வாய்ப்பு இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியக் கல்வித் திறனின் பன்மைத்துவம் பளிச்சிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x