Published : 04 Jan 2016 08:28 AM
Last Updated : 04 Jan 2016 08:28 AM

மறுமலர்ச்சிக்குத் தயாராகிறதா மார்க்சிஸ்ட் கட்சி?

மேற்கு வங்க மாநிலத்தில் தொடர்ந்து 34 ஆண்டுகள் இடதுசாரி கூட்டணி ஆட்சிக்குத் தலைமை தாங்கி தேசிய அரசியலில் முக்கியப் பங்கு வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு சார் தேசிய மாநாட்டுக் கூட்டம், கொல்கத்தாவில் நடந்து முடிந்திருக்கிறது. இழந்த ஆட்சியையும் தேசிய அரங்கில் இருந்த செல்வாக்கையும் மீட்பது குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஒருகாலத்தில் மேற்கு வங்கம், கேரளம், திரிபுரா ஆகிய 3 மாநிலங்களும் மார்க்சிஸ்ட்டுகளின் கோட்டையாகத் திகழ்ந்தன. இப்போது திரிபுராவில் மட்டும் மார்க்சிஸ்ட்டுகள் ஆட்சி நடக்கிறது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை இழந்தது அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகிவிட்டது.

இம்மாநாடு நடத்தப்பட்டது, கட்சியின் அமைப்புகளைப் பலப்படுத்தி மக்களிடம் ஆதரவைப் பெருக்கிக்கொள்ளத்தான் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், மேற்கு வங்கத் தேர்தலை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்துப் பேசாமல் இருந்திருக்க முடியாது. மார்க்சிஸ்ட் கட்சி தனது செல்வாக்கை மீட்க வேண்டும் என்றால் மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தாக வேண்டும். வீண் கவுரவம் பார்க்காமல் காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்து மேற்கு வங்கத்தில் போட்டியிட்டால்தான் திரிணமூல் காங்கிரஸை வலுவாக எதிர்கொள்ள முடியும் என்று கட்சியிலேயே சிலர் தீவிரமாக நம்புகின்றனர்.

காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க மார்க்சிஸ்ட் கட்சி தயங்குகிறது. தயக்கத்துக்கு கட்சியின் சித்தாந்தம் காரணம் அல்ல, புவிசார் அரசியல்தான். கேரளத்திலும் இந்த ஆண்டு சட்டப் பேரவைப் பொதுத் தேர்தலைச் சந்தித்தாக வேண்டும். மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி, கேரளத்தில் காங்கிரஸ் எதிர்ப்பு என்று இருவேறு நிலைகளைக் கட்சியால் எடுக்க முடியாது. கேரளத்தில் இப்போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வலுவிழந்துவருகிறது. எனவே இடதுசாரி கூட்டணி கேரளத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமே. மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிட்டு ஒரு வேளை மீண்டும் இடதுசாரி முன்னணி தோற்றுவிட்டால் கட்சியின் தேசிய செல்வாக்கும் வலிமையும் சரிந்துவிடும்.

மார்க்சிஸ்ட் கட்சிக்குப் பாரம்பரியமாகப் பின்புலமாக அதன் ஆதரவாளர்களிடம் இப்போது அதே விசுவாசம் காணப்படுவதில்லை. தங்களுடைய கோரிக்கைகளுக்கு அணுக்கமான மார்க்சிஸ்ட் அல்லாத கட்சிகளையும் ஆதரிக்க மக்கள் தயாராகிவருகின்றனர். பனிப்போர் காலத்தில் கடைப்பிடித்த அதே சர்வதேச அணுகுமுறை, எல்லாவற்றிலும் மார்க்சீயக் கண்ணோட்டம் போன்றவற்றை மார்க்சிஸ்ட் அப்படியே தொடருகிறது. நவதாராளமயம், ஏகாதிபத்தியம், அறிவியல் சமத்துவம் ஆகிய கட்சிக்குப் பிடித்தமான அருங்கலைச் சொற்கள் அனைத்தும் சில பல்கலைக்கழக வளாகங்களைத் தவிர பிற பகுதிகளில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாக இப்போது கருதப்படுவதில்லை.

கட்சி இப்போது தன்னைப் புதிதாக வடிவமைத்துக்கொள்ள வேண்டும். தொழிலாளர்கள், நலிவுற்ற பிரிவினர், மகளிர் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும். மக்களை இப்போது நேரடியாகப் பாதித்துவரும் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பாகக் களத்தில் இறங்கிப் போராடாமல் தன்னுடைய பாரம் பரியமான ஆதரவை அக்கட்சியால் மீட்க முடியாது. அரசியல் சட்டம், மக்களுடைய சுதந்திரம் ஆகியவற்றைக் காப்பதில் பிற கட்சிகளால் அக்கறையுடன் செயல்பட முடியாது என்பதால், மார்க்சிஸ்ட் கட்சி தனது அணுகுமுறையும் போராட வேண்டிய பிரச்சினைகளையும் கவனமாகத் தேர்வு செய்தாக வேண்டிய தருணம் இது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x