Published : 08 Sep 2016 09:03 AM
Last Updated : 08 Sep 2016 09:03 AM

நீதியை நிலைநாட்ட கருத்தொற்றுமை அவசியம்!

உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் ஏராளமான நீதிபதிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பது குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் அடிக்கடி கவலை தெரிவித்துவருவதுடன், நீதிபதிகள் நியமனங்களில் காலதாமதம் ஏன் என்றும் கேட்டுவருகிறார். நீதிபதிகள் நியமனம் தொடர்பான செயல்முறை குறிப்பாணை விஷயத்தில்கூட அரசு நிர்வாகத்துக்கும் நீதித் துறைக்கும் கருத்தொற்றுமை ஏற்படாமலிருப்பது வருத்தத்தைத் தருகிறது. நீதிபதிகளின் எண்ணிக்கை பற்றாக்குறையாக இருப்பதால், நீதி நிர்வாகம் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. நீதிபதிகள் நியமனம் எந்த அடிப்படையில் செய்யப்பட வேண்டும் என்று, தான் வகுத்துள்ள வரைவு ‘செயல்முறை குறிப்பாணைக்கு’ உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் மூத்த நீதிபதிகளும் ஒப்புதல் தர வேண்டும் என்று அரசு காத்திருக்கிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, நிரப்பப்படாத நீதிபதி பணியிடங்களுக்கான நியமனங்களும், செயல்முறைக் குறிப்பாணைக்கு நீதிபதிகள் ஒப்புதல் தருவதும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்களாகத் தோன்றும். நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய வழிமுறை பரிசீலனையில் இருக்கும்போது காலியிடங்களைப் பழைய வழிமுறைகளின்படி நிரப்புவது பொருத்தமில்லாததைப் போல இருக்கும். நீதிபதிகளை நியமிக்க இப்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறை வெளிப்படையாக இல்லை. நீதிபதிகளின் பின்னணி குறித்த சரிபார்ப்புகள் திருப்தியாக இல்லை என்ற நிலையில், விரைவில் கைவிடப்படவுள்ள இந்த நடைமுறையின்படி 475 பணியிடங்களை நிரப்புவது சரியாக இருக்குமா?

‘தேசிய நீதித் துறை நியமன ஆணையம்’(என்.ஜே.ஏ.சி.) என்ற அமைப்பை, சட்டமியற்றி அரசு கொண்டுவந்ததை ஏற்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், அது செல்லாது என அறிவித்துவிட்டது. அதே சமயம், நீதிபதிகளை நியமிக்க இப்போது கடைப்பிடிக்கும் முறையில் சில குறைகள் உள்ளன என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, பழைய முறையில் தேர்வுசெய்வதாக இருந்தாலும், அரசும் நீதித் துறையும் பேசி அதில் சில மாற்றங்களைக் கருத்தொருமித்து கொண்டுவருவது மிகவும் அவசியம்.

தான் வகுத்துள்ள ‘செயல்முறைக் குறிப்பாணை’, உச்ச நீதிமன்றம் விரும்பிய கட்டமைப்புக்கு நெருக்கமாக இருப்பதாக அரசு நினைக்கிறது. நீதிபதிகளின் நியமனம், இடமாறுதல் போன்றவற்றில் எதேச்சதிகாரம், விரும்பியவர்களுக்குச் சலுகை அளித்தல் போன்றவை இல்லாமலிருக்க பரிசீலனை வரம்பை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் அரசு விரும்புகிறது. நீதிபதிகளாக நியமிக்கப்படவிருப்போரின் கல்வி, அனுபவம், தகுதி, பிற அம்சங்கள் குறித்து உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்ற அளவிலேயே சரிபார்ப்புக் குழுக்கள் ஏற்படுத்தி இந்த நியமனத்தை வெளிப்படையாக்கலாம் என்று விரும்புகிறது.

நீதிபதிகளைத் தேர்வுசெய்வதற்கான குழுவைக் கொண்ட நிரந்தரச் செயலகத்தை ஏற்படுத்தலாம். அதில் நீதிபதிகளுக்கு எதிரான புகார்கள் அல்லது முறையீடுகளை விசாரித்து முடிவெடுக்கலாம் என்றும் அரசு விரும்புகிறது. நீதிபதிகளாக நியமிக்கப்படவிருப்போரின் தகுதிகளைச் சரிபார்க்கக் குழுக்களை நியமிக்கலாம் என்ற யோசனையை நீதித் துறை சங்கடத்துடன் பார்க்கிறது.

ஆனால், இரு தரப்பும் இவை தொடர்பாக மேலும் மனம்விட்டு விவாதித்து சுமுக முடிவுக்கு விரைந்து வருவது அவசியம். நீதிபதிகள் நியமனத்தில் நீதித் துறைக்கு உள்ள அதிகாரம் மற்றும் பங்களிப்பை நீர்த்துப்போகச் செய்ய அரசு விரும்புகிறது என்ற எண்ணமோ, நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கூடாது என்று நீதித் துறை விரும்புகிறது என்ற எண்ணமோ ஏற்பட்டுவிடக் கூடாது. இதை உணர்ந்து இருதரப்பும் விட்டுக்கொடுத்து சுமுகமான முடிவை எட்டியே தீர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x