Published : 11 Oct 2013 10:15 AM
Last Updated : 11 Oct 2013 10:15 AM

வெறுப்பால் சாதிக்க முடியாது

பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுப்பெறும் அறிகுறிகள் தொடர்கின்றன. ராணுவத்துடன் சுமுக உறவு மேற்கொள்ளும் வகையில், ஜெனரல் கயானிக்கு நிர்வாகத்தில் இடம் அளிக்கும் முடிவை முன்னெடுத்திருக்கிறார் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்.

பாகிஸ்தான் வரலாற்றில் முக்கியமான ஒரு தளபதி கயானி. 2007ல் முஷாரஃபால் பதவிக்குக் கொண்டுவரப்பட்ட அவர், இந்த ஆறு ஆண்டுகளுக்குள் முஷாரஃப், ஜர்தாரி, ஷெரிஃப் என பாகிஸ்தானின் மூன்று முக்கிய சக்திகளுடனும் பணியாற்றியிருக்கிறார். முஷாரஃபின் வீழ்ச்சியில் தொடங்கி பேநசீரின் மறுவருகை - மரணம், கிலானியின் பதவியேற்பு, ஜர்தாரியின் வீழ்ச்சி, நவாஸின் மறுவருகை... இவற்றுக்கு இடையில் எத்தனையோ முறை ஆட்சியை ராணுவம் கைப்பற்றிவிடும் என்ற பேச்சு அடிபட்டது. அதற்கான வாய்ப்புகளும் நிறைய இருந்தன. எல்லாவற்றையும் தாண்டி பாகிஸ்தானின் 66 ஆண்டு கால வரலாற்றில், முழுமையாக ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்த முதல் ஆட்சி என்ற பெருமையை பாகிஸ்தான் மக்கள் கட்சி பெற்றது. இவற்றுக்கு கயானியும் ஒரு காரணம்.

முன்னதாக 2010-ல் ஒருமுறை பணி நீட்டிக்கப்பட்டு, அடுத்த மாதத்துடன் கயானியின் பணிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாகவே நிறைய வதந்திகள் வந்தன. இரு நாட்களுக்கு முன், ‘மேற்கொண்டு பணிநீட்டிப்பையோ புதிய பதவியையோ நான் கோரவில்லை. நவம்பர் 29-ல் பணியிலிருந்து விலகிவிடுவேன்‘ என்று அவற்றுக்கு முற்றுப்புள்ளிவைத்தார் கயானி. இப்போது ஷெரிஃப் அரசு கயானியை இணைத்துக்கொள்ளும் சமிக்ஞைகளை வெளியிட்டிருக்கிறது. ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தையும் ஆக்கபூர்வச் செயல்பாடுகளின் தேவையையும் பாகிஸ்தான் நிர்வாகிகள் உணர்ந்துவருவதன் அறிகுறிகள் இவை.

இந்தத் தருணத்தில் பாகிஸ்தான் செயல்பட வேண்டிய இன்னொரு தளமும் உண்டு: உள்நாட்டு, சுயலாபக் கணக்குகளுக்காக இந்தியாவுடனான போட்டி அரசியலைக் கைவிடுவது. இந்தியாவுடனான போட்டி அரசியலின் ஓர் உத்தியாக அது முன்னெடுத்த பாதாள உலகச் செயல்பாடுகளே இன்றைக்கு பாகிஸ்தானின் தலையாய சவால்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. போட்டியின் பெயரால் அது ஊட்டி வளர்த்த வெறுப்பு அதையே இன்று செல்லரிக்கிறது. எல்லைப்புற மாகாணங்களில் ஒவ்வொரு நாளும் துப்பாக்கிச் சூடுகள், நாட்டின் மையத்திலோ ஒரு வாரத்துக்கு மூன்று தொடர் குண்டுவெடிப்புகள், பிரதான நகரங்கள் கடத்தல்காரர்களின் கட்டுப்பாட்டில் என்கிற இந்தச் சூழலிலேனும் பாகிஸ்தான் தன்னுடைய வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; பகையால் சாதிக்க முடியாது என்பதை உணர வேண்டும். ஒருவகையில் பாகிஸ்தான், உலகுக்கு ஓர் எச்சரிக்கை... சீனாவுடன் போட்டியையும் அதன் மீதான வெறுப்பையும் இங்குள்ள சில அரசியல் சக்திகள் முன்னெடுக்கும் நிலையில், பாகிஸ்தான் இந்தியாவுக்கும் ஓர் எச்சரிக்கை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x