Published : 26 Aug 2016 08:59 AM
Last Updated : 26 Aug 2016 08:59 AM
இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் உர்ஜித் படேல். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த அவரை அப்பதவிக்குத் தேர்வு செய்திருப்பதன் மூலம் மத்திய அரசின் நிதிக் கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்பது தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. பணவீக்கம் என்று அழைக்கப்படும் விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் அரசுக்குள்ள முனைப்பும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
துணை ஆளுநராகப் பணியாற்றிய உர்ஜித், நிதிக் கொள்கைக்கான புதிய கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர். பதவியிலிருந்து ஓய்வுபெறும் ரகுராம் ராஜனுடன் இணைந்து பணியாற்றியவர். சில்லறைப் பணவீக்க விகிதம் 4% என்ற அளவிலேயே பராமரிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருப்பதைப் பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். அதை அமல்படுத்துவதற்கு உர்ஜித் பெரிதும் துணையிருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) உள்ளிட்ட நிதிக் கடன் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் உர்ஜித்துக்கு உண்டு. ரிலையன்ஸ் தொழில் குழுமத்துக்கு தொழில் வளர்ச்சி உத்தி ஆலோச கராகவும் சிறிது காலம் பணியாற்றியிருக்கிறார். பொது நிதி நிர்வாகத்தில் கட்டுப்பெட்டியான சிந்தனை உள்ளவர் என்று உர்ஜித் மீது விமர்சனங்கள் உண்டு.
அரசின் செலவை அதிகப்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்; உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற சிந்தனையைவிட, அரசின் வரவுக்கேற்ப செலவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிப்பவர் என்று சிலர் கருதுகிறார்கள். ரிசர்வ் வங்கியில் துணை ஆளுநராகப் பதவி வகித்தாலும் புதிய பொறுப்பில் அமர்ந்து அனைத்தையும் ஒருங்கிணைக்க அவருக்குச் சிறிது காலம் பிடிக்கும்.
பணக் கொள்கையை உருவாக்கும் நடைமுறைச் சூழல் இப்போது மாறியிருப்பதால் அதற்கேற்பச் செயல்படுவதுதான் தற்போது உர்ஜித் முன்னால் உள்ள முதல் சவால். இதுவரை ரிசர்வ் வங்கியின் ஆளுநர்தான் இதில் முக்கியப் பங்கு வகிப்பார். இப்போது ஆளுநர் உட்பட ஆறு பேர் அடங்கிய குழுதான் இதைத் தீர்மானிக்கப்போகிறது. ஆளுநரின் கருத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டாலும் கருத்தொற்றுமை அடிப்படையில்தான் இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டியிருக்கும். மத்திய அரசின் நிதித் துறைக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இதில் சமமான பொறுப்பு இருக்கும். யாரும் தன்னிச்சையாக முடிவெடுத்துவிட முடியாது. எனவே விரிவான விவாதங்களுக்குப் பிறகே பணக் கொள்கையை வகுக்க முடியும். வரும் அக்டோபர் 4-ல் இந்த ஆறு உறுப்பினர் குழுதான் அடுத்த வட்டி வீதத்தைத் தீர்மானிக்கவிருக்கிறது.
அவருக்கு இருக்கும் அடுத்த சவால், அரசுடமை வங்கிகளுக்குப் பெரிய பாரமாகக் குவிந்துவிட்ட வாராக் கடன் தொகைதான். வங்கிகளுக்கும் சேதம் இல்லாமல், கடன் வாங்கியவர்களும் தொழிலில் நீடிக்கும் வகையில் இந்தக் கடன் வசூல் நடைபெற வேண்டும். தொழில்கள் முடங்கிவிடாமல் தொடர்ந்து கடன் கிடைக்க வழி செய்ய வேண்டும். இதை அவர் எந்த அளவுக்கு விரைவாகச் செய்து முடிக்கிறார் என்று சந்தையைப் பயன்படுத்துவோரும் முதலீட்டாளர்களும் ஆர்வத்துடன் கவனித்து வருவார்கள்.
மொத்த விலைக் குறியீட்டெண்ணுக்கும் நுகர்வோர் விலைக் குறியீட்டெண் ணுக்கும் உள்ள தொடர்பைப் புரிந்துகொண்டு அதற்கேற்பக் கொள்கைகள் வகுக்கப்படுவது முக்கியம். பழைய கொள்கைகளை அப்படியே தொடரும் அதே வேளையில், வியக்கத் தக்க புதிய மாற்றங்களையும் ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் கொண்டுவருவது அவசியம். இவற்றையெல்லாம் உர்ஜித் நிறைவேற்றுவாரா என்று பார்ப்போம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT