Published : 10 Mar 2017 09:17 AM
Last Updated : 10 Mar 2017 09:17 AM
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி 50 ஆண்டு களைக் கடந்திருக்கும் நிலையில், அது முன்வைத்த முக்கியமான முழக்கங்களில் ஒன்று, மீண்டும் நம் கவனத்தைக் கோரும் சூழலை இன்று உருவாக்கியிருக்கிறது - திராவிட ஆட்சியின் தளகர்த்தர் அண்ணா முழங்கிய ‘வடக்கு வாழ்கிறது... தெற்கு தேய்கிறது’ முழக்கம். மேலோட்டமாக ஒரு இனவாத முழக்கமாக அன்று பார்க்கப்பட்ட இம்முழக்கமானது, அடிப்படையில் தமிழகத்தின், தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த இந்தி பேசாத மாநிலங்களின் பிரதிநிதித்துவக் குரலாக ஒலித்தது.
இன்னும் சொல்லப்போனால், இந்த இந்திய ஒன்றியத்தின் உயிராக எது இருக்கிறதோ, அந்தப் பன்மைத்துவத்தை ஓங்கி ஒலிக்கிற குரலாக அது இருந்ததை இன்று புரிந்துகொள்ள முடிகிறது. வளர்ச்சித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு போன்ற நிதி ஆதாரங்களைப் பிரதானமாக முன்வைத்து, “வளர்ச்சித் திட்டங்களில் இந்தி பேசாத மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன” என்பது அன்றைய குரலாக இருந்தது. இன்றைக்கு தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அந்த நிலை பெருமளவில் மாறியிருந்தாலும், இந்திய அரசின் மீதான அந்த விமர்சனம் இன்னமும் மிச்சமிருப்பதை வட கிழக்கு மாநிலங்களின் சமகால நிலை உணர்த்தத்தான் செய்கிறது. தமிழகம் பொருளாதாரத்திலும் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக நலக் காரணிகளிலும் இன்றைக்கு அன்றைய சூழலிலிருந்து எவ்வளவோ மேம்பட்டுவிட்டாலும், வேறொரு வகையில் பாரபட்சத்தையும் புறக்கணிப்பையும் எதிர்கொள்ளவே செய்கிறது. இதற்கான சமீபத்திய உதாரணங்களாகவே ஜல்லிக்கட்டுக்கான தடை, மருத்துவப் பொது நுழைவுத்தேர்வுத் திணிப்பு, நாட்டின் தென் கடல் எல்லையில் தொடர் கதையாகவே மாறிவிட்ட தமிழ்க் கடலோடிகளின் உயிரிழப்பு ஆகிய விவகாரங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
ஒருபுறம், ஒரு மாநில ஆளுகைக்கு உட்பட்ட கல்வி, கலாச்சாரம் சார்ந்த விஷயங்களில்கூட மாநிலங்களின் உரிமை தொடர்ந்து பறிக்கப்பட்டுவருகிறது. மறுபுறம், இந்திய அரசு எங்கு மாநிலங்களின் குரலைத் தன் குரலாக எதிரொலிக்க வேண்டுமோ அங்கெல்லாம் மாநிலங்களின் உரிமையைப் பறிகொடுக்கிறது. “நாட்டின் மேற்குக் கடல் எல்லையில் பாகிஸ்தான் படைகளால் ஒரு இந்தியக் குடிமகன் கொல்லப்பட்டால், இப்படித்தான் தமிழகக் கடலோடிகளின் மரணத்தை அணுகுவதுபோலவே இந்திய அரசு அலட்சியமாக அணுகுமா?” என்று தமிழகத்தில் இன்று ஒலிக்கும் குரல் மேலோட்டமானது அல்ல.
ஆக, இந்திய ஒன்றியத்தில் நமக்கான, தமிழகத்துக்கான, மாநிலங்களுக்கான, பன்மைத்துவத்துக்கான, பிரதிநிதித்துவம் உயர்ந்து ஒலிக்க வேண்டும் என்றால், அரசியல்ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நிறைய விஷயங்களை நாம் மறுபரிசீலனைக்கு உள்ளாக்கவும் காய் நகர்த்தல்களை மாற்றிக் களமாடவும் வேண்டியிருக்கிறது. ஆனால், இந்தப் பிரச்சினையை மையமாக வைத்து, அரசியல் பேசுவோரில், கணிசமானோர் ஆக்க பூர்வமான விவாதங்களுக்கும் மாற்றங்களுக்கும் வித்திடுவதற்கு மாறாக, நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையிலான போக்குகளுக்கு வித்திடுவதிலேயே மும்முரமாக இருக்கின்றனர். தடுப்பூசி முதல் உயிர் காக்கும் மருந்துகள் வரை எதையும் சதிக் கோட்பாட்டுடனே அணுகும் போக்கு இன்றைக்குத் தமிழகத்தில் பரவிவருவதையும் மிக அபாயகரமான பிரிவினைவாதக் குரல்கள் ஊடுருவிவருவதையும் இதற்கான உதாரணங்களாகச் சுட்ட முடியும். இன்றைய சூழலில், இந்த இந்திய ஒன்றியத்துக்குள் நமக்கான உரிமைகளை எப்படி வென்றெடுப்பது என்பதை யோசிப்பது, ஒரு தொலைநோக்குத் திட்டத்துடன் கூடிய நீண்ட கால ஒரு தொடர் இயக்கம் என்பதை முதலில் நம்மவர்கள் உணர வேண்டும். அதற்குப் பல்வேறு தளங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த விஷயத்தில் சமூகத்துக்கு நல்ல திசையைக் காட்டுவதில் அறிவுலகத்துக்கும் குறிப்பாக, ஊடகங்களுக்கும் முக்கியமான ஒரு பங்கிருக்கிறது.
தமிழகத்தின் சமகால அறிவியக்கங்களில் ஒன்றாகிவிட்ட ‘தி இந்து’ தமிழ் நாளிதழ், ஒரு ஊடகமாக அறிவுத்தளத்தில் முன்னெடுக்க வேண்டிய முயற்சிகளையும் தன் முன்னே இருக்கும் கடமைகளையும் இந்த நேரத்தில் யோசிக்கிறது. இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க மதச்சார்பின்மை எத்தனை முக்கியமானதோ, சிறுபான்மையினர் உரிமைகள் - நலன்கள் எவ்வளவு முக்கியமானதோ அதே அளவுக்கு, மாநிலங்கள்சார் அதிகாரமயமாக்கலும், குறிப்பாக இந்தி பேசாத சிறுபான்மை மாநிலங்களின் உரிமைகள் நலன்களும் முக்கியம் எனக் கருதுகிறோம். ‘தமிழால் இணைவோம்’ எனும் முழக்கத்துடன் களமிறங்கிய நாம், ‘தமிழராய் எழுவோம்; நாட்டின் பன்மைத்துவம் காப்போம்’ எனும் முழக்கத்துடன் அதற்கான நடவடிக்கைகளில் இறங்குகிறோம். இந்தியாவின் தேசிய அரசியலில் இன்றைக்குத் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிட்டிருப்பதில் அறிவுசார் தளங்களில் என்னென்ன பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்று யோசிக்கிறோம். அப்படி யோசிக்கையில், தேசிய அரசியலில் இன்றைக்குத் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைந்திருப்பது எவ்வளவு பாதிப்புகளை நம்முடைய சமூகத்துக்கு உருவாக்கியிருக்கிறதோ, அதே அளவுக்கான பாதிப்புகளை மறைமுகமாக உருவாக்கக் கூடியது இந்திய ஆட்சிப் பணித் துறையில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவருவதும் என்று உணர்கிறோம். அதிகாரரீதியாக முடிவெடுக்கும் இடங்களில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் நாளுக்கு நாள் குறைந்துவருவது நம்மில் பெரும்பாலானோர் கவனிக்கத் தவறும் ஒரு விஷயமாகும்.
ஆக, அறிவுசார் தளத்தில் தமிழர்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் தன்னைத் தொடர்ந்து ஈடுபடுத்திக்கொள்ள ‘தி இந்து’ விழைகிறது. அதன் தொடக்கப் புள்ளியாக ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்!’ எனும் பயிலரங்கைத் தமிழ் மாணவர்கள் மத்தியில் தமிழகமெங்கும் கொண்டுசெல்கிறது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில் மார்ச் 12 அன்று முதல் நிகழ்ச்சி. தொடர்ந்து இயங்குவோம். தமிழால் இணைவோம்! தமிழராய் எழுவோம்; நாட்டின் பன்மைத்துவம் காப்போம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT