Published : 05 Jul 2016 09:22 AM
Last Updated : 05 Jul 2016 09:22 AM

அரசு ஊழியர்கள் பொறுப்பு கூடுதலாகிறது!

மத்திய அரசின் ஒரு கோடிக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வுப் பரிந்துரையை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டது. ஊழியர்களின் படிகள் தொடர்பான பரிந்துரைகளைப் பரிசீலித்து, பரிந்துரைக்கத் தனிக் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவால் ஊதியம் குறைந்தபட்சம் 14.5% முதல் 23.5% வரை அவரவர் பதவிப் படிநிலையைப் பொருத்து உயர்கிறது.

ஊதியம், படிகள், ஓய்வூதியம் ஆகியவற்றுக்கு 2017 மார்ச்சில் முடியும் நடப்பு நிதியாண்டில் மொத்தம் ரூ.1.14 லட்சம் கோடி செலவு பிடிக்கும். ஊதிய இனத்திலான உயர்வால் மட்டும் ஆண்டுக்கு ரூ.39,100 கோடி அதிகம் செலவாகும். ஓய்வூதியத்தின் பங்கு ரூ.33,700 கோடி. படிகள் பற்றிய பரிந்துரைகள் அப்படியே ஏற்கப்பட்டால் ரூ.29,300 கோடி செலவு கூடும். புதிதாக வேலைக்குச் சேரும் மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச மாத ஊதியம் இனி ரூ.18,000. மத்திய அமைச்சரவைச் செயலரின் அதிகபட்ச மாத ஊதியம் ரூ.2.5 லட்சம். ஊழியர்களின் பணிக்கொடை வரம்பு அதிகபட்சம் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. வீடு கட்டுவதற்கான கடன் அனுமதி வரம்பு ரூ.7.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் ஊதிய உயர்வு முடிவை மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டியிருக்கும். இந்த ஊதிய உயர்வு விலைவாசி உயர வழிவகுக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. எனினும், இது வரவேற்க வேண்டிய ஒரு முடிவே ஆகும்.

அரசின் இந்த முடிவை தொழில்துறையும் வரவேற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக மோட்டார் வாகனத் துறையினர், நுகர்பொருள் உற்பத்தியாளர்கள், மனை வணிகத் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசு ஊழியர்களுக்குத் தரப்படும் ஊதிய உயர்வால் பணச் சுழற்சி பல மடங்காகி, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை உயர்த்தும். இதில் கணிசமான பங்கு சேமிப்புக்கும் உதவும். ஊதியத்தை உயர்த்துவதை அரசால் தவிர்க்க முடியாது. அதேசமயம், அரசின் வருவாய் முழுவதையும் அரசு ஊழியர்களின் ஊதியம், படிகளுக்கு மட்டுமே செலவிட்டால் வளர்ச்சித் திட்டங்கள், வறுமை ஒழிப்பு, சமூக நீதி, நல்வாழ்வு நடவடிக்கைகள், ராணுவப் பாதுகாப்பு போன்றவற்றுக்கு நிதி கிட்டாது. பல வருடங்களாகவே அடித்தளக் கட்டமைப்புத் துறைகளும் நிதிப் பற்றாக்குறையால் தத்தளித்துவருகின்றன. நாடு வளர்ச்சி பெற்றால்தான் அரசு ஊழியர்களின் எதிர்கால ஊதியமும் உயர வழியேற்படும்.

இந்த ஊதிய உயர்வுக்கேற்ற செயல்திறனை அரசு ஊழியர்களிடம் சமூகம் எதிர்பார்க்கிறது. அரசு ஊழியர்களின் செயல்பாடு மேம்பட வேண்டும்; அரசின் நிதி வீணாவது தடுக்கப்பட வேண்டும்; ஊழல்கள் குறைய வேண்டும்; சிவப்பு நாடா நடைமுறைக்கு விடை கொடுக்கப்பட வேண்டும். அரசு அலுவலகங்களை நாடும் ஏழைகள், பாமர மக்கள் பரிவோடும் கண்ணியத்தோடும் நடத்தப்பட வேண்டும். தங்களின் முழு எதிர்பார்ப்புக்கேற்ப பரிந்துரை அமல் இல்லை என்று அரசு ஊழியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. பொது வேலைநிறுத்தம் நிச்சயம் என்றுகூட சில தலைவர்கள் எச்சரித்துள்ளனர். உலகளாவிய பொருளாதார மந்த நிலையையும் நாட்டின் பொருளாதார நிலையையும் சீர்தூக்கிப் பார்த்து, விவேகமான முடிவுக்கு அவர்கள் வர வேண்டும். அரசும் அரசு ஊழியர்களும் அரசு நிர்வாகம் என்ற தேரின் இன்றியமையாச் சக்கரங்கள். நாட்டு நலன் கருதி இருதரப்பும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x