Published : 07 Sep 2018 09:22 AM
Last Updated : 07 Sep 2018 09:22 AM
நாடு முழுவதும் கருத்துச் சுதந்திரத்துக்கான எல்லை சுருங்கிக்கொண்டே வருவது மிகவும் கவலையளிக்கும் விஷயம். மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், சுதந்திரச் சிந்தனையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். கொலைச்சதி குற்றம்சாட்டப்படுகிறார்கள். அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஊடகங்கள் அழுத்தப்படுவதான குரல்கள் ஒலிக்கின்றன. பெருமளவில் இதற்கெல்லாம் விலக்காக இருக்கும் தமிழகத்திலும் கருத்துரிமையின் எல்லை சுருங்கிவருவது பெரும் ஆபத்து. தமிழக முதல்வராக பழனிசாமி பதவியேற்ற பின்னர் இந்த நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
விமானப் பயணத்தில் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்பு அக்கட்சிக்கு எதிராக முழக்கமிட்ட ஆய்வு மாணவி சோபியா கைதுசெய்யப்பட்ட சம்பவம் சமீபத்திய உதாரணம். மாணவி சோபியா விமானத்தில், தமிழிசையை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் முழக்கமிட்டதும், அவர் தேர்ந்தெடுத்த போராட்ட வடிவமும் ஆதரிக்கக்கூடியன அல்ல. தனிமனித உரிமைகள் அரசியல்வாதிகளுக்கு மறுக்கப்பட்டவையல்ல. அதேசமயம், சக பெண், இளையவர், மாணவி என்ற வகையில் சோபியாவைத் தமிழிசை அணுகியிருக்கலாம். ஒரு அரசியல் தலைவரிடம் எதிர்பார்க்கக்கூடிய முன்னுதாரணப் பண்புதான் அது. அதைவிடுத்து, விமான நிலையத்தை விவாதக் களமாக்கி மாணவி மீது புகார், சட்ட நடவடிக்கை என்று தமிழிசை நடந்துகொண்ட விதம் ஆக்கபூர்வமானதல்ல. இதைக்காட்டிலும் மோசமானது, தமிழகக் காவல் துறை இந்த விஷயத்தை அணுகுவதில் காட்டிய பதற்றம். ஏதோ ஒரு சமூக விரோதியைப் போல அந்த மாணவியைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது கடும் கண்டனத்துக்குரியது.
இதன் மூலம், தமிழக அரசு சொல்ல விரும்பும் செய்தி என்ன? ‘எதிர்க்குரல் என்பதே கூடாது; அவ்வாறு எழுந்தால் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியிருக்கும்’ என்பதுதான் அந்தச் செய்தி என்றால், அதற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு கிளம்பும் என்பதையே சமூக வலைதளங்களில் சோபியாவுக்கு ஆதரவாகக் குவிந்த பல்லாயிரக்கணக்கான பதிவுகள் காட்டுகின்றன.
இந்தக் கைது, தனிப்பட்ட சம்பவமாக இல்லை. எந்த ஒரு போராட்டத்தை மேற்கொள்பவர்களுக்கு எதிராகவும், எதிர்க்குரல் எழுப்புபவர்களுக்கு எதிராகவும் இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளையே தமிழக அரசு எடுத்துவருகிறது. அதன் தொடர்ச்சியே இது என்பது இங்கு குறிப்பிட வேண்டியதாகிறது. நவீன இந்தியாவின் அரசியல் வரலாற்றில் முற்போக்கான மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ இங்கு நடந்துவந்திருக்கும் போராட்டங்களும் விமர்சனக் குரல்களும் எவ்வளவு பங்களித்திருக்கின்றன என்ற வரலாற்றை ஆட்சியாளர்கள் படித்துத் தெரிந்துகொள்ள முற்பட வேண்டும். எல்லா அரசியல்வாதிகளுமே சகிப்புத்தன்மையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆக வேண்டும். ஜனநாயகத்தின் கருத்துச் சுதந்திரத்தின் மீதுதான் எல்லோர் அரசியலுமே அரங்கேறுகிறது. ஜனநாயகத்துக்கு ஏற்படும் எந்த ஆபத்தும் அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் எல்லோரின் இருப்பையுமே குலைத்துவிடும் என்பதை உணர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT