Published : 17 Sep 2018 09:24 AM
Last Updated : 17 Sep 2018 09:24 AM

நம்பி நாராயணனுக்கு இழப்பீடு மட்டும் போதாது

விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது கேரள போலீஸார் தொடர்ந்த உளவு வழக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. நிரபராதியான அவரை வேண்டுமென்றே பொய் வழக்கில் சிக்க வைத்ததற்காக அவருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவானது ஆறுதல் அளித்தாலும், அறிவியல் துறையில் முக்கியப் பொறுப்பில் இருந்தவருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால், சாமானியர்களுக்கு இந்நாட்டில் என்ன கதி எனும் கேள்வியும் எழுகிறது.

மாலத்தீவு உளவுப் பிரிவைச் சேர்ந்த மரியம் ரஷீதா, பவுஸியா உசேன் மூலம் இந்திய ராக்கெட் தொழில்நுட்பங்களை ரஷ்யா, பாகிஸ்தானுக்கு விற்றதாகவும், உளவு பார்த்ததாகவும் நம்பி நாராயணன் உட்பட மூன்று விஞ்ஞானிகள் 1994-ல் கைதுசெய்யப்பட்டனர். இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த சிபிஐ, “குற்றசாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை; வழக்கை முடிக்கலாம்” என்று பரிந்துரைத்தது. வெறும் சந்தேகத்தின்பேரிலான வழக்கு என்று கூறி, வழக்கிலிருந்து நம்பி நாராயணன் விடுவிக்கப்பட்டாலும் பெரிய பொறுப்புகள் ஏதும் தரப்படாமலேயே 2001-ல் அவர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். எல்லையற்ற அவமானங்களைச் சந்தித்தார். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காகவும் நேர்ந்த அவமானத்துக்காகவும் இழப்பீடு கோரி அவர் தொடுத்த வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் இந்த இழப்பீட்டைத் தர உத்தரவிட்டிருக்கிறது.

இந்த விவகாரம் இதோடு முடித்துவிடக் கூடியது அல்ல. கேரளக் காவல் துறையும் அரசும் இதில் நடந்துகொண்ட விதம் மோசமானது. வழக்கை முடிக்குமாறு சிபிஐ அறிக்கை அளித்த பிறகும், மீண்டும் கேரள போலீஸார் மூலம் விசாரணையைத் தொடர அற்பத்தனமான முயற்சிகள் எடுக்கப்பட்டன. யாரெல்லாம் நம்பி நாராயணனுக்கு எதிராக அரசுத் தரப்பிலும் அவருடைய துறையிலும் நடந்துகொண்டார்கள் என்பது வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். சட்டத்தின் முன் அவர்கள் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். காவல் துறை நடைமுறைகளையும் விதிகளையும் கட்டாயம் மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

நம்பி நாராயணின் கல்வி, குடும்பப் பின்னணி, நிதியாதாரம் காரணமாக இப்படியொரு வழக்கைத் தொடுத்து அவரால் நீதி பெற முடிந்திருக்கிறது. ‘இஸ்ரோ விஞ்ஞானி’ என்பதால் இந்த வழக்கில் ஊடகங்களின் கவனமும் குவிந்தது. சாமானியராக இருந்தால், இது சாத்தியமா.. நம்பி நாராயணின் கதி என்னவாகியிருக்கும்.. எப்படிப்பட்ட குற்றச்சாட்டாக இருந்தாலும் காவல் துறையில் ஒரு அதிகாரி விசாரணை நடத்தும் விதத்தை இன்னொரு உயர் அதிகாரி கண்காணிப்பதும், மனித உரிமைகள் மீறப்படாமல் காப்பதும் அவசியம். நம்பி நாராயணனுக்கு இழப்பீடு அறிவித்த கையோடு, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் உச்ச நீதிமன்றம் தண்டனை விதித்திருக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் சட்டத்தைத் தங்கள் கையில் எடுக்க எவரும் அஞ்சுவார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x