Published : 05 Sep 2018 09:23 AM
Last Updated : 05 Sep 2018 09:23 AM

ஆயுத இறக்குமதியில் நிதானமான அணுகுமுறை தேவை

அமெரிக்காவிடமிருந்து ரூ.46,000 கோடி மதிப்புக்குக் கொள்முதல் செய்ய ஒப்புதல் தந்துள்ளது இந்திய ராணுவக் கொள்முதல் கவுன்சில். இதனால், இரு நாடுகளுக்கிடையே உறவு வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இரு நாடுகளும் எவ்வித ராணுவ ஒத்துழைப்பை வைத்துக்கொள்ளப்போகின்றன என்பது தெளிவாகப் பேசிக்கொள்ளப்படாததால், இதற்கான ஒப்புதல் இறுதி செய்யப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க அரசு, அவ்வப்போது விதித்துவரும் நிபந்தனைகளுக்கு வளைந்துகொடுக்காமல் இவற்றை நிறைவேற்றிக்கொள்வதில் இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும்.

கடற்படையின் தேவைக்காக ரூ.21,000 கோடி செலவில் 111 ஹெலிகாப்டர்கள் வாங்குவது என்ற முக்கிய முடிவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இரு நாடுகளின் வெளியுறவு, பாதுகாப்புத் துறை (ராணுவ) அமைச்சர்களும் செப்டம்பர் 6-ல் சந்தித்துப் பேசவுள்ள நிலையில், ராணுவத்துக்கான கொள்முதல் குழு கூடி, சில உத்தேச முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

பெரிய பாதுகாப்புக் கூட்டாளியாக இந்தியாவைக் கருதத் தொடங்கியிருக்கும் அமெரிக்க அரசின் ராணுவ வியூகத்துக்கு ஏற்றதாக, இந்த பேரங்களும் ஒப்பந்தங்களும் அமையவிருக்கின்றன. அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய பாதுகாப்புக் கூட்டாளியாக இந்தியா மாறிவிட்டால், உயர் தொழில்நுட்பங்களைக் கொண்ட சாதனங்களை விற்பதற்கும் உரிமங்கள் அளிப்பதற்குமான நடைமுறைகளை அமெரிக்கா எளிமைப்படுத்திவிடும். ‘இந்தியப் பெருங்கடல் பகுதியிலும் எல்லைப் பகுதிகளிலும் இந்தியாவுடனான ராணுவ உறவை வலுப்படுத்தவும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் நமது தலைமைப் பங்கை உறுதிப்படுத்தவும் இந்தியாவுடன் தோழமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று 2017 டிசம்பரில் வெளியிட்ட தேசியப் பாதுகாப்பு உத்தியில் அமெரிக்கா வலியுறுத்தியிருக்கிறது.

இதில், ஒரு முக்கியப் பிரச்சினையைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. தனக்குப் போட்டியாளர்களாக இருக்கும் நாடுகளுடன் உறவு வைத்துள்ள நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறுகிறது அமெரிக்கா. இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து கொள்முதல் செய்வதற்குத் தடைகள் அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பதை இந்தியா உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். எந்தத் தருணத்திலும் இந்தியா தன்னுடைய பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கைகளைப் பிற நாடுகளின் நிபந்தனைகளுக்கு ஏற்ப வளைத்துக்கொள்ள சம்மதிக்கக் கூடாது. நம்முடைய வெளியுறவு, ராணுவக் கொள்கைகள் சுதந்திரமாகவே இருக்க வேண்டும். அதைவிட முக்கியம், ராணுவத்துக்குத் தேவைப்படுவனவற்றில் பெரும்பகுதியை உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை எடுப்பது. ஒவ்வோர் ஆண்டும் தனது ராணுவத் தேவையில் பெரும் பகுதியை இறக்குமதி செய்யும் நாடு வல்லரசாகிவிடாது என்பதை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x