Published : 24 Sep 2018 08:50 AM
Last Updated : 24 Sep 2018 08:50 AM
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விசாரிக்க சென்னை உட்பட 12 சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை உடனுக்குடன் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதன் மூலமாக குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதையும், தொடர்ந்து பதவிகளில் நீடிப்பதையும் தடுக்க முடியும். அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சியினர் மீது போடப்படும் பொய் வழக்குகளுக்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்றொரு சட்ட முதுமொழி உண்டு. சாமானியர்களுக்கு அது மறுக்கப்பட்ட நீதி. அரசியல்வாதிகளின் விஷயத்திலோ அது சலுகையாகத்தான் இருந்துவருகிறது. நீதித் துறையின் உள்கட்டமைப்பில் இருக்கும் போதாமையைப் பயன்படுத்திக்கொண்டும் அரசியல் செல்வாக்கைத் தவறான வழிகளில் கையாண்டும் அரசியல்வாதிகள் தங்கள் மீதான வழக்குகளின் விசாரணைகளை முடிக்கவிடாமல் காலத்தை நீட்டிக்கிறார்கள்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கே இதற்கு ஓர் உதாரணம். 1991-96 ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா தன்னுடைய வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்தார் என்று 1996 ஜூன் 14-ல் தொடரப்பட்ட வழக்கு, 2017 பிப்ரவரி 14-ல் அளிக்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகுதான் முடிவுக்கு வந்தது. இடைப்பட்ட காலத்தில், சாட்சிகள் வாக்குமூலத்தை மாற்றிச் சொன்னார்கள், அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்தார்கள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கு விவரங்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தரச் சொன்னார்கள், தமிழகத்திலிருந்து கர்நாடகத்துக்கு விசாரணை மாறியது, மேல்முறையீடுகள் தொடர்ந்தன. எவ்வளவு முடியுமோ அவ்வளவு காலம் இந்த வழக்கு விசாரணை தாமதப்படுத்தப்பட்டது. இதற்கிடையில், ஜெயலலிதா தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழக முதல்வராகவும் பதவி வகித்திருக்கிறார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது 178 சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. உத்தர பிரதேசத்துக்கு அடுத்தபடியாக மக்கள் பிரதிநிதிகள் மீது அதிக குற்றவியல் வழக்குகள் நிலுவையிலிருப்பது தமிழகத்தில்தான். உத்தர பிரதேசத்தில் 324 பேரின் மீது வழக்குகள் இருக்கின்றன. குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதில் உச்ச நீதிமன்றம் உறுதியாக இருக்கிறது. குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட பிரதிநிதிகளை உடனடி தகுதி இழப்பிலிருந்து பாதுகாக்கும் சட்டப் பாதுகாப்பை நீக்கி 2013-ல் தீர்ப்பளித்தது. மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கு விசாரணைகளை ஓராண்டு காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும் 2014-ல் உத்தரவு பிறப்பித்தது.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி ஓராண்டு காலத்துக்குள் மக்கள் பிரதிகள் மீதான விசாரணைகள் உடனடியாக நடத்தி முடிக்கப்படவில்லை என்பதையும் தற்போது கவனத்தில் கொள்ள வேண்டும். தனி நீதிமன்றங்கள் அமைத்தால் மட்டும் போதாது. விசாரணைகளும் விரைந்து நடக்க வேண்டும். அரசியல்வாதிகளும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதிக வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், கூடுதல் நீதிமன்றங்களுக்கான தேவை குறித்தும் பரிசீலிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT