Published : 05 Mar 2018 10:27 AM
Last Updated : 05 Mar 2018 10:27 AM
டி
சம்பருடன் முடிந்த மூன்றாவது காலாண்டில் மொத்த உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 7.2% அளவுக்கு உயர்ந்திருக்கிறது என்று மத்தியப் புள்ளிவிவர அலுவலகம் (சிஎஸ்ஓ) வெளியிட்டுள்ள பொருளாதாரத் தரவுகள் தெரிவிக்கின்றன. இரண்டாவது காலாண்டில் ஜிடிபி 6.5% ஆக இருந்த நிலையில், இது நம்பிக்கையூட்டும் விஷயம். முதலீடுசெய்வதற்கான சேமிப்பும் உயர்ந்துள்ளது. துறைவாரியான மொத்த மதிப்புக் கூட்டலும், முந்தைய காலாண்டைவிட பரவலாக எல்லா துறைகளிலும் மதிப்பு உயர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. எனினும், அரசு கவனிக்க வேண்டிய முக்கியப் பிரச்சினைகள் கவனம் பெறாமலே உள்ளன.
2016-ல் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில்தான், (ரூ.1,000, ரூ.500) பணமதிப்புநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் உற்பத்தி, விநியோகத் துறைகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. இந்நிலையில், முழு நிதியாண்டில் தேசிய வருமானம் எவ்வளவாக இருக்கும் என்று சிஎஸ்ஓ கணித்துள்ள இரண்டாவது முன் கணிப்புகள், அதிக ஏற்ற – இறக்கங்கள் இனி இருக்காது என்பதை உணர்த்துகின்றன. 2017-18-ம் ஆண்டுக்கான ஜிடிபி, மொத்த மதிப்பு கூடுதல் (ஜிவிஏ) அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் நிகர வரி வருமானம் சற்றே குறையும் என்று தெரிகிறது. ஜிஎஸ்டி மூலமான வரி வருவாய் தொடர்ந்து அதிகரிக்காமல் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. மொத்த மதிப்பு கூடுதல் அதிகரித்தாலும் மொத்தம் உள்ள ஐந்து பொருளாதாரத் துறைகளில் மூன்றில் வளர்ச்சி வேகம் சரியில்லை என்று தெரிகிறது.
விவசாயத் துறையில் வளர்ச்சி வீதம் 3%. இது கடந்த நிதியாண்டில் 6.3%. உற்பத்தித் துறையில் வளர்ச்சி 5.1% ஆக இருக்கும். 2016-17 திருத்திய மதிப்பீட்டில் இது 7.9% ஆக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. சமீபத்தில் கணிக்கப்பட்ட தொழில் துறை உற்பத்தி குறியீட்டெண்படி, ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் உற்பத்தியானது அதற்கு முந்தைய ஒன்பது மாதங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கியிருக்கிறது. உற்பத்தித் துறையில் வளர்ச்சியானது பிப்ரவரி மாதத்தில் மந்தமடைந்திருப்பது கவலையை அளிக்கிறது.
அரசுத் தரப்பிலிருந்துதான் செலவுகள் அதிகமாகியுள்ளனவே தவிர தனியார் துறையில் இறுதி நுகர்வுச் செலவு அதிகரிக்கவில்லை. இதில் இன்னொரு பிரச்சினை இருக்கிறது. அரசு தன்னுடைய செலவை இதற்கும் மேல் அதிகரிக்க முடியாது. அப்படிச் செய்தால் அரசின் நிதிப் பற்றாக்குறை அனுமதிக்கப்பட்ட அளவை மிஞ்சிவிடும். அது நிதி நிர்வாகத்துக்கு நல்லதல்ல. ஜனவரி இறுதியிலேயே அரசின் நிதிப் பற்றாக்குறை அனுமதித்த அளவைவிட அதிகரித்து, 113% ஆகியிருக்கிறது. இதற்கும் மேல் அரசு செலவு செய்தால் விலைவாசிகள் உயரும். வங்கித் துறையில் வாராக்கடன் பிரச்சினை தொடரும் அதே நேரத்தில் பெரிய பெரிய நிதி மோசடிகளும் தாக்கத் தொடங்கியிருக்கின்றன. உலக வர்த்தகத்தில் இந்திய ஏற்றுமதியாளர்கள் அதிக அளவில் பங்கேற்க முடியவில்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது பொருளாதாரம் இன்னமும் சிக்கல்களிலிருந்து விடுபட்டுவிடவில்லை என்றே தெரிகிறது. அரசு விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT