Published : 09 Mar 2018 10:22 AM
Last Updated : 09 Mar 2018 10:22 AM

சிலை அரசியல்: என்று முடிவுக்கு வரும் சகிப்பின்மை வெறி?

தி

ரிபுரா சட்ட மன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த அடுத்த கணமே, அங்கு லெனின் சிலைகள் அகற்றப்பட்டிருப்பதும் அதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடங்கியிருக்கும் தொடர் சம்பவங்களும் பைத்தியக்காரத்தனமானவை; கடுமையான கண்டனத்துக்கு உரியவை!

மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புவதும், மாற்றுக் கட்சிகளைத் தேர்ந்தெடுப்பதும் அவர்களிடம் அளிக்கப்படும் வாக்குறுதிகளுக்காகவும், மேம்பட்ட நிர்வாகத்துக்காகவும்தானே தவிர, தத்தமது மனதுக் குள் வைத்திருக்கும் வன்மத்தை வெளிப்படுத்திக்கொள்ள அல்ல. ஆனால், ஆட்சியதிகாரம் மாறும்போது முந்தைய ஆட்சியாளர்கள் உருவாக்கிய நினைவுச் சின்னங்கள் மீது தங்கள் காழ்ப்பைக் காட்டும் சின்னத்தனம் வரலாறு நெடுகிலும் நடந்துகொண்டே இருக்கிறது. சுதந்திரத்துக்கு எழுபதாண்டுகள் பின்னரும் வட கிழக்கு மாநிலங்கள் இன்னமும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன. மத்திய அரசின் நிதியையே பெரும் ஆதாரமாக எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. திரிபுராவில் இன்று ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்கு மிக முக்கியமான காரணம், வேலைவாய்ப்பின்மை. அது திரிபுராவைத் தாண்டியும் வட கிழக்கு முழுவதும் சூழ்ந்திருக்கும் சிக்கல். வட கிழக்கிலும் தன்னுடைய ஆட்சியை விரித்திருக்கும் பாஜக அங்கு கவனம் செலுத்தப் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால், இது மோசமான ஒரு தொடக்கமாக அமைந்துவிட்டது.

திரிபுரா சம்பவம் மோசமான ஒரு தொடர்ச்சியை ஏற்படுத்தி யிருக்க வேண்டியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ட்விட் செய்த அம் மாநில ஆளுநர் ததாகத ராய், “புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, முந்தைய அரசின் நடவடிக்கைகளை மாற்றுவது சகஜமானது” என்ற பொருள்பட கருத்துத் தெரிவித்திருந்ததை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். பாஜகவின் தேசியச் செயலரான ஹெச்.ராஜா, “தமிழகத்திலும் ஈவெராவின் சிலைகளும் இப்படி அகற்றப்படும்” என்று ட்வீட் செய்ததை இன்னொரு உதாரணமாகச் சொல்லலாம். தமிழ்நாட்டில் பெரியார் சிலை, உத்தர பிரதேசத்தில் அம்பேத்கர் சிலை, வங்கத்தில் ஷியாம பிரசாத் முகர்ஜி சிலை, கேரளத்தில் காந்தி சிலை ஆங்காங்கே தலைவர்களின் சிலைகள் வினை - எதிர்வினையாக தாக்குதலுக்குள்ளானதை அடுத்த உதாரணமாகச் சொல்லலாம்.

எல்லையற்ற வெறுப்பையும் தொடர் விளைவுகளையும் சமூகத் தில் ஏற்படுத்திவிடக் கூடியவை இவை. துளியும் அனுமதிக்கப்படக் கூடாதவை. நல்ல வேளையாகப் பிரதமர் மோடி இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு இதைக் கண்டித்தார். சிலைகள் மீதான தாக்குதல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருப்பது இது ஒரு போக்காகத் தொடரும் அபாயத்தை முடிவுக்குக் கொண்டுவர உதவும்.

ஆனாலும், அருவருக்கத்தக்க இத்தகைய செயல்பாடுகளுக்கு முற்றிலுமாக முடிவுகட்டுவது அரசியல் கட்சிகளின் கைகளிலேயே இருக்கிறது. தங்கள் பொறுப்பென அரசியல் கட்சிகள் இதை எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். ஆட்சியதிகாரத்தைக் கையில் வைத்திருப்பதால் முக்கியமாக ஆளுங்கட்சி முதல் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x