Published : 12 Mar 2018 09:55 AM
Last Updated : 12 Mar 2018 09:55 AM

மரணத்திலும் கண்ணியம்: கருணைக் கொலைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

னி உயிர் பிழைக்கவே முடியாது என்ற நிலையில், வலியும் துயரும் மிக்க சிகிச்சையை நிறுத்திக்கொண்டு கண்ணியமான முறையில் ஒருவர் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. இத்தீர்ப்பானது கடுமையான விபத்தில் அடிபட்டு ‘கோமா’ நிலைக்குச் சென்றவர்களுக்கும் தீராத வியாதிகளுக்கு ஆட்பட்டவர்களுக்கும் கண்ணியமான இறப்புரிமையை வரையறைக்கும் சட்டக் கட்டமைப்பை ஏற்படுத்தத் தூண்டுகோலாக அமைந்துள்ளது.

கண்ணியமாக வாழ்வதற்கான உரிமை என்பது கண்ணியமாக இறப்பதையும் உள்ளடக்கியது என்ற கருத்தின் அடிப்படையில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இத்தீர்ப்பை அளித்துள்ளது. தெளிந்த மனநிலையில் உள்ளவர்கள், இறுதிக்காலத்தில் தங்களுடைய சிகிச்சை குறித்து அவர்களே தீர்மானித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். அப்படியே நோயாளி கோரிக்கை வைத்தாலும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு பரிசீலித்து ஒப்புதல் தருவது அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி சிகிச்சை இல்லை, வாழப்போவதே செயற்கையாகத்தான், மரணத்தைவிட சிகிச்சைதான் வலியை அதிகம் தரும் என்ற நிலையில்தான் முடிவுகள் எடுக்கப்படும்.

2011-ல் அருணா செண்பக் வழக்கில், கருணைக் கொலையை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு அங்கீகரித்தது. மருத்துவ செவிலியரான அருணா, மருத்துவமனைப் பணியாளரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கடுமையாகத் தாக்கப்பட்டதால் நினைவிழந்தார். மருத்துவமனையிலேயே 42 ஆண்டுகள் சக செவிலியர்களால் கவனிக்கப்பட்டுவந்தார். இறுதியில் 2015-ல் நினைவு திரும்பாமலேயே இறந்தார். அப்போது நீதிமன்றத்தால் ஏற்கப்பட்ட ‘கருணைக் கொலை’ (யூதனேஷியா) என்ற கருத்து தற்போது மேலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

நோயாளி தனது நினைவை இழப்பதற்கு முன்னால், தனக்குள்ள நோயையும் அதற்கு இனி சிகிச்சை இல்லை என்பதையும் உணர்ந்துகொண்டால், தெளிந்த மனநிலையில் அடுத்தகட்ட சிகிச்சைகுறித்து அவரே தீர்மானித்து மருத்துவர்களிடம் தெரிவித்துவிடலாம் என்பதே புதிய தீர்ப்பின் முக்கிய அம்சம். இதில் செயற்கை சுவாசம், செயற்கைச் சீறுநீரகச் செயல்பாடு போன்ற உயிர்க் காப்பு மருத்துவ உதவிகள் விலக்கப்பட்டு நோயாளி இயல்பாக மரணம் அடைய அனுமதிக்கப்படுவார். இதைக் கருணைக் கொலை என்பதுகூட பொருத்தமற்றது. மருத்துவத் துறை முன்னேறியிருக்கிறது என்பதற்காக செயற்கையான முறையில், வாழ்வதைப் போல காட்டிக்கொண்டிருப்பதே அவருடைய கண்ணியத்தைக் குலைப்பதுதான் என்று தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கண்ணியமாக மரணிப்பதற்கு நோயாளி அளிக்கும் அனுமதி தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது என்று அரசு சுட்டிக்காட்டியது. ஆனால் முன்கூட்டியே நோயாளியின் கட்டளைகளைப் பெற்று சிகிச்சையை நிறுத்துவதை அனுமதிக்கலாம் என்ற தங்களுடைய யோசனைக்குக் காரணம், நாம் செய்வது சட்டப்பூர்வ செயலைத்தான் என்று மருத்துவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படத்தான் என்று உச்ச நீதிமன்ற அமர்வு விளக்கியுள்ளது. அரசியல் சட்டத்தின் 142-வது கூறின் வாயிலாக, இத்தீர்ப்புக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றம் இதைப் பரிசீலித்து உரிய சட்டம் இயற்றும்வரை இத்தீர்ப்பு செல்லுபடியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x