Published : 30 Mar 2018 09:45 AM
Last Updated : 30 Mar 2018 09:45 AM
தி
ருமண வயதுள்ள ஆணும் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்தால், அதில் தலையிடுவதற்கோ, பிரித்துவைப்பதற்கோ காப் பஞ்சாயத்து எனப்படும் கட்டப் பஞ்சாயத்து அல்லது சாதிப் பஞ்சாயத்துக்கு உரிமையில்லை என்றும், அப்படிச் செய்வது சட்டவிரோதம் என்று தெரிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இதுதொடர்பாக, மத்திய, மாநில அரசுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கியிருக்கிறது. ஆணவக் கொலைகள் அதிகரித்திருக்கும் சூழலில், வரவேற்கத்தக்க தீர்ப்பு இது.
குடும்ப கெளரவம், சாதிப் பெருமை என்ற போர்வையில் பல குற்றச்செயல்கள் நடத்தப்படுகின்றன. சாதி, குலம், கோத்திரம் பெயரில் காதல் திருமணங்கள் தடுக்கப்படுகின்றன. தடையை மீறிச் செயல்படுவோர் தாக்கப்படுகின்றனர். ஆணவக் கொலைகள் நடக்கின்றன. ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான இகழ்ச்சியான மனப்பான்மை, நிலவுடைமை அமைப்பு, ஆணாதிக்கம் சார்ந்த அணுகுமுறை போன்றவை இந்த அநீதிகளுக்குக் காரணமாக உள்ளன. சட்டம் இயற்றுவதன் மூலமோ நீதித் துறையின் ஆணை மூலமோ இதை ஒரே நாளில் மாற்றிவிட முடியாது என்றாலும் எத்தனையோ முற்போக்கு நடவடிக்கைகளைப் படிப்படியாக அமல்படுத்தியதைப்போல இதையும் செய்ய முடியும்.
சாதி மறுப்பு அல்லது காதல் திருமணம் என்பது வயது வந்த ஆண், பெண் ஆகியோருக்கு அரசியல் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமை. காதல் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகளைப் பாதுகாப்பது தொடர்பாக ஏற்கெனவே சில உத்தரவுகளை பஞ்சாப்-ஹரியாணா, சென்னை உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. தற்போது உச்ச நீதிமன்றம் காதல் திருமணம் செய்த ஜோடிகள் பாதுகாப்பாகத் தங்க தனி இல்லங்களையே ஏற்படுத்த வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது. சட்டத்துக்குப் புறம்பான முடிவுகளை எடுக்கக் கூடாது என்று காப் பஞ்சாயத்துகளை காவல் துறை வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ள நீதிமன்றம், அப்படிப்பட்ட பஞ்சாயத்துகள் கூடாமல் தடுக்கவும் அப்படியே கூடினாலும் எந்த முடிவையும் எடுக்க விடாமல் கைதுசெய்யவும் காவல் துறையினருக்கு அதிகாரம் அளித்திருக்கிறது.
காப் பஞ்சாயத்துகளின் கூட்டங்களை வீடியோ காட்சிகளாகப் பதிவுசெய்வது எந்த அளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை. எனினும், அப்படி எடுப்பதால், சட்டத்தை மீறி முடிவெடுக்கும் துணிச்சல் காப் பஞ்சாயத்துகளுக்கு வராது. பொருந்தாதத் திருமணங்களைத் தடை செய்ய விழிப்புணர்வு ஊட்டத்தான் காப் பஞ்சாயத்துகள் கூடுகின்றன என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. எந்த வகைத் திருமணங்கள் செல்லும், எவை செல்லாது என்பதைத் தீர்மானிக்க வேண்டியவை சிவில் நீதிமன்றங்கள்தானே தவிர கட்டப் பஞ்சாயத்துகள் அல்ல.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டால் ஆணவக் கொலைகள் குறைந்துவிடும். அத்துடன், தனிப்பட்ட திருமண உரிமைகளில் தலையிடுபவர்களையும், கொலைக்குக் காரணமாக இருப்பவர்களையும் கடுமையாகத் தண்டிக்க விரைந்து சட்டம் இயற்ற வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சமூக அநீதிகளை வேருடன் களைய முடியும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT