Published : 23 Mar 2018 09:33 AM
Last Updated : 23 Mar 2018 09:33 AM

பிணைக்கைதிகள் விஷயத்தில் அரசு அலட்சியம் காட்டக் கூடாது!

இரா

க்கின் மோசுல் நகரில், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற அறிவிப்பு அனைவரையும் கடும் கோபத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. பொது சவக் குழியில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு உள்ளிட்ட உடல் பாக மிச்சங்களை மரபணு ஆய்வுக்கு உட்படுத்தியபோது, ஒருவரைத் தவிர, ஏனையோருடையது பொருந்தியிருந்தது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

2014 ஜூனில் மோசுல் நகரைக் கைப்பற்றிய ஐஎஸ் பயங்கரவாதிகள், 40 இந்தியக் கட்டிடத் தொழிலாளர்களைப் பிணைக் கைதிகளா கப் பிடித்து வைத்துக்கொண்டனர். ஒரு கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் தாங்கள் சிறைவைக்கப்பட்டிருப்பதாகவும் வீதியில் சண்டை நடப்பதாகவும் கடத்தப்பட்டவர்கள் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல் இந்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டு, பிணை வைக்கப்பட்டவர்களை மீட்குமாறு கோரப்பட்டது. பிணைக்கைதிகளில் ஒருவரான ஹர்ஜித் மாசி, பயங்கரவாதிகளுக்குத் தெரியாமல் அங்கிருந்து தப்பி, வங்கதேசக் கட்டிடத் தொழிலாளர்களுடன் பாதுகாப்பாக வெளியேறிவிட்டார். தன்னைத் தவிர, எஞ்சிய 39 பேரையும் ஐஎஸ் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றுவிட்டனர் என்று அப்போதே அவர் தெரிவித்தார். ஆனால், இந்திய அரசு அவர் சொன்னதை ஏற்கவேயில்லை. அவர் பொய் சொல்கிறார் என்று குற்றம்சாட்டியது. கடத்தப்பட்டவர்கள் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களை மீட்டுவிட முடியும் என்றும் தொடர்ந்து தெரிவித்தது. கடந்த ஆண்டு மோசுல் நகரை இராக்கிய ராணுவம் மீண்டும் கைப்பற்றிய பிறகுதான், ஐஎஸ் பயங்கரவாதிகளிடமிருந்த பகுதிகள் மீட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து இந்தப் பொது சவக்குழியும் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

பிணைக்கைதிகள் தொடர்பாக இராக், சிரியா, துருக்கி அரசு களுடன் மத்திய அரசு தொடர்ந்து விசாரித்ததை மறுப்பதற்கில்லை. ஆனால், ஹர்ஜித் மாசி சொன்னது உண்மையல்ல என்று கருதி நிராகரித்ததுதான் அது செய்த மிகப் பெரிய தவறு. அந்த 39 பேரையும் ஒரு கட்டுமான இடத்தில் பார்த்ததாகவும், மோசுலில் ஒரு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர் என்றும், மோசுல் நகரின் வெளிப்புறத்தில் இருக்கும் படுஷ் என்ற கிராமத்தில் பார்த்ததாகவும்கூடத் தெரிவிக்கப்பட்டது. வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அங்கு சென்று தீவிர விசாரணை நடத்திய பிறகுதான் 39 பேர் இறந்துள்ளது தெரிந்தது. படுஷ் கிராமத்திலிருந்து ஒரு சிறைக்கூடத்தை ஐஎஸ் பயங்கரவாதிகள் ஆரம்பத்திலேயே அழித்துவிட்டதும் தெரியவந்திருக்கிறது.

இவ்விஷயத்தில் அரசு செய்திருக்கும் இன்னொரு தவறு, இந்தத் தகவல்களை, இறந்தவர்களின் குடும்பத்தாரிடம் தெரிவித்து ஆறுதல் கூறாமல், நாடாளுமன்றத்தில் அவசர அவசரமாக வெளியிட்டதுதான். போலியான முகவர்களை நம்பி, மோதல்கள் நிகழும் இராக் போன்ற நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர் கள் ஆபத்தில் சிக்குவதைத் தடுக்க இனியாவது உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தாருடைய பொருளாதாரத் தேவைகளை அரசு உடனடியாகக் கவனிக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x