Published : 22 Mar 2018 09:35 AM
Last Updated : 22 Mar 2018 09:35 AM
பா
ஜக, காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவ், இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த முயற்சிக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்திருக்கிறார். பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியிருக்கும் சமயத்தில், மூன்றாவது அணிக்கான முயற்சிகள் தொடங்கி யிருப்பது கவனிக்கத்தக்கது.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகளை ஒரு புறத்திலும், பாஜகவை இன்னொரு புறத்திலும் எதிர்த்துக்கொண்டிருக்கும் மம்தா பானர்ஜி சந்திரசேகர் ராவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதில் வியப்பேதும் இல்லை. எனில், இப்படி அமைக்கப்படும் கட்சிகளின் கூட்டணிகளுக்கு மக்களிடையே தேசிய அளவில் ஆதரவு பெருகிவிடாது. ஒன்பதாவது, பதினொன்றாவது மக்களவைகளில்தான் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத அரசுகள் ஆட்சிக்கு வந்தன. இந்த அரசுகள் அனைத்துமே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட கூட்டணிகள்தான்.
பரஸ்பரம் மற்ற கட்சியை ஆட்சியிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் என்பதற்காகவே, சிறிய கட்சிகள் அடங்கிய அணியை பாஜகவோ, காங்கிரஸோ வெளியிலிருந்து ஆதரிக்கும் என்பது நிச்சயமில்லை. சந்திரசேகர் ராவ் அமைக்க நினைக்கும் அணி நிச்சயம் வலுவான தேர்தல் கூட்டணியாக இருக்காது என்றே தெரி கிறது. அவர் உத்தேசித்துள்ள கட்சிகளின் வாக்கு வங்கிகள் அந்தச் சிறிய கட்சிகளுக்கே பொதுவானவை; கூடுதல் வலுவாகக்கூடிய வாக்கு வங்கிகள் அல்ல. மேலும், திரிணமூல் காங்கிரஸுக்கும் தெலங்கானா ராஷ்டிர சமிதிக்குமே பொதுவான அம்சம் என்று ஏதும் இல்லை, பாஜக - காங்கிரஸ் எதிர்ப்புணர்வு என்பதைத் தவிர!
காங்கிரஸை முக்கிய எதிர்க்கட்சியாகவும் பாஜகவை அடுத்து ஆபத்தைத் தரக் காத்திருக்கும் கட்சியாகவும் கொண்டிருக்கும் தெலங்கானா ராஷ்டிர சமிதியானது அந்த மாநிலத்தைத் தவிர, வேறு எங்கும் செல்வாக்குப் பெற்றது அல்ல. தேசிய அரங்கில் தானும் இடம்பிடிக்க ஒரு வாய்ப்பாகத்தான் மூன்றாவது அணியை உருவாக்கப் பார்க்கிறார் சந்திரசேகர் ராவ். தெலங்கானா, ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களிலும் 2019-ல் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்துத்தான் சட்ட மன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. தேசிய அளவிலான முக்கியக் கூட்டணியில் இடம்பெறாமல், நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரப் பங்கேற்பாளராக தெலங்கானா ராஷ்டிர சமிதியால் பாசாங்கு செய்ய முடியாது. எல்லா விதங்களிலும் மம்தா பானர்ஜிக்கும் சந்திரசேகர் ராவுக்கும் இடையிலேயே பொதுவான, ஏற்கும்படியான அரசியல் பொருத்தப்பாடுகள் மிகவும் குறைவு.
காங்கிரஸைத் தொலைவில் வைக்க வேண்டும் என்பதில் சந்திரசேகர் ராவ் தீவிரமாக இருக்கிறார். அப்படியொரு தீவிரம் தனக்கு இருப்பதாக மம்தா பானர்ஜி காட்டிக்கொள்ளவில்லை. திரிணமூல் காங்கிரஸைப் பொறுத்தவரை இடதுசாரிகளும் பாஜகவும்தான் ஆபத்தான கட்சிகள். தேசிய அரங்கில் காங்கிரஸுடன் மம்தாவால் இணைந்து செயல்பட முடியும். 2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக, காங்கிரஸுக்குக் கிடைக்கும் இடங்களைப் பொறுத்துத் தான் மூன்றாவது அணியை அவசர அவசரமாக உருவாக்க வேண்டியிருக்கும் என்று தோன்றுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT