Published : 08 Mar 2018 10:10 AM
Last Updated : 08 Mar 2018 10:10 AM

கொளுத்தப்போகிறது கோடை: முன் தயாரிப்புகள் அவசியம்!

ந்த ஆண்டு கோடைப் பருவத்தில் நாடு முழுவதும் பரவலாக வெயில் அதிகரிக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் அறிவுறுத்தியிருக்கிறது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம். மார்ச் முதல் மே மாதம் வரையில் உச்சபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பமே வழக்கத்தைவிட ஒரு சில செல்சியஸ் அதிகமாக இருக்கப் போகிறது. இதனால் அனல்காற்று வீசும் நாட்களின் எண்ணிக்கையும், அதன் தீவிரமும் அதிகமாக இருக்கும். வெப்பம் சிறிதளவு உயர்ந்தால்கூட ஏழைகள், நலிவுற்ற பிரிவினருக்குத் தாங்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயுற்றவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் போன்றோர் வெப்ப மயக்கத்துக்கு ஆளாவார்கள். இது உயிராபத்தையும் ஏற்படுத்தக் கூடியது.

இந்த ஆண்டு ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், உத்தராகண்ட், உத்தர பிரதேசம், இமாசல பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கோடை வெப்பம் வழக்கத்தைவிட 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கவிருக்கிறது. இதர வடக்கு, கிழக்கு, மத்திய மாநிலங்களிலும் மார்ச் 1 முதலே வெப்பம் அதிகரித்துவிட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி, ராயலசீமை பகுதிகளிலும் குறைந்தபட்ச வெப்பநிலையில் மேலும் சிறிது குறைந்திருக்கிறது. அடுத்த சில வாரங்களில் வெப்பம் குறைவாகத் தொடரக்கூடும்.

இதர பெரும்பாலான மாநிலங்களில் 2018-ன் கோடைப் பருவம் அனல் மிகுந்ததாகவே இருக்கும். வழக்கமான அளவை விட வெப்பம் அரை டிகிரி அதிகரித்தால்கூட அனல் காற்று தீவிரமாகும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். 2010 முதல் 2015 வரையிலான காலத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 1,300 பேர் முதல் 2,500 பேர் வரை அனல் காற்றால் இறந்துள்ளனர். உடலில் நீர்ச்சத்து வற்றுதல், தலைசுற்றல், வெப்ப மயக்கம், தசைப்பிடிப்பு, கட்டி-கொப்புளங்கள் தோன்றுதல், அம்மை, அக்கி போன்றவை கோடைகாலத்தில் அதிகமாகும்.

கோடையில் உண்ணக் கூடியவை, உண்ணக் கூடாதவை என உணவில் கவனம் வேண்டும். வெயில் நேரத்தில் வெளியே செல்வது, வெளிப்புறத்தில் வேலைசெய்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வெயில் நேரத்தில் பொது நிகழ்ச்சிகளைத் திறந்த வெளியில் நடத்தக் கூடாது. மருத்துவமனைகளில் வெயிலால் பாதிப்படைவோருக்கான சிகிச்சை ஏற்பாடுகளைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

கோடையில் தீ விபத்துகள் அதிகமாகும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தீக்காயங்களுக்கான மருந்துகள் தயாராக வைக்கப்பட வேண்டும். பாதுகாக்கப்பட்ட, தூய்மையான குடிநீர் வழங்கப்பட வேண்டும்.

பருவநிலை மாறுதலால்தான் இந்த வெப்ப அதிகரிப்பு என்பதால் ‘பசுங்குடில் வாயு’ வெளியேற்றத்தைக் கட்டுப் படுத்தும் நீண்ட கால நடவடிக்கைகளையும் அரசு தீவிரமாக எடுக்க வேண்டும். மக்களும் கடும் கோடை வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உரிய முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x