Published : 31 Mar 2018 09:16 AM
Last Updated : 31 Mar 2018 09:16 AM
ப
ள்ளிக்கூடங்களில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. தேர்வுகள் முடிந்ததும் கோடை விடுமுறை நாட்களை எப்படிச் செலவழிப்பது என்பதற்கான திட்டங்களை இப்போதே பெற்றோர்கள் தீர்மானிக்க ஆரம்பித்திருப்பார்கள். கோடை விடுமுறை மாணவர்களுக்குப் பொழுதுபோக்காகவும் அதேநேரத்தில் பயனுள்ள வகையிலும் இருக்க வேண்டும் என்று திட்டமிடும்போது, அதில் புத்தக வாசிப்பும் ஒரு பகுதியாக இருப்பது நல்லது.
கோடை விடுமுறை என்பது மாணவர்கள் தங்களது கல்விப் பயணத்தில் சற்றே இளைப்பாறி, ஊக்கம் பெற்று மீண்டும் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான கால இடைவெளி. அந்த ஓய்வுக் காலத்திலும், அவர்கள்மீது பாடப் புத்தகங்களின் சுமையை ஏற்றிவிடக் கூடாது. சில தனியார்ப் பள்ளிகள், கோடை விடுமுறைக் காலத்தில் அடுத்தக் கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தைப் படிக்கச்சொல்லி மாணவர்களைக் கட்டாயப்படுத்துகின்றன. மாணவர்கள் உற்சாகத்தோடு படிக்க வேண்டிய பாடங்களை, கட்டாயத்தின் பெயரில் படிக்கச் செய்வது கல்வியின்மீது இயல்பாக இருக்கும் ஆர்வத்தைச் சிதைத்துவிடும்.
கல்வி என்பது பாடப் புத்தகங்களோடு முடிந்துவிடுவதில்லை. ஆண்டு முழுவதும் பள்ளிக்கூடம் சென்று படித்துவந்த மாணவர்கள், கோடை காலத்தில் சொந்த ஊர்களுக்குச் செல்லவும், வீட்டில் உள்ள மூத்தவர்களோடு உரையாடவும் வாய்ப்பளிக்க வேண்டும். விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் நவீன வாழ்க்கையில் தலைமுறைகளுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றங்களும் அனுபவப் பகிர்தல்களும் தடைப்பட்டு நிற்கின்றன. கோடை விடுமுறைக் காலத்திலாவது, பெரியவர்களோடு குழந்தைகள் பேசவும் பழகவும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
பாடப் புத்தகங்களைத் தாண்டியும் புத்தகங்கள் இருக்கின்றன. வாசிப்பு என்பது வாழ்வின் இறுதிக் கணம் வரைக்கும் நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவும் முக்கியப் பழக்கம் என்பதை மாணவர்களுக்கு உணர்த்தவும், மாணவர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுக்கவும் கோடை விடுமுறை ஒரு முக்கிய வாய்ப்பு. மாணவர்கள் படிப்பதற்கு வாய்ப்பாக தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய சிறார் நூல்கள் வெளியிடப்பட்டுவருகின்றன. படிப்பு என்பது சுமை அல்ல, ரசனையான ஓர் அனுபவம் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள, அவர்களுக்குச் சிறார் நூல்களை அறிமுகப்படுத்துவது ஒரு நல்ல வழிமுறை.
குறிப்பாக, ரசனையைத் தூண்டும் காமிக்ஸ் நூல்கள் தமிழில் வெளிவருகின்றன. இளம்வயதில் வாசிப்பு சுவாரஸ்யத்தையும், கற்பனை ஆற்றலையும் வளர்த்தெடுப்பதில் காமிக்ஸ் நூல்களுக்கு குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. தற்போது வரலாறு, அறிவியல் என்று பல துறை நூல்களும் காமிக்ஸ் கதைப் புத்தக வடிவில் வெளியிடப்படுகின்றன. எனவே, பெற்றோர்கள், பள்ளிகளில் படிக்கும் தங்களது குழந்தைகளுக்குச் சிறார் நூல்களையும் காமிக்ஸ் புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்கலாம்.
கோடை விடுமுறைக்குத் திட்டமிட்டுள்ள சிற்றுலாத் தளங்களில் பண்பாட்டுச் சின்னங்களான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் ஒன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வாரத்தில் ஒன்றிரண்டு நாட்களேனும் பொது நூலகங்களுக்கும், அருங்காட்சியகங்களுக்கும் அழைத்துச் செல்லுங்கள். படித்து ரசித்த புத்தகங்களைப் பற்றி குழந்தைகளிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அப்படியே குழந்தைகள் படிக்கும் புத்தகத்தைப் பற்றிய வாசக அனுபவத்தையும் காதுகொடுத்து கேளுங்கள். குழந்தைகளின் அறிவுலகம் மேலும் வளம் பெறட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT