Published : 09 Apr 2019 08:24 AM
Last Updated : 09 Apr 2019 08:24 AM

நம்பிக்கையூட்டும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் கட்சி மக்களவைப் பொதுத் தேர்தலுக்காகத் தனது வாக்குறுதிகள் அடங்கிய 55 பக்க தேர்தல் அறிக்கையை ‘நாங்கள் செய்வோம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. சமூக நலனையும் வளர்ச்சியையும் உருவாக்கப் பாடுபடுவோம் என்கிறது அந்த அறிக்கை.

தனியார் தொழில் துறைக்கு ஊக்குவிப்பு அளித்து செல்வத்தை உருவாக்குவோம், நலிவுற்ற பிரிவினரின் வாழ்க்கையை இதுவரை இருந்திராத அளவுக்கு வளப்படுத்துவோம் என்கிறது காங்கிரஸ். வறுமைக்கோட்டுக்கும் கீழே இருக்கும் ஏழைகளில் 20% பேருக்கு மாதந்தோறும் ரூ.6,000 என்று ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கும் பெருந்திட்டம் இதில் முக்கியமானது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்து மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட ‘தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்’ ஆண்டுக்கு 150 நாள்களுக்கு அமல்படுத்தப்படும், அனைவருக்கும் சுகாதார மேம்பாட்டுத் திட்டம், கல்வி, வீட்டுவசதி ஆகியவை வழங்கப்படும் என்கிறது அறிக்கை.

இந்திய ஜனநாயகத்தின் தரத்தை மேம்படுத்தும் சில அம்சங்களும் வாக்குறுதிகளில் உள்ளன. அவதூறு வழக்குகள் இனி உரிமையியல் வழக்குகளாக மட்டுமே இருக்கும். தேசத் துரோகச் சட்டப் பிரிவு இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து நீக்கப்படும். மனித உரிமைச் செயல்பாட்டாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ‘ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்’ உரிய வகையில் திருத்தப்படும். ஜம்மு-காஷ்மீரத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், மனித உரிமைகள் மீறப்படாத வகையில் அமல்படுத்தப்படும். இடஒதுக்கீடு என்ற சமூகநீதித் திட்டம் இனி தனியார்த் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற நம்பிக்கையூட்டும் அறிவிப்புகளும் உள்ளன.

காங்கிரஸ் தன்னுடைய கடந்த காலத் தவறுகளிலிருந்து விடுபடத் தொடங்கியிருப்பதும் மாநிலங்களின் அபிலாஷைகளைப் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதும் இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படுகிறது - ‘நீட்’ தேர்வு தொடர்பான அதன் மறுபரிசீலனை வாக்குறுதியை இங்கே அதன் சான்றாகக் குறிப்பிடலாம். பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிடுவது அவசியம். அப்போதுதான், பொதுவெளியில் அவற்றை ஒப்பிட்டு விவாதிக்க முடியும். தேர்தலுக்கு முன்னதாக, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசுவதும் கட்சிகளின் வழக்கமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் இப்போதைய ஆளும் கட்சியை விமர்சிக்கும் காங்கிரஸ், தன்னுடைய வாக்குறுதிகள் எந்த வகையில் நிறைவேற்றப்படும், அவற்றுக்கான நிதி எப்படிப் பெறப்படும் என்றும் மக்கள் ஏற்கும் வகையில் கூறியிருக்க வேண்டும். 2004-ல் அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை காங்கிரஸ் நிறைவேற்றியது உண்மை என்றாலும் முழுதாகவோ நிறைவாகவோ அனைத்தையும் செய்ய முடியவில்லை என்பதும் உண்மை.

காங்கிரஸின் தேர்தல் அறிக்கை பிற அரசியல் கட்சிகளாலும் ஊடகங்களிலும் விவாதிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. இந்தத் தேர்தல் அறிக்கை மீது ஆக்கபூர்வமான விவாதத்தை பாஜக நடத்த வேண்டும். காங்கிரஸின் இந்த அறிக்கை எல்லா விவரங்களையும் கொண்டிருக்கவில்லை; ஆனால், அது காட்டும் திசைவழி ஊக்கம் தருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x