Published : 02 Apr 2019 09:43 AM
Last Updated : 02 Apr 2019 09:43 AM

வாக்குறுதிகள் மட்டும் போதாது: வழிமுறைகளையும் சொல்ல வேண்டும்!

பொதுத் தேர்தல் வந்தாலே எல்லா அரசியல் கட்சிகளும் வாக்குறுதி அளிப்பது வழக்கமானது. அவற்றில் ஊர்ப் பெயர் மாற்றம், ஆட்சிமுறையில் மாற்றம், அமைப்புகளில் மாற்றம் என்பதெல்லாம் அரசியல் கட்சிகளின் சமூக, அரசியல் நிலைப்பாடுகளைப் பிரதிபலிப்பவை. வேலைவாய்ப்பு, வரி விகித மாற்றம், பொருளாதாரச் சீர்திருத்தங்கள் போன்றவை மக்களுடைய அன்றாட வாழ்க்கை தொடர்பானவை மட்டுமல்ல, அதற்கான சரியான திட்டமிடலையும் கோரி நிற்பவை.

அரசின் திட்டங்களைத் தொடர்ச் செலவினம், தொடராச் செலவினம் என்று பிரிப்பது வழக்கம். விலையில்லா சைக்கிள், மடிக்கணினி, தாலிக்குத் தங்கம் போன்றவை பயனாளிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு வழங்கிய பிறகு முடிவுக்கு வந்துவிடும். கல்வி உதவித் தொகை, வேலையில்லாதோருக்கு உதவித் தொகை, கொள்முதலுக்கு ஊக்குவிப்புத் தொகை, விதை-உர மானியம் போன்றவை தொடர் செலவினங்கள். இவையும் அவசியம்தான். ஆனால், திட்டமிட்டு அறிவிக்க வேண்டும். வாக்குறுதியை அளிக்கும் முன்னால் அது எப்படிப்பட்ட செலவு என்பதை அறிந்து அறிவிக்க வேண்டும். தொடரும் செலவினங்களுக்கான கால வரம்பும் நோக்கமும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதற்கான நிதியாதாரங்கள் என்ன என்பதையும் விளக்க வேண்டும்.

எந்த ஒரு திட்டத்தைச் செய்வதற்கு முன்னாலும் அதில் செலவுசெய்யப்படவிருக்கும் தொகையை வேறு திட்டங்களுக்குச் செலவு செய்தால் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், பொருளாதார வளர்ச்சி எந்த அளவுக்கு உயரும், எத்தனைத் தொழில்களுக்கு அது உயிராதாரமாகத் திகழும் என்றெல்லாம் பார்க்க வேண்டும். தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை வழங்கும் அரசியல் கட்சிகள் அதற்கான நிதியாதாரங்கள் என்ன என்று விளக்கும்போதே இத்தகைய விவாதங்களுக்கு வாய்ப்பு அமையும்.

வருவாய் வரி இனங்கள், அரசுத் துறை நிறுவனங்கள் அளிக்கும் லாபம் அல்லது லாப ஈவுகள், அரசு அளிக்கும் சேவைகளுக்கான கட்டணங்கள், அரசின் நிலம் உள்ளிட்ட சொத்துகளுக்கான வாடகை ஆகியவற்றிலிருந்துதான் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. புதிய திட்டங்களைத் தொடங்கிவிட்டு வேறு எந்த வகை வருமானத்தையும் பெருக்கிக்கொள்ள முடியாதபட்சத்தில் பொருள்கள் மீதான வரியையும் வருமான வரி, நிறுவன வரி உள்ளிட்டவற்றையும் உயர்த்தித்தான் இந்தத் தொகையைப் பெற முடியும். ரயில் கட்டணம், மின் கட்டணம், பள்ளி-கல்லூரி கல்விக் கட்டணம், சிகிச்சைகளுக்காகும் சுகாதாரக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தித்தான் நிதியைத் திரட்ட முடியும். இப்படிப்பட்ட நிலையில் கடன் வாங்கிச் சமாளிக்கலாம். ஆனால், சர்வதேச அளவில் நம்முடைய நிதி நிர்வாகத்தின் மீதும் நாணயத்தின் மீதும் மதிப்பு சரிந்துவிடும். எனவே, தேர்தல் வாக்குறுதிகளாகப் புதிய திட்டங்களை அறிவிக்கும்போது நிதானம் சேவை. திட்டங்களின் அடிப்படை நிதியாதாரங்களே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x