Published : 07 Mar 2019 08:25 AM
Last Updated : 07 Mar 2019 08:25 AM

சரிந்துவரும் பொருளாதார வளர்ச்சி: மீட்சிக்கு வழி என்ன?

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சரிந்துவருவதை, மத்தியப் புள்ளிவிவர அலுவலகம் (சிஎஸ்ஓ) வெளியிட்டுள்ள தரவுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் ஜிடிபி வளர்ச்சி 6.6% ஆகச் சரிந்திருக்கிறது. முழு ஆண்டுக்கான ஜிடிபி 7% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வளர்ச்சி 6.5% என்று வரையறுக்கப்படுகிறது. கடந்த ஏழு காலாண்டுகளிலேயே மிகவும் மந்தமான வளர்ச்சி இது.

வட கிழக்குப் பருவமழை வழக்கமான அளவு பெய்யாமல் பற்றாக்குறை ஏற்பட்டதால் ரபி பருவத்துக்கான நடவுப் பரப்பு குறைந்துவிட்டது. அது மட்டுமின்றி விவசாயிகளுக்குள்ள அடிப்படையான சில பிரச்சினைகளும் சேர்ந்து சாகுபடிப் பரப்புக் குறைவுக்குக் காரணங்களாகிவிட்டன. வேளாண்மை, வனத் துறை, மீன்வளத் துறைகளில் வளர்ச்சியானது கடைசி காலாண்டில் 2.7% என்ற அளவுக்கு மந்தமாகிவிட்டது. கடந்த ஆண்டு 4.6% ஆக இருந்தது ஜூலை-செப்டம்பரில்கூட 4.2% ஆக இருந்தது.

இதன் காரணமாக நாட்டின் உள்பகுதிகளில், ஆலைகளில் உற்பத்தியாகும் பொருட்களுக்கான தேவை குறைந்துவிட்டது. இரு சக்கர வாகனங்களில் தொடங்கி, விவசாய டிராக்டர்கள் வரை பல நுகர்வுப் பொருட்களின் விற்பனை குறைந்துவருகிறது. மக்களுடைய நுகர்வுச் செலவுகளும் குறைந்துவிட்டன. தனி நபர்களின் நுகர்வுச் செலவு 8.4% ஆகக் குறைந்துவிட்டது. இரண்டாவது காலாண்டில் இது 9.8% ஆக இருந்தது.

தொழில் துறை உற்பத்தி தொடர்ந்து குறைவாக இருப்பது இன்னொரு பிரச்சினை. இந்தத் துறையில் வளர்ச்சி 6.7% ஆகக் குறைந்திருக்கிறது. இது இரண்டாவது காலாண்டில் நிலவிய 6.9%-ஐ விடக் குறைவு. எல்லாவற்றுக்கும் மேலாக, ஏப்ரல்-ஜூனில் 12.4% ஆக இருந்த தொழில் துறை உற்பத்தியில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கும் சரிவு ஏமாற்றமளிக்கிறது. தொழிற்சாலைகள் உற்பத்திக் குறியீட்டெண் (ஐஐபி) டிசம்பர் மாதத்தில் 2.7% ஆகச் சரிந்துவிட்டது. 12 மாதங்களுக்கு முன்னால் அது 8.7% ஆக இருந்தது.

உற்பத்தி, சேவைத் துறையில் வளர்ச்சி வேகம் குறைந்துவருவதை ரிசர்வ் வங்கியின் விரைவு ஆய்வு தெரிவித்ததால்தான் கடந்த மாதம் வங்கிகளுக்கான வட்டிவீதத்தைக் குறைத்ததாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வட்டிக் குறைப்பால் பொருட்களுக்கான நுகர்வுத் தேவை அதிகரிக்குமா என்றும் பார்க்க வேண்டும். ‘மூலதனத் திரட்டு’ என்பது முதலீட்டுத் தேவைக்கு மிகவும் முக்கியமானது. இந்த அம்சம் 10.6% ஆக உயர்ந்தது மகிழ்ச்சியளிக்கக்கூடியது. இரண்டாவது காலாண்டில் இது 10.2% ஆக இருந்தது.

பாகிஸ்தான் எல்லையில் அமைதி ஏற்படவில்லை. உலக வர்த்தக அரங்கிலும் நிச்சயமற்றத் தன்மையே தொடர்கிறது. இந்நிலையில், வளர்ச்சியை அதிகரிக்க, கூடுதலாகச் செலவு செய்யும் நிலையில் அரசு இல்லை. பற்றாக்குறையை இலக்குக்குள் அடக்க வேண்டிய சூழலே நிலவுகிறது. இப்பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை நோக்கி அரசு நகர்வதாகவும் தெரியவில்லை. மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. மக்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x