Published : 30 Jan 2019 09:58 AM
Last Updated : 30 Jan 2019 09:58 AM

குடிநீர்ப் பஞ்சத்தை இந்தக் கோடையில் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்?

வட கிழக்குப் பருவமழை பொய்த்துப்போனதன் விளைவுகளைத் தமிழகம் அடுத்துவரும் மாதங்களில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தமிழகம் முழுவதுமே இதன் தாக்கம் இருக்கப்போகிறது என்றாலும் சென்னை மாநகரம் மிக மோசமான நிலையைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. 140 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய குடிநீர்ப் பஞ்சமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஆனால், அதற்கான முன்னேற்பாடுகளைத் தமிழக அரசும் சென்னை மாநகராட்சியும் தொடங்கிவிட்டதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகள் வறண்டுகொண்டிருக்கின்றன. இந்த நான்கு ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு சுமார் 11,000 மில்லியன் கன அடி. கடந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் இந்த நான்கு ஏரிகளிலும் ஏறக்குறைய 5,000 மில்லியன் கன அடி நீர் இருந்தது. இந்த ஆண்டில் தற்போதைய நிலவரப்படி சுமார் 1,000 மில்லியன் கன அடி நீரே உள்ளது. மொத்தக் கொள்ளளவில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவான நீர் இருப்பே தற்போது உள்ளது. இது அடுத்த மாதத்துக்குள்ளேயே தீர்ந்துவிடும். அதற்கடுத்து வீராணம் ஏரியை நம்பித்தான் நாட்களை நகர்த்த வேண்டியிருக்கும். வீராணத்திலிருந்து கொண்டுவரப்படும் நீரின் அளவு நாளொன்றுக்கு 180 மில்லியன் லிட்டர் மட்டுமே. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திலிருந்து கிடைப்பதும் நாளொன்றுக்குச் சுமார் 170 மில்லியன் லிட்டர் மட்டுமே.

சென்னையின் குடிநீர்த் தேவை நாளொன்றுக்கு 830 மில்லியன் லிட்டர். கடந்த டிசம்பர் மாதத்தில் குழாய்கள் மூலமாக நாளொன்றுக்கு 650 மில்லியன் லிட்டரை விநியோகித்து வந்த சென்னைக் குடிநீர் வடிகால் வாரியம், தற்போது சுமார் 100 மில்லியன் லிட்டரைக் குறைத்துக்கொண்டிருக்கின்றது. மாங்காடு அருகே கைவிடப்பட்ட கல்குவாரிகளிலிருந்து நீரெடுத்து, சுத்திகரிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதனால், பிப்ரவரி மாதத்தின் மத்தியிலிருந்து நாளொன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் கிடைக்கும். கடலூர் மாவட்டத்தின் கடிலம் நதிக்கரையில் உள்ள கிராமங்களின் தனியார் விவசாயக் கிணறுகளிலிருந்து நீரெடுக்கும் ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எது எப்படியிருந்தாலும், தற்போதைய நீராதாரங்களைக் கொண்டு மார்ச் மாதம் வரைக்கும்தான் சமாளிக்க முடியும்.

சென்னை எதிர்கொள்ளவிருக்கும் குடிநீர்ப் பஞ்சத்தை எப்படிச் சமாளிப்பது என்ற செயல்திட்டத்தைத் தமிழக அரசு உருவாக்கி, உடனே அதைச் செயல்படுத்தும் பணியில் இறங்க வேண்டும். ஆந்திரப் பிரதேசத்துடன் பேசி கிருஷ்ணா நதிநீரைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும். பணிகள் முடிவடையாத நிலையிலிருக்கும் கழிவுநீர்ச் சுத்திகரிப்பு நிலையத் திட்டங்களைத் துரிதப்படுத்த வேண்டும். கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களை இன்னும் விரிவுபடுத்த வேண்டும். அனைத்துக்கும் மேலாக நீர்ப் பயன்பாடு, சிக்கனம் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடம் உருவாக்கியாக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x