Published : 18 Jan 2019 08:43 AM
Last Updated : 18 Jan 2019 08:43 AM
டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) வளாகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் தேச விரோத முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், ஜேஎன்யூ மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்ட 10 பேர் மீது தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், இத்தனை நாட்களுக்குப் பிறகு எடுக்கப்படும் இந்நடவடிக்கை, அரசியல் நோக்கம் கொண்டது என்று விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.
மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தேச விரோத முழக்கங்கள் எழுந்ததாகச் சொல்லப்படும் சம்பவத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் ஆச்சரியமளிக்கிறது. தீவிரமடைந்திருக்கும் மாணவர் அரசியல் எனும் அளவில் இதைப் பார்க்காமல், சட்டப் புத்தகத்தில் நீடிக்கத் தேவையில்லாததும், காலனிய ஆட்சிக் காலத்தைச் சேர்ந்ததுமான ஒரு கடுமையான சட்டத்தின் துணைகொண்டு மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அநாவசியமானது. தேச விரோத முழக்கங்களை எழுப்பியது, நாட்டின் இறையாண்மையைக் கேள்விக்குட்படுத்தியது எனும் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்று வைத்துக்கொண்டாலும், இந்தச் செயல்கள் தேச விரோதச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் அளவிலானவை அல்ல.
2016 பிப்ரவரியில் கன்னையா குமாரைக் கைதுசெய்த டெல்லி காவல் துறை, நீதிமன்றத்தில் அவர் தாக்குதலுக்குள்ளானபோது அவரைப் பாதுகாக்கத் தவறியது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது குற்றச்சாட்டுப் பதிவுசெய்யப்படவும் இல்லை. தற்போது, கன்னையா குமார் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதன் மூலம், ‘தேச விரோதம்’ என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்த விளக்கத்தையும் டெல்லி காவல் துறை தொடர்ந்து அலட்சியம் செய்கிறது. வன்முறையைத் தூண்டுவது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் தீய நோக்கத்துடன் செயல்படுவது என்று, இந்திய தண்டனைச் சட்டம் - பிரிவு 124-ஏ-யில் குறிப்பிடப்படும் எந்தச் செயலிலும் இவர்கள் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இல்லை.
பல மாணவர் சங்கத் தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ஏபிவிபி தோல்வியைச் சந்தித்துவரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எதிர்க் குரல்கள் எழுப்புபவர்கள் மீது தேச விரோதக் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படும் ஒவ்வொரு நிகழ்வின் பின்னணியிலும் அரசியல் காரணங்கள் இருக்கின்றன. பல்கலைக்கழக வளாகங்கள் என்பவை பல்வேறு தன்மைகள் கொண்ட அரசியல் கருத்துகளை வளர்த்தெடுக்கக்கூடியவை. ஆனால், அரசின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் மீது, ‘தேசத் துரோகிகள்’ என்று முத்திரை குத்தும் போக்கு தொடர்கிறது.
மாணவச் செயற்பாட்டாளர்கள் தரப்பிலிருந்து எழும் எதிர்க்குரல்களைக் குற்றத்தன்மை கொண்டவையாகச் சித்தரிக்கும் முயற்சியாகவும், எதிர்க்கருத்துகளை முன்வைப்பவர்களைக் கடும் நடவடிக்கைகள் மூலம் அச்சுறுத்தும் முயற்சியாகவும் இதைக் கருத வேண்டியிருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்கவிருக்கும் விசாரணை நீதிமன்றம், டெல்லி காவல் துறை பதிவுசெய்திருக்கும் தேச விரோதக் குற்றச்சாட்டுகள் தொடர்பான அறிக்கையை, தேச விரோதம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கொண்டுவந்த விளக்கத்தின் அடிப்படையில் அணுக வேண்டும். எதிர்க் குரல்களின் குரல்வளையை நசுக்கும் போக்குகள் தொடர அனுமதிக்கக் கூடாது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT