Published : 04 Jan 2019 08:55 AM
Last Updated : 04 Jan 2019 08:55 AM
திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என்ற தேர்தல் ஆணையத்தின் திடீர் அறிவிப்பு, மக்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கும் கேள்விகளும் எதிர்க்கட்சிகள் கேட்டிருக்கும் கேள்விகளும் எளிதில் புறந்தள்ளக்கூடியவை அல்ல.
தமிழ்நாட்டில் திருவாரூர், திருப்பரங்குன்றம் மட்டுமல்லாமல், தகுதி நீக்கப்பட்ட 18 சட்ட மன்ற உறுப்பினர்களின் தொகுதிகளோடு சேர்த்து மொத்தம் 20 தொகுதிகள் காலியாக இருக்கின்றன. ஆனால், திருவாரூர் தொகுதிக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது; ஏனைய தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு ஏன் இல்லை என்ற கேள்விக்கு, தேர்தல் ஆணையத்துக்கு வெளியே ஒரு காரணம் பேசப்படுகிறது. இந்தத் தொகுதிகளிலெல்லாம் தேர்தல் அறிவிப்பு வெளியிடத் தடையாக வழக்குகள் இருக்கின்றன அல்லது நீதிமன்றம் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பது அவற்றில் ஒன்று. இத்தகைய பதில்கள் தொழில்நுட்பக் காரணங்களாக இருக்கலாமே தவிர, நியாயமான காரணங்களாக நீடிக்கவே முடியாது.
ஐந்து மாநிலச் சட்ட மன்றத் தேர்தல்களுடன் சேர்த்து திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்ட மன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும் என்று கருதப்பட்ட நிலையில், தமிழகத்தில் கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டதைக் காரணம் காட்டித் தேர்தலைத் தள்ளிவைக்குமாறு தேர்தல் ஆணையத்தைத் தமிழக அரசு கேட்டுக்கொண்டதும், தேர்தல் ஆணையமும் ஒப்புக்கொண்டதுமே கடுமையான விமர்சனங்களை உண்டாக்கின. அடுத்து, 18 சட்ட மன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு வேறு வந்துவிட்ட நிலையில், இப்போதும் திருவாரூர் தொகுதிக்கு மட்டுமே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது தேர்தல் ஆணையம் அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு உட்பட்டுச் செயல்படுகிறதோ என்ற ஆழமான சந்தேகத்தை மக்களிடம் எழுப்பியிருக்கிறது. ஏனென்றால், 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டால், மிக மெல்லிய பெரும்பான்மை இழையில் ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் இன்றைய அதிமுக அரசின் தலைவிதியுடன் சம்பந்தப்பட்டதாக அது அமையும். உள்ளாட்சித் தேர்தலையே தள்ளிப்போட்டுக்கொண்டிருக்கும் அதிமுக, இப்படியொரு நெருக்கடியான இடைத்தேர்தலை விரும்பும் என்று நம்புவதற்கு ஒரு நியாயமும் இல்லை. அதற்கேற்பவே தேர்தல் ஆணையத்தின் இப்போதைய அறிவிப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது ஒதுக்க முடியாததாக இருக்கிறது.
அரசியல் சூழலைத் தாண்டி, பிரதானமாக நாம் கவனம் அளிக்க வேண்டிய விஷயம் ஒன்றும் இதில் இருக்கிறது. அது, மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் ஒரு தொகுதி நீண்ட காலத்துக்கு இருக்கக் கூடாது என்பதாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி ஆறு மாதங்களுக்கு மேல் பிரதிநிதி இல்லாமல் ஒரு தொகுதி இருக்கக் கூடாது. இது அதிகபட்சக் கால அளவு. இதற்குத் தடையாக நீதிமன்ற வழக்குகள் இருக்கும் என்றால், அப்படி நீளக் கூடாத வகையில் சிறப்புத் நேர்வாக அவற்றை விசாரிக்கும் முறைமையை நாம் நீதித் துறையில் உண்டாக்க வேண்டும். ஜனநாயகத்தில் மக்களை ஆட்சியதிகாரத்தோடு தேர்தல்களே பிணைக்கின்றன. தேர்தல்கள் மீதோ, தேர்தல் ஆணையத்தின் மீதோ மக்கள் நம்பிக்கை இழப்பது ஜனநாயகத்துக்குக் கேடு விளைவிக்கும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT