Published : 06 Dec 2018 09:02 AM
Last Updated : 06 Dec 2018 09:02 AM

காலத்தைப் பின்னோக்கி இழுக்கும் குண்டர்களை ஒடுக்குங்கள்

உத்தர பிரதேசத்தின் எதிர்க்கட்சிகள் சொல்வதுபோல, அந்த மாநிலம் காட்டாட்சி யுகத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ‘பசுவைக் காக்கிறோம்’ என்ற போர்வையில், பசுகுண்டர்கள் நிகழ்த்திவரும் தொடர் வன்செயல்கள் எவ்வளவு தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்துவருகின்றன என்பதற்குக் காவல் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் படுகொலை உதாரணம் ஆகியிருக்கிறது.

புலந்த்ஷஹர் மாவட்டத்தின் சியானா கிராமத்தில் திட்டமிட்ட வன்முறை திங்கள்கிழமை அரங்கேறியுள்ளது. கிராமத்தில் வயலில் பசுக்களின் உடல் பாகங்கள் கிடப்பதாகக் காவல் நிலையத்தில் ஒருவர் புகார் அளித்திருக்கிறார். காவல் அதிகாரிகள் அந்தப் புகாரை ஏற்று, சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றுள்ளனர். அதற்குள் இந்த விஷயம் அந்தப் பகுதி முழுவதும் பரப்பப்பட்டு, சுமார் 500 பேர் காவல் நிலையம் எதிரில் கூடுகின்றனர். போலீஸாரின் வேண்டுகோளைப் புறக்கணித்துவிட்டு, காவல் நிலையம் மீது கற்களை வீசுகின்றனர். காவல் துறையினரின் வாகனங்களும் சேதப்படுத்தப்படுகின்றன. வன்செயலில் ஈடுபடும் கும்பலைக் கலைக்கவும் தற்காப்புக்காகவும் காவல் துறையினர் துப்பாக்கியால் சுடுகின்றனர். உடனடியாக, போலீஸாரை எதிர்த்து துப்பாக்கியால் சுட்டனர் வன்முறையாளர்கள்.

இந்த வன்முறையில் கொல்லப்பட்ட ஆய்வாளர் சுபோத் குமார் சிங், முன்னதாக 2015-ல் தாத்ரியில் பசுகுண்டர்களால் கொல்லப்பட்ட முகம்மது அக்லக் வழக்கை முதலில் விசாரித்தவர் என்ற பின்னணியில் இந்தக் கொலை தற்செயலானதாகத் தோன்றவில்லை. மேலும், வன்முறையில் ஈடுபட்ட இந்துத்துவ அமைப்புகள் மீது வழக்குகள் பதிவுசெய்யும்போதே பசு இறைச்சி வைத்திருந்ததாகச் சிறுபான்மையினர் மீது வழக்குகள் பதிவுசெய்வதையும் பாஜக அரசுகள் ஒரு மரபாகக் கடைப்பிடிப்பதும் முறையான அணுகுமுறை அல்ல. இந்தச் சம்பவத்திலும் அதுவே நடந்திருக்கிறது. வன்முறை தொடர்பாக பஜ்ரங் தள உறுப்பினர்கள் சிலர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்ட அதே நேரத்தில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் மீதும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவர்களில் இருவர் சிறுவர்கள்!

வன்கும்பல்கள் எங்கே தலையெடுக்கின்றனவோ அங்கே மக்களுக்கான அரசாங்கம் தோற்றுவிடுகிறது. காவல் நிலையத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டு, காவல் அதிகாரி ஒருவரையும் வன்முறையாளர்கள் கொன்றிருக்கும் சூழலிலும், முதல்வர் யோகி ஆதித்யநாத்திடமிருந்து ஆக்கபூர்வமான வார்த்தைகள் வெளிவரவில்லை என்பது மிக மோசம். “அமைதியை நிலைநாட்டுவோம், காயம் அடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிப்போம், உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிதியுதவி அளிப்போம்” என்றெல்லாம் கூறிய முதல்வர், இப்படியான வன்செயலை, காவல் நிலையத்தின் மீதும், காவல் அதிகாரி மீதும் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து உருப்படியாக எதையும் பேசவில்லை. கும்பல் சூழல் உருவாக்கிவரும் சமூகப் பிளவையும் அவர் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை. வன்கும்பல்கள் மெல்ல காலத்தைப் பின்னோக்கி இழுக்கின்றன. கும்பல்களை ஒடுக்காத ஓர் அரசு கும்பல்களோடு சேர்ந்து அதுவும் பின்னிழுக்கப்படும்; காலாவதியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x