Published : 18 Dec 2018 08:33 AM
Last Updated : 18 Dec 2018 08:33 AM

வளைகுடா நாடுகளிடையே நல்லிணக்கம் வேண்டும்!

வளைகுடா நாடுகளுக்கு இடையில் அரசியல்ரீதியில் இடைவெளி பெரிதாகிக் கொண்டிருப்பது உலக அமைதிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தலையே உணர்த்துகிறது. பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்வதாகக் குற்றம்சாட்டி கத்தார் நாட்டின் மீது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு சிற்றரசு, பஹ்ரைன் ஆகிய நாடுகள் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை 2017 ஜூனில் எடுத்தன. அந்தச் சிக்கல் இன்னும் தீரவில்லை.

டிசம்பர் 9-ல் ரியாத்தில் நடந்த வளைகுடா ஒப்பந்த கவுன்சில் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டோம் என்று கத்தார் நாட்டின் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி அறிவித்தார். தங்கள் நாட்டின் மீதான தடைகளை விலக்கிக்கொண்டால்தான் சமரசப் பேச்சுக்கே வருவேன் என்றும் நிபந்தனை விதித்தார். ‘எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி நாடுகள் (ஒபெக்) அமைப்பிலிருந்து’ வெளியேறப் போவதாகவும் அறிவித்தார். கத்தார், நிலவாயுவை (எல்என்ஜி) ஏற்றுமதி செய்வதில் உலகிலேயே முதலிடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தார் மீதான தடையானது வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் உள்ள பிற நாடுகளிடையேயும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுதி விதித்த தடையால் கத்தார் தனது வெளியுறவுக் கொள்கையில் விருப்பம்போல மேலும் சுதந்திரமாகச் செயல்படுகிறது. இஸ்ரேல் நாட்டின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் இயக்கத்துக்குச் செய்யும் உதவியை அதிகப்படுத்தியிருக்கிறது. தனது நாட்டில் துருக்கி ராணுவத் தளம் அமைக்கும் முடிவை விரைவாக அமல்படுத்திவருகிறது. ஈரானுடனான தொடர்பை விட்டுவிட வேண்டும் என்ற சக வளைகுடா நாடுகளின் அறிவுரையையும் ஏற்க மறுத்துவிட்டது. ஒபெக் அமைப்பிலிருந்து வெளியேற எடுத்துள்ள முடிவும், வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் கூட்டத்துக்கு கத்தார் மன்னர் வராமல் இருந்ததும் அந்நாட்டுக்குத் தன்னம்பிக்கை அதிகரித்துவிட்டதையே காட்டுகிறது.

வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் உச்சிமாநாடு திட்டமிட்டபடி நடந்தது. அதற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கை வளைகுடா நாடுகள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார சவால்கள், பிராந்தியத்தில் ஏற்பட வேண்டிய அரசியல் ஸ்திரத்தன்மை குறித்து சம்பிரதாயமாகக் குறிப்பிட்டிருக்கிறது. கத்தார் பங்கேற்காததை வளைகுடா கவுன்சில் கூட்டத்தில் பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் காலித் பின் அகமது அல் கலீஃபா விமர்சித்தார். ‘எங்கள் மீதான தடையை நீக்குங்கள் என்று கோரினோம்.. அதைச் செய்யாமல் ஒற்றுமை பற்றிப் பேசிப் பயன் என்ன?’ என்று கத்தார் பதிலுக்கு விளாசியது.

இப்படி வளைகுடா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் பூசல், அந்தப் பிரதேசத்தில் ஒருமைப்பாடு நிலவும் என்ற நம்பிக்கையை வலுவிழக்கச் செய்வதாக அமைந்துவிட்டது. வளைகுடா நாடுகள் அனைத்துக்கும் பொதுவான செலாவணி, நாடுகளைப் போக்குவரத்தாலும் தகவல்-தொடர்பு சாதனங்களாலும் இணைக்கும் வசதி என்ற லட்சியங்கள் அனைத்தும் வெறும் கனவாகிவிட்டன என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x