Published : 06 Nov 2018 08:38 AM
Last Updated : 06 Nov 2018 08:38 AM
உத்தர பிரதேசம் ஹாஷிம்புராவில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 38 பேரை அம்மாநில ஆயுதப்படை போலீஸ் (பிஏசி) படுகொலை செய்த வழக்கில் 31 ஆண்டுகளுக்குப் பின்னர் நீதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் படுகொலையில் ஈடுபட்ட 16 காவலர்கள் தங்களுடைய எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் சிறையிலேயே கழிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
1987 மே 22-ல் மீரட் நகருக்கு அருகில் நடந்த வகுப்புக் கலவரத்தில் ஒரு ராணுவ அதிகாரியின் சகோதரர் கொல்லப்பட்டார். அத்துடன் பிஏசி படையினரின் இரண்டு ரைஃபிள்களைக் கலவரக்காரர்கள் பறித்துச் சென்றனர். அன்றிரவு ஹாஷிம்புரா கிராமம் உட்பட பல பகுதிகளுக்கு லாரிகளில் சென்ற பிஏசி வீரர்கள் ஹாஷிம்புரா கிராமத்திலிருந்து 45 பேரை லாரியில் ஏற்றிச் சென்றனர். அவர்களைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அருகிலிருந்த இரண்டு கால்வாய்களில் வீசியெறிந்தனர். பிஏசியின் 41-வது பட்டாலியனின் தளபதி சுரேந்தர் பால் சிங் தலைமையில் இந்தப் படுகொலைகள் நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. அச்சம்பவத்தில் 38 பேர் இறந்ததாகக் கூறப்பட்டாலும் 22 பேரின் சடலங்கள் கிடைக்கவில்லை. ஐந்து பேர் குண்டு காயங்களுடன் உயிர் பிழைத்தனர். அவர்களுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில், பிஏசி படையின் 19 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு நடைபெற்றுவந்தபோதே சுரேந்தர் பால் சிங் உட்பட குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேர் இறந்தனர். சம்பவத்துக்குப் பயன்பட்ட லாரி எது, அதில் சென்றவர்கள் யார் என்பதை நிரூபிக்க முடியாததால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக 2015-ல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒட்டுமொத்தமாக அனைவரும் விடுவிக்கப்பட்டது நீதி வழங்கலுக்கே கரும்புள்ளியாகக் கருதப்பட்டது.
இந்த நிலையில், மேல் முறையீட்டை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் பிஏசியின் பதிவேடுகளைப் பெற்று, சம்பவம் நடந்த அன்று அதன் படைப்பிரிவுகள் எங்கே சென்றன, எந்தெந்த வாகனங்கள் எந்தப் பணிக்குப் பயன்படுத்தப்பட்டன என்ற குறிப்புகளை ஆய்வுசெய்தது. அதன் அடிப்படையிலேயே எதிரிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது. குற்றம் செய்தது போலீஸ் படையே ஆனாலும் தவறுக்கு தண்டனை உண்டு என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கை வேண்டுமென்றே இழுத்தடித்ததையும், ஆவணங்கள் காணாமல்போனதையும், குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டதையும் நாடு பார்த்தது. பிறகு அதே வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் காட்டிய அக்கறையால் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஆதாரபூர்வமாகத் தண்டிக்கப்பட்டதை இன்றைக்குப் பார்க்கிறது. முன்பு காவல் துறை நீதித் துறை மீது நம்பிக்கையிழந்தவர்கள், நீதிமன்றத் தீர்ப்பால் நிம்மதி அடைவது திண்ணம். சட்டமும் நியாயமும் நிலைநாட்டப்படுவது உறுதிசெய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட படுபாதகச் செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT