Published : 12 Nov 2018 09:14 AM
Last Updated : 12 Nov 2018 09:14 AM

காய்ச்சலைக் கொள்ளை நோயாக்குவதுதான் அரசு நிர்வாகமா?

தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் இந்தப் பருவத்தில் மட்டும் இதுவரைக்கும் முப்பது உயிர்களைப் பறிகொடுத்திருக்கிறோம். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் காரணமாக 2,800 பேரும் பன்றிக் காய்ச்சலின் காரணமாக 1,700 பேரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகச் சொல்கிறது அதிகாரபூர்வக் கணக்கு. அப்படியென்றால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் காய்ச்சலின் தாக்கமும் எப்படியிருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளலாம். பல ஆண்டுகளாகவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையை ‘மர்மக் காய்ச்சல்’ என்ற பெயரில் மறைக்கும் அசிங்கம் இங்கே நடந்துகொண்டிருக்கிறது. அதையும் தாண்டி, கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு இந்தியாவிலேயே அதிக உயிர்களைப் பறிகொடுத்த மாநிலம் தமிழ்நாடு என்கிறது சுகாதாரத் துறை அறிக்கை. என்ன பாடத்தைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்? ஒரு காய்ச்சலுக்கு கொள்ளைநோய்போல உயிர்களைப் பலி கொடுக்கும் அவலத்துக்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது அதிமுக அரசு?

பருவமழை தொடங்கும் காலத்தில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் அதிகளவில் பரவுகிறது. அதற்கேற்றவாறு முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டியது பொது சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பு. காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக சென்னை உட்பட அனைத்து இடங்களிலும் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறைச் செயலர் அக்டோபர் கடைசி வாரத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து வெளிவரும் செய்திகள் மனம் பதறவைக்கின்றன. சமீபத்திய நிலவரப்படி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மட்டும் 242 குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் 63 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 பேருக்கு மேல் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் எங்கும் சூழல் நிலைமை மோசம் என்பதற்கு இரு சான்றுகள் மாநிலத்தின் இந்த இரு புள்ளிகளும். மக்கள் – குறிப்பாக உடலுழைப்புத் தொழிலாளர்கள் – பெரும் கோபத்தில் இருக்கிறார்கள். காய்ச்சலுக்குப் பின்னரும் பல மாதங்களுக்கு அவர்களுடைய அன்றாட வேலை, வாழ்க்கையைப் பாதிப்புக்குள்ளாக்குவது இது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு எந்த அளவுக்கு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்திருக்கிறது என்று தெரியவில்லை. அமைச்சர்களின் பேச்சுகளில் வெளிப்படும் எண்ணிக்கை விளையாட்டு அக்கறையை வெளிப்படுத்துவதாக இல்லை. “காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு; சீதோஷ்ணம் மாறுபடும்போது ஒரு சதவீதம் பேருக்குக் காய்ச்சல் பரவுவது இயல்புதான்” என்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். “கடந்த ஆண்டைக் காட்டிலும் 90% டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்கிறார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. சதவீதக் கணக்குகளைப் பற்றி பேசுவதற்கு, இது பொருளாதார விவகாரம் அல்ல. மக்களின் உயிர். ஒரு வளர்ந்த மாநிலத்தில் காய்ச்சலுக்கு இவ்வளவு உயிர்களைப் பறிகொடுப்பது வெட்கக்கேடு.

ராஜஸ்தானில் ஜிகா வைரஸ் தாக்குதலையடுத்து, அம்மாநில அரசு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து 330 குழுக்கள் முன்னெடுத்த ‘ஒருங்கிணைந்த கொசு ஒழிப்புத் திட்டம்’ இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியது. அவசரக் காலத்தில் இப்படியான நடவடிக்கைகள் உதவும். தொடர்ந்தும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு காய்ச்சலால் பாதிக்கப்படக் காரணம், குப்பை – கழிவுகள் மேலாண்மையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு. அரசியல் காரணங்களுக்காக உள்ளாட்சித் தேர்தலையே முடக்கிவைத்திருக்கும் இந்த அரசு, உள்ளாட்சிகளின் முக்கியத்துவத்தை எந்த அளவுக்கு உணர்ந்திருக்கிறது என்றே தெரியவில்லை. மருத்துவர்களோடு மட்டும் அல்லாமல், சூழியலாளர்கள், அறிவியலாளர்களையும் ஒருங்கிணைத்து ஒரு தொலைநோக்குச் செயல்திட்டத்துக்கு அரசு திட்டமிட வேண்டும். காய்ச்சலால் இனி ஒரு உயிர் போகக் கூடாது என்ற உறுதியை அரசு ஆத்மார்த்தமாக எடுத்துக்கொண்டு பணிகளைத் தீவிரமாக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x