Published : 15 Nov 2018 08:59 AM
Last Updated : 15 Nov 2018 08:59 AM

நகரங்களின் பெயர் மாற்றம்: நாட்டின் பன்மைத்துவத்துக்கு அச்சுறுத்தல்!

உத்தர பிரதேசத்தின் ஃபைசாபாத் மாவட்டம், இனி ‘அயோத்யா’ மாவட்டம் என்று அழைக்கப்படும் என அறிவித்திருக்கிறார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். அலகாபாத் நகருக்கு ‘பிரயாக் ராஜ்’ என்று பெயர் மாற்றம் செய்ய ஆதித்யநாத் அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இத்தகைய அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். இதற்கிடையே, குஜராத்தின் அகமதாபாதை ‘கர்ணாவதி’ என்று மாற்ற குஜராத் அரசு திட்டமிடுகிறது. நகரங்களின் முஸ்லிம் பெயர்களை நீக்கிவிட்டு, இந்துத்துவக் கொள்கையின் அடிப்படையிலான பெயர்கள் சூட்டப்படும் இந்தப் போக்கு, இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்க மறுக்கும் எண்ணத்தின் வெளிப்பாடு என்பதில் சந்தேகமில்லை.

பிரிட்டிஷ் காலனி ஆட்சியோடு தொடர்புள்ள பெயர்களை நகரங்களிலிருந்தும் சாலைகளிலிருந்தும் மாற்றிய முன்னுதாரணங்கள் உண்டு. நம்மை அடக்கியாண்ட பிரிட்டிஷாரால் சூட்டப்பட்ட பெயர்கள், தேசப்பற்றின் அடிப்படையில் மட்டுமே மாற்றப்பட்டன. காவன்பூர் கான்பூர் என்று மாற்றப்பட்டது ஓர் உதாரணம். நகரங்களின் பெயர்கள் அந்தப் பிராந்திய மக்களின் மொழியைப் பிரதிபலிக்கும் வகையில் திருத்தப்பட்டதும் உண்டு. மதறாஸ் என்பது சென்னை என்றும் பம்பாய் என்பது மும்பை என்றும் மாற்றப்பட்டதைச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். இப்போதும்கூட தமிழ்நாட்டில் காலனிய காலத்தின் எச்சமாக தவறுதலாக உச்சரிக்கப்படும், எழுதப்படும் ஊர்களின் பெயர்களைத் திருத்தும் நடவடிக்கைகள் தொடங்கியிருக்கின்றன. இதன் பின்னணியிலுள்ள நியாயம் புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால், பாஜக அரசுகள் செய்யும் பெயர் மாற்றங்கள் அப்படிப்பட்டவை அல்ல; மத அடிப்படையிலான பார்வைதான் இதன் அடியாழத்தில் இருக்கிறது. இந்நகரங்களின் பெயர்களின் பின்னணியில் இருக்கும் இஸ்லாமியர்களின் தொடர்புகள் பாஜகவினருக்கு உவப்பற்றவையாக இருக்கின்றன. இந்த உணர்வைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதில் பாஜகவினருக்குத் தயக்கம் இல்லை என்பது மேலும் அதிர்ச்சிதருகிறது.

முகலாயர் காலத்திலிருந்தே அலகாபாத் நகரம் நாட்டின் பரந்துபட்ட கலாச்சாரச் சின்னமாக மதிக்கப்படுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டியே தீர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவரும் வேளையில், மாநில அரசின் இந்தப் பெயர் மாற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அயோத்தி பிரச்சினை உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும்போதே, ராமர் கோயில் பிரச்சினையில் மக்களை உசுப்பேற்றும் செயல்கள் உச்சம்பெறுகின்றன. பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மக்களை மத அடிப்படையில் அணிதிரள வைக்க பாஜக திட்டமிட்டுச் செயல்படுகிறதோ என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது. இந்த கலாச்சாரப் போரில், இந்தியா இத்தனை காலமாகக் காப்பாற்றிவந்த பன்மைத்துவமும் அரசியல் சட்டத்தை மதித்து நடக்கும் பண்புகளும் பலியாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. பாஜக அரசுகள் நகரங்களுக்குப் பெயர் மாற்றம் செய்வதை விட்டுவிட்டு, வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். இன்றைக்கு அதுதான் அவசியமான நடவடிக்கை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x