Published : 27 Nov 2018 09:44 AM
Last Updated : 27 Nov 2018 09:44 AM
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், எந்த ஒப்பந்த அடிப்படையில் பிரிட்டன் விலகும் என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. விலகுவது என்ற முடிவுக்கு ஆதரவாக பிரிட்டனில் 2016-ல் ஏற்பட்ட கருத்தொற்றுமை முடிவை அமல்படுத்த முடியுமா என்பதும் நிச்சயமில்லாமல் இருக்கிறது. பிரதமர் தெரசா மே தலைமையிலான அரசே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதற்கும் முன்னால் சந்தித்துவிடும் என்று தோன்றுகிறது.
தெரசாவின் கன்சர்வேடிவ் (டோரி) கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பலர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டனின் எதிர்கால உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதில் வெவ்வேறு கருத்துகளுடன் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிற 27 நாடுகளிடமிருந்து விலகிவிட்டால் எதிர்காலத்தில் அந்த நாடுகளுடனான விவகாரங்களில் கொள்கைகளை வகுப்பதில் தங்களுக்குப் பழைய செல்வாக்கு இருக்காது என்பதை இப்போது அதிகமாக உணரத் தொடங்கியுள்ளனர். இதனாலேயே பிரிட்டிஷ் அமைச்சரவையிலிருந்து கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களே ஒவ்வொருவராகப் பதவி விலகிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், பிரெக்ஸிட் முடிவுக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை வாங்குவது எளிதல்ல.
ஐரோப்பிய நாடுகளை எப்போதும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் கன்சர்வேடிவ் கட்சி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட தெரசா மேவின் விலகல் உத்தியைச் சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர். தெரசா மேவை இன்னமும் ஆதரிக்கும் இதர அமைச்சர்கள்கூட, விலகல் உத்தியில் மாற்றங்கள் அவசியம் என்றே கருதுகின்றனர். வடக்கு அயர்லாந்து, அயர்லாந்து குடியரசு இடையே இணக்கமான எல்லை நிலவ வேண்டும் என்று கருதுவோர்கூட தெரசா மே மேற்கொள்ள விரும்பும் ஏற்பாடுகள், ஐரோப்பிய நாடுகளிடம் பேரம்பேசி சாதகமாக வர்த்தக உடன்பாடுகளைச் செய்துகொள்ளப் போதாது என்று கருதுகின்றனர்.
கன்சர்வேடிவ் கட்சியில் தலைமைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கே விரைவில் பொதுத் தேர்தல் வரக்கூடும். தேர்தலில் தெரசா மே தோற்றால், இந்தக் குழப்பம் மேலும் அதிகமாகிவிடும். பிரிட்டனை விலகியதாகவும் கருத முடியாமல் விலகாமல் தொடர்வதாகவும் அணுக முடியாமல் ஐரோப்பிய ஒன்றியத்துக்குக் குழப்பம் ஏற்படும். அப்படியொரு குழப்ப நிலை வராமல் தடுப்பது இரு தரப்புக்குமே நல்லது என்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் தெரியும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மார்ச் 29-ல் விலகுவது என்ற முடிவைத் தள்ளிவைப்பதே சிறந்தது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகள் விரும்பும். ஆனால், அந்தக் கோரிக்கை பிரிட்டனிடமிருந்து வர வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகலாமா என்று மீண்டும் ஒரு முறை பிரிட்டிஷ் மக்களிடம் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்தை முன்னாள் பிரதமர் ஜான் மேஜர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். பிரிட்டன் இன்னொரு வாக்கெடுப்பை நோக்கிச் சென்றாலும் வியப்பதற்கு ஏதுமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT